278 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12 |
“சென்றுயர் வலம்புரி செம் பொற்றாமரை என்றியல் பெயரின இரண்டு மாநிதி ஒன்றல் மணிகளும் ஒண்பொருள் மாழையும் நின்றிவை சொரிந்தொளி நிதற்று கின்றவே” (சூளாமணி - அரசியல், 373) “தேவர்கள், திசைமுகங் காப்ப மாநிதி ஓவல இரண்டு நின்று ஒருங்குவீழ்தர மேவிய அருங்கலம் விளங்க நோக்கிய காவலன் செல்வநீர்க் கடலுள் மூழ்கினான்” (சூளாமணி - அரசியல் 423) “தேங்கமழ் தெய்வச் செம்பொற்றாமரை சுரிவெண் சங்கம் நீங்கியவை நெறிகளாக ஏழரதனங்கள் எய்தி ஆங்கமர் செல்வந் தம்மால் அற்றைக்கன்றமர்ந்த மாதோ ஓங்கினன் உருவத்தாலும் வில்ஒன்ப துயர்ந்த தோளான்” (சூளாமணி சுயம்வரம் 4) இவ்வாறு சங்கநிதி பதுமநிதிகளைக் கற்பனை செய்த காவியப் புலவர்கள் அம்மட்டும் நின்றுவிடவில்லை. இந்த நிதிகள் உயிரற்ற வெறும் சடப்பொருள்கள் தானே. இந்த நிதிகளுக்கு அதிபதியாகத் தெய்வங்களைக் கற்பித்தார்கள். சங்கநிதிக்கும் பதும நிதிக்கும் தலைவர்களாக இரண்டு பூதங்களை (தெய்வங்களைக்) கற்பித்தார்கள். அந்தப் பூதங்களைக் குறள் உருவமாகவும் குடம் போன்ற வயிறும் குறுகிய கைகால்களும் உடையனவாகவும் கற்பித்தனர். மேலும் இரண்டு நிதிகளுக்கும் பெருத்தலைவனாக குபேரன் என்னும் தெய்வத்தையும் கற்பித்தார்கள். குபேரன் என்றால் அழகில்லாதவன் என்பது பொருள். பேரம் என்றால் உருவம் என்பது பொருள். குபேரன் என்றால் விகாரமான உருவமுடையவன் என்பது பொருள். குபேரனை நிதியின் கிழவன் என்றும் வைசிரவணன் என்றும் கூறுவார்கள். பௌத்த மதத்தார் குபேரனை ஜம்பாலி என்று கூறுவர். ஜம்பாலியின் கையில் கீரிப்பிள்ளையின் தோலினால் செய்யப்பட்ட பணப்பை உண்டு. நிதியின் கிழவனைக் குள்ளமாகவும் குறுகின கைகால்களை யுடையவனாகவும் கற்பித்துக் குபேரனாக்கிய புலவர்கள், அவன் |