பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 115

விளக்கம் : இந்தக் கோவிலின் முன்மண்டபத்தை, மாவை பாலகிருட்டினன் சொக்கநாத இலக்கயன் என்பவர் கட்டியதை இச் செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

திசைவாச ரம்மன் குறிச்சியில்வாழ் சொக்கர் செம்பொன்முடி
அசைவாக மெச்சிட விசுவ கன்மாவு மதிசயிப்ப
விசைவாடை வீச மணிமண்டபங் கட்டி வீறுபெற்றான்
இசைமாவை வால கிட்டணன் சொக்கநாம இலக்கயனே.

இளங்கோமான் வாணன்

இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. இம்மலையில் தம்பிக்கிணற்றுக்குப் போகும் வழியில் ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள செய்யுள்.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 676 (No. 676. I. P.S.)

விளக்கம் : வாணன் தம்பி, வடுகரைப் போரில் வென்றதைக் கூறுகிறது இச்செய்யுள். இதற்கு மேலே பதினாறு வரிகளில் வேறு செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எழுத்துக்கள் பெரிதும் அழிந்து விட்டபடியால் அச்செய்யுளை இங்குத் தரவில்லை.

சாசனச் செய்யுள்

மன்னாடு பூங்கழலான் வாணற் கிளங்கோமா
னன்னாள் வடுகெறிந்த ஆர்வத்தால் - இன்ன
மறங்கால் வேலண்ணல் வரும்வரு மென்றேங்கி
உறங்கா வடவேந்த ரூர்.

சோளி வீரராயன்

இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. சிகாமணிநாத சுவாமி கோவில் இரண்டாங்கோபுரவாயிலின் இடதுபுறம் உள்ள சாசனம்.