பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 121

பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 105. (T. A. S. Vol. I. Page. 105)

விளக்கம் : நெல்வேலி மாறன் என்னும் வீரவேற் குல சேகர பாண்டியன் முடிசூடியதையும், அவன்மேல் வீர வெண்பாமாலை பாடப்பட்டதையும் இச்செய்யுள்கள் கூறுகின்றன. சக ஆண்டு 1474 இல் (கி.பி. 1552-இல்) இவன் முடிசூடினான்.

சாசனச் செய்யுள்

ஏறிய சகாத்த மாயிரத்து நானூற்றெழுபதின்
     னாலில் வரிழ்சம் பரிதாபிதனில் மாதம்
தேறிய சித்திரை யிருபத் தொன்பதாகுந் தேதி
     யிரண்டாம் பகந் திங்க ளுரோகணிநாள்
வீறுயர்ந்த மிதுனத்து நெல்வேலி மாறன்
     வீரவேள் குலசேகரச் செழியனென்று சுர
ராறுபுனை யகிலேசர் காசியிலே விளங்கவணி
     மவுலி தரித்தனன் பரராசர் பணிந்தனரே.    1

ஏடியல் மாலையணிந் தாலும் வாடு மெனப்புலவோர்
பாடியவீரவெண்பா மாலையைப் பொன்னின் பாண்டியன்போர்
தேடிய வேற்செழியன் குல சேகரத் தென்னனைப்போற்
சூடிய வேந்தருண்டோ வொரு வேந்தரைச் சொல்லுகிலே.    2

நன்றாக.

குறிப்பு :- செய்யுள் 1. வரிழ்சம் என்பது வருஷம் என்றிருக்க வேண்டும். வீர வெண்பாமாலையைப் பாடிய புலவர் பெயர் தெரிய வில்லை. அந்நூல் இப்போது இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

குலசேகர பாண்டியன்

இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன் மண்டபத்தின் வடப்புறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 103. (T. A. S. Vol. I. Page. 103)