184 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
திங்கட் கிழமை என்று தெரிகிறது. இந்தக் குறிப்புப்படி கணித்தால் கி.பி. 874 ஆம் ஆண்டு நவம்பர் 22க்கும் பொருந்துகிறது. அண்ட நாட்டு வேளான், இரண்டாம் வரகுண பாண்டியனின் காலத்தில் இருந்தவன் ஆகையால், இந்தச் சாசனம் கி.பி. 874 ஆம் ஆண்டில் எழுதப் பட்டதாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் சப்தரிஷீசுவரர் கோயில் சாசனங்களில் ஒன்று, கோமாறஞ் சடையனான வரகுண பாண்டியனின் சாசனமாகும். இந்த சாசனத்தில் இந்தப் பாண்டியன் இந்தக் கோயிலுக்கு இரண்டு நந்தா விளக்கு எரிக்க 120 பொன் (பழங்காசு) தானஞ் செய்ததைக் கூறுகிறது. லால்குடி என்பது, கர்நாடக நவாபு காலத்தில் (பிற்காலத்தில்) உண்டான பெயர். லால்குடி என்பதற்குச் சிவந்த நிறக் கோயில் என்பது பொருள். இவ்வூரின் பழையப் பெயர் திருவத்துறை என்பது. திருவத்துறைக் கோயிலை வடமொழியாளர் சப்தரிஷீசுவரர் கோயில் என்பர். இந்தச் சாசனத்தின் பகுதி இது: “கோமாறஞ் சடையற்கு யாண்டு 4-ஆவதின் எதிர் 9-ஆம் ஆண்டு தனு ஞாயிற்றுச் செவ்வாய்க் கிழமை பெற்ற சதயத்து நாள் இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறை மகாதேவர்க்கு இரவும் பகலும் சந்திராதித்தல் இரண்டு நொந்தாத் திருவிளக்கு எரிப்பதாக கோமாறஞ் சடையனாயின பாண்டிய குலபதி வரகுண மகாராயர் அண்ட நாட்டு வேளாண் கையில் கொடுத்த பழங்காசு 120”. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள எறிச்சாவுடையார் கோயிலிலும், பாண்டியன் வரகுண மகாராசன் கட்டளைகள் அமைத்தான். இச்செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகிறது. எறிச்சாவுடையார் கோயிலுக்கு அக்காலத்தில் வழங்கின பெயர் திருப்போத்துடையார் கோயில் என்பது. |