பக்கம் எண் :

186மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

பசுவின் நெய் : “கறி துமிக்கவும் பொரிக்கவும் பசுவின் நறுநெய் ஆழாக்கு”.

காயம் : “இரு செவிடு”

இலையமுது : (வெற்றிலை) “வெள்ளிலை ஈரடுக்கு”

அடைக்காய் : (பாக்கு) பத்து.

சர்க்கரை : நாற்பலம் (கும்மாயத்துக்கு)

“இப்பரிசு நியதிப்படி முட்டாமை நெடுங் காலமுஞ் செலுத்து வதாக வைத்தார் ஸ்ரீவரகுண மகாராசர்” என்று முடிக்கிறது இந்த சாசனம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருக்கோடிக் காவல் திருக்கோடீசுவரர் கோவிலுக்கும் வரகுண மகாராசர் 180 கழஞ்சு பொன் தானம் செய்திருக்கிறார். இந்தப் பொன்னின் வட்டியைக் கொண்டு மூன்று ‘நொந்தா விளக்கு’ எரிப்பதற்கு இவர் கட்டளை அமைத்தார். இந்தக் கோயில் சரசுவதி கணபதி ஆகிய இரண்டு தெய்வங்களுக்கு விளக்கெரிக்க வேண்டுமென்பது கட்டளை.

“திருக்கோடிக்காவில் ஸ்ரீசரஸ்வதி கணபதிகளுக்கு
     மூன்று நொந்தா விளக்கெரிப்பதற்கு
வரகுண மகாராசர் கொடுத்த பின்
     நாற்றெண்பதின் கழஞ்சு”.

என்று கூறுகிறது இந்த சாசன வாசகம்.

சம்பந்த சுவாமிகள் காலத்தில் கணபதி ஈச்சரம் என்னும் கோயில் இருந்தமை, தேவாரத்தினால் தெரிகின்றது. கலை மகளுக்கும், விநாயகருக்கும் கோயில் இருந்த செய்தி, கல்வெட்டுக்களில் முதல் முதலில் காணப்படுவது இந்தக் கல்வெட்டிலேதான். *