பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்167

“பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின்
ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத்
துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின்
இம்மை யில்லை மறுமை யில்லை
நன்மை யில்லைத் தீமை யில்லைச்
செய்வோ ரில்லைச் செய்பொரு ளில்லை
யறிவோர் யாரஃ திறுவழி யிறுகென.”

முதுமொழிக் காஞ்சி, இரும்பல் காஞ்சி என்னும் நூல்களைப் போன்று இந்த மார்க்கண்டேயனார் காஞ்சியும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளைக் கூறுகிற நூல் என்று கருதப்படுகிறது.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

63. மாறவர்மன் பிள்ளைக்கவி

மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் அரண்மனைப் புலவர்கள் கொடிகொண்டான் பெரியான் ஆதிச்சதேவன், காரணை விழுப்பரையன் என்பவர்கள். இவர்களில் கொடிகொண்டான் பெரியான் ஆதிச்ச தேவர் இவ்வரசன்மேல் பிள்ளைக் கவியொன்று பாடினார். இச்செய்தியை, இராமநாதபுர மாவட்டம், திருப்புத்தூர் தாலுகா பெரிச்சிகோவில் என்னும் ஊரில் உள்ள சுகந்தவனேசுவரர் கோவிலில் உள்ள சாசனம் கூறுகிறது.13 இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

64. முப்பேட்டுச் செய்யுள்

இப்பெயருள்ள நூலையும், இந்நூலிலிருந்து மூன்று செய்யுளையும் யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப் பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர உரையில் இவ்வுரை யாசிரியர் எழுதுவது பின்வருவது :

“கல்வினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவர்
கொல்லையிற் களிறேறி வெற்பே யாதே
கொல்லையுட் களிறேறி வெற்பனிவ் வியனாட்டார்
பல்புகழ் வானவன் றாளே யாதே
பல்புகழ் வானவன் றாளொடுசார் மன்னர்க்கோர்
நல்ல படாஅ பறையே யாதே”

எனவும்,