194 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, முதல் அடியாகிய “தெய்வமால் வரைத் திருமுனி” என்பதற்கு உரை எழுதுகிற அடியார்க்கு நல்லார் பின்வரும் செய்யுளை மேற்கோள் காட்டி’ இச்செய்யுள் நூன்முகத்துள் உள்ளது என்று கூறுகிறார். நூன்முகம் என்பது, நூல் என்னும் இசைத்தமிழ் நூலின் பாயிரம் என்பது தெளிவு. அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுகிற இச்செய்யுளையே அரும்பத உரையாசிரியரும் மேற்படி உரையில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர் இந்த மேற்கோள் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூற வில்லை; அடியார்க்கு நல்லார்மட்டும் கூறியுள்ளார். இவர்கள் மேற்கோள் காட்டுகிற நூன்முகச் செய்யுள் இது: “திருந்திய பொதியி லருந்திற லகத்தியன் சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை மாணா விறலோய் வேணு வாகென விட்ட சாபம் பட்ட சயந்தன் சாபவிடை யெமக்கரு டவத்தோ யென்று மேவினன் றொழுது மேதக வுரைப்ப வருந்தவ மாமுனி தமிழ்க்கூத் தியர்க்குத் திருந்திய தலைக்கோற் றானந் தீருமென் றவளினி துரைப்ப வாகிவந் தனனென்.” இச்செய்யுள் நூல் என்னும் இசைத்தமிழ் நூலின் பாயிரம் என்று துணியலாம். இந்நூலை இயற்றியவர் பெயர், அவர் இருந்த காலம் முதலியவை தெரியவில்லை. 15. பரதம் இந்த நாடகத்தமிழ் நூல் தமது காலத்திற்கு முன்னரே மறைந்து போனதாக அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “நாடத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என்று அவர் எழுதுகிறார். இதனால், இது மிகப் பழைய நூல் என்று தெரிகிறது. |