பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு227

சிவசுப்பிரமணியக் கவிராயர்

19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இருந்தவர், திருநெல் வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகா கல்லிடைக்குறிச்சி இவருடைய ஊர். சாமிநாதம் என்னும் இலக்கண நூலையும், பொதிகைநிகண்டு என்னும் நிகண்டு நூலையும் இயற்றிய சாமிநாத கவிராயரின் மகனார் இவர். இவர் பூவைப் புராணம் என்னும் புராணத்தை இயற்றி அதனைக் கொல்லம் ஆண்டு 985-இல் (கி.பி. 1810-இல்) அரங்கேற்றினார்.

சின்னைய செட்டியார்

வீர. லெ. சின்னைய செட்டியார் தேவகோட்டையில் பிறந்தவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வன்றொண்டச் செட்டியார் என்னும் நாராயணச் செட்டியார் முதலியவர்களிடத்தில் தமிழ் பயின்றார். இவர் இயற்றிய நூல்கள் திருவொற்றியூர்ப் புராணம், குன்றக்குடிப் பிள்ளைத் தமிழ். நகரத்தார் வரலாறு. பிரபஞ்ச பந்தகம், தேவைத் திரிபந்தாதி. தேவைத் திரிபந்தாதியை இவரிடம்
ரா. இராகவையங்கார் பாடங்கேட்டார்.

சுப்பிரமணிய ஐயர்

தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் என்பது இவர் பெயர். இவர் இயற்றிய நூல்கள்: காளையார் கோயிற் புராண வசனம், 1897: காளையார் கோயிற் புராணம், 1899: கோட்டூர்ப் புராணம், 1898, பருவகாலங்களின் வருணனையைப் பழைய நூல்களிலிருந்து தொகுத்துப் ‘பருவகால வருணனை’ என்னும் பெயருடன் 1904-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார்.

சுப்பிரமணிய பண்டிதர்

ஆயுர்வேத பாஸ்கரர் சுப்பிரமணிய பண்டிதர் என்பது இவரது பெயர். சிதம்பரம் தளவரிசை முத்தைய ஞானியாரின் மகனார். வைத்தியம் பயின்றவர், தைலவருக்கச் சுருக்கம் என்னும் நூலுக்கு உரை எழுதி 1868-ஆம் ஆண்டில் அச்சிட்டார். ஜீவரக்ஷாமிர்தம் என்னும் நூலை 1864- இல் மொழி பெயர்த்து எழுதி அச்சிட்டார் பதார்த்தகுண சிந்தாமணி என்னும் பழைய நூலை 1867-இல் அச்சிட்டார்.