பக்கம் எண் :

228மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

இவர் அச்சிட்ட தைலவருக்கச் சுருக்க உரைப்பதிப்புக்கு. உரையாசிரியராகிய காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார். மேற்படி நூலுக்குச் சாற்றுகவி வழங்கிய வர்கள் - கௌர்ன்மெண்டு யூனிவர்ஸிட்டி பாடசாலைத் தமிழ்த் தலை மைப் புலமை நடாத்திய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், வித்து வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மாணாக்கர் அஷ்டாவதனம் சபாபதி முதலியார், பச்சையப்ப முதலியார் தலைமைக் கல்விச்சாலைத் தலைமைப் பண்டிதர் ஆ. சுப்பராய பிள்ளை, சென்னைக் கவர்ன் மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் சோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, காஞ்சிபுரம் சபாபதி முதலியார் மாணாக்கர் மயிலை மா. சுப்பராய முதலியார், சுப்பிரமணிய பண்டிதர் மாணாக்கர் ஆ.செ. வெங்கடசால முதலியார். எனவே இவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவராவார்கள்.

சுப்பிரமணிய பிள்ளை

யாழ்ப்பாணத்து மானிப்பாய் இவர் ஊர். பதார்த்த விஞ்ஞானம் (மெடீரியா மெடிகா அகராதி, யாழ்ப்பாணம் 1887), பாலவைத்தியம் (யாழ்ப்பாணம் 1889), பிரசவ வைத்தியம் (யாழ்ப்பாணம் 1892) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

செய்யப்ப முதலியார்

சொர்க்கபுரம் இராமலிங்கத் தம்பிரானிடம் தமிழ் பயின்றார். சென்னை செய்ன்ட்மேரி கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். வெற்றிக்கொடியோன் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். தமிழ் வித்தியார்த்தி விளக்கம் என்னும் நூலை 1894-ஆம் ஆண்டில் எழுதி அச்சிட்டார்.

சொக்கலிங்க சிவப்பிரகாசர்

சிதம்பரம் இவரூர். விருத்தாசலம் முத்தையா சுவாமிகளிடம் கல்வி பயின்றார். துறையூர் வீரசைவ ஆதீனத்தின் 20-ஆவது தலைவராக அமர்ந்து, சொக்கலிங்க சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் என்னும் பெயர் பூண்டார். பெரியநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை 1889-இல் இயற்றினார். குமாரதேவர் அபிடேகமாலை திரிபதார்த்த உண்மை, உபதேச விளக்கம் என்னும் நூல்களையும் இயற்றினார். குமாரதேவர் இயற்றிய சுத்தசாதகம் என்னும் நூலுக்கு உரை எழுதினார்.