பக்கம் எண் :

198மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

பாவையிருந்த கொல்லிமலையையும் கொல்லிக்கூற்றம் என்னும் நாட்டினையும் வென்று அந்நாட்டைச் சேரனுக்குக் கொடுத்த செய்தியைக் கல்லாடனார் கூறுகிறார்.

‘செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்யா நல்லிசை நிறுத்த வல்லில்
ஓரிக் கொன்று சேரவர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
நிலைபெறு கடவு ளாக்கிய
பலர்புகழ் பாவை’

- (அகம்-200: 11-17)

இதில், காரி, ஓரியினுடைய கொல்லிநாட்டை வென்று சேரலனுக்குக் கொடுத்தான் என்று கூறுகிறார். இந்தச் சேரலன், (களங்காய்க் கண்ணியார் முடிச்சேரலினுடையவும் சேரன் செங்குட்டுவனுடையவும் தந்தையாகிய) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் சேரநாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட பொறையன் என்னும் அரசன் ஆவன். எனவே இதுவும் கல்லாடனார் காலத்துக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்.

எனவே இந்நிகழ்ச்சிகள் கல்லாடனார் இருந்த காலத்துக்குச் சற்று முன்பு நிகழ்ந்தவையாம்.

இப்புலவர், தமிழ் நாட்டின் வடக்கே எல்லைப்புற நாடாக இருந்த பாணன் நன்னாட்டைக் கூறுகிறார் (அகம்-113: 17). பாணன் நாடு என்பது வாணாதியரையர் ஆண்ட நாடு, இந்நாட்டுக்கப்பால் வடுகநாடு இருந்தது. அஃதை என்பவனுக்குரியதும் கோசர் இருந்ததுமான ‘நெய்தலுஞ்செறு’ என்னும் ஊரைக் கூறுகிறார் (அகம். 113:3-6). இந்த ‘நெய்தலஞ்செறு’ துருநாட்டில் கடற்கரையோரமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொண்டையோர் வாழ்ந்த தொண்டை நாட்டைக் கூறுகிறார் (குறும். 260:5-6). வேங்கடமலையைத் திருமாலுக்கு ஒப்பிடுகிறார். விண்டுவனைய விண்தோய் பிறங்கல்’(புறம் 391:2). எனவே இவர் காலத்திலே வேங்கடமலையிலே விண்டு (விஷ்ணு-திருமால்) கோயில் கொண்டு இருந்தார் என்பது தெரிகிறது..