பக்கம் எண் :

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு47

மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்
     தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும்ஒண் பொய்கைகள் சூழ்திரு
     வெள்ளறை நின்றானே1

என்ன இயற்கைகளாய் நின்றிட்டாய், என்னை ஆளும் கண்ணா
துன்னு சரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவைஒளி ஊறுஒலி நாற்றம் முற்றும்நீயே
உன்னை உணரவுறில், உலப்புஇல்லை நுணுக்கங்களே2

இச்செய்யுள்களிலும் மணம் என்னும் பொருளில் நாற்றம் என்னும் சொல் வந்திருப்பது காண்க.

பெருங்கதை என்னும் நூலில், மணமுள்ள பூக்களைக் கூறுகிற இடத்தில்,

நறுந்தார் நாற்றம் பொதிந்த நறுமலர்

என்று கொங்குவேள் ஆசிரியர் கூறுகிறார். அந்நூலின் கதைத் தலைவியாகிய வாசவதத்தை என்னும் அரசகுமாரிக்குத் தாதியர் ஒப்பனை செய்தபோது, தலையில் நறுமண எண்ணெயையும், உடம்பிலே நறுமணங் கமழும் வெண்ணெயையும் பூசினார்களாம். அந்த வெண்ணெய் மென்மையும் நன்மையும் பொருந்தியதாய், விரும்பத்தக்கதாய். ஒருநாள் பூசினாலும் ஓர் ஆண்டு வரையில் நறுமணம் கமழ்வதாக இருந்ததாம். இதனைக் கொங்குவேள் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

நெய்தலைப் பெய்த பின்றை, மெய்வயின்
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும்
ஒருநாள் பூசினும் ஓரியாண்டு-விடா அத்
திருமாண் உறுப்பிற்குச் சீர்நிறை யமையத்துக்
கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய
வாச வெண்ணெய் பூசினர்3

மணம் மிகுந்த அந்த வெண்ணெய் நாற்றம் உடைய வெண்ணெய் என்று கூறப்பட்டது காண்க. உடம்பில் பூசப்பட்ட அந்த வெண்ணெய் இக்காலத்தில் Snow என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது..