48 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
நாறாத் தகடுபோல், நன்மலர்மேல் பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ-வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ, பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து4 என்பது நாலடியார். இதில், பூவின் புறவிதழ் மணமில்லாத தென்று கூறப்படுகிறது. மணமில்லாத என்பதற்கு நாறா என்னும் சொல் ஆளப்பட்டது. பண்டைக் காலத்தில், நறுமணம் என்னும் பொருள் உடைய நாற்றம் என்னும் சொல் பிற்காலத்தில் தீய மணத்திற்குப் பெயராக வழங்கப்படுகிறது. ஆனால், பழைய இலக்கியங்களில் நறு மணத்திற்கே நாற்றம் என்னும் சொல் வழங்கப்பட்டது. இக்காலத்தில் நூல் எழுதுவோர் இச்சொல்லைத் தீய வாசனை என்னும் பொருளில் எழுதுகிறார்கள். இதற்கு என் செய்வது? இந்தச் சொல்லின் “தலைவிதி” இது என்று வாளா இருக்க வேண்டியதுதான். வாழ்வு ஒருகாலம் தாழ்வு ஒருகாலம் என்பது மனித வாழ்க்கையில் மட்டும் அல்லாமல், சொற்களுக்கும் உண்டுபோலும்! அடிக் குறிப்புகள் 1. பெரிய திருமொழி 5-ஆம் பத்து, 3ஆம் திருமொழி - 3. 2. திருவாய்மொழி 7-ம் பத்து, 8-ஆம் திருமொழி-9. 3. பெருங்கதை - மண்ணு நீராட்டியது 96-101. 4. நன்றியில் செல்வம் - 6. உவா. |