பக்கம் எண் :

  

இரண்டாவது

காத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம்

இறைவனுடைய ஐஞ்செயல்களில் இரண்டாவதாகிய காத்தல் செயலைப் பற்றிய தாண்டவத்தை இங்கு ஆராய்வோம். இந்தத் தாண்டவத்துக்குக் கௌரி தாண்டவம், இலக்குமி தாண்டவம், சந்தியா தாண்டவம், ரக்ஷா தாண்டவம், புஜங்கலளிதம், புஜங்கத்திராசம் என்னும் பெயர்கள் கூறப்படுகின்றன. கௌரியம்மையார் பொருட்டுச் செய்தபடியால் கௌரி தாண்டவம் என்றும், மாலை வேளையில் ஆடியபடியால்சந்தியா தாண்டவம் (பிரதோஷ நடனம்) என்றும், காக்கும் பொருட்டுச் செய்தபடியால் ரக்ஷா தாண்டவம் என்றும் இது பெயர் பெற்றது.

வாசுகி, கார்க்கோடகன் என்னும் பாம்பரசர்கள் தவங்கிடந்து வேண்டிக்கொள்ள, அவர்களுக்கு இரங்கிச் சிவபெருமான் அப்பாம்பு களைத் தம்முடைய உடம்பிலும் கையிலும் ஏந்திக் கொண்டு ஆடினார் என்று புராணம் கூறுகிறது. இந்தத் தாண்டவத்தில் பாம்பு முக்கிய இடம் பெறுகிறது. சிவபெருமான் பாம்பைத் தமது அரையில் சுற்றிக் கொண்டும், ஏந்திக் கொண்டும், இரண்டு கைகளில் பிடித்துத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டும் தாண்டவம் செய்வது போலச் சந்தியா தாண்டவ மூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன.

காத்தல் செயல் இருவகைப்படும் என்றும், அது இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என இருவகைப்படும் என்றும் கூறினோம். ஆகவே, சந்தியா தாண்டவம் இருவகைப்படும். உயிர்கள் செய்த நல்வினைக்கு (புண்ணியத்துக்கு) ஏற்ப இன்பத்தைக் கொடுத்துக் காப்பது ‘இன்பக் காத்தல்’ என்பது. உயிர்கள் செய்த தீவினைக்கு (பாவத்துக்கு) ஏற்பத் துன்பத்தைக் கொடுத்துக் காப்பது ‘துன்பக் காத்தல்’ என்பது. ஆகவே, இன்பக் காத்தல் புஜங்கலளிதம் என்றும், துன்பக் காத்தல் புஜங்கத்திராசம் என்றும் கூறப்படுகின்றன. புஜங்கம் என்றால் பாம்பு. ஆன்மாவைக் குறிக்கிற பாம்பை ஏந்தி, அதை மகிழ்ச்சியுறச் செய்யும்