பக்கம் எண் :

42மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

காபாலி:மெய்தான். நீ சோமாதேவிதான். (யோசித்து) இல்லை, இல்லை நீ தேவசோமை.
தேவ:சோமதேவிமேல் உமக்கு ஆசை அதிகம், ஐயா, அதனால்தான் என்னிடம் பேசும்போதும் அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறீர்.
காபாலி:என்னுடைய குடிமயக்கத்தினால், கண்ணே! வார்த்தை தவறி வந்து விட்டது, கோபப்படாதே.
தேவ:நல்லவேளை. நீர் அறிந்து, வேண்டுமென்றே சொல்லவில்லை.
காபாலி:குடிப்பழக்கம், என்னையறியாமல் ஏதேதோ உளறும் படிச் செய்கிறது! நல்லது. இன்று முதல் குடிப்பதை விட்டு விடுகிறேன்.
தேவ:ஐயாவே! என்பொருட்டு உம்முடைய பரம விரதத்தைத் தவறவிடவேண்டாம். (அவன் காலில் விழுந்து வேண்டுகிறாள்.)
காபாலி:(மகிழ்ச்சிபொங்க அவளைத் தூக்கி நிறுத்தித் தழுவிக் கொள்கிறான்) த்ருண, த்ருண! நமசிவாய! அன்பே, விசித்திரமான காபாலிக வேடம் பூண்டு, மனதாற மதுவை அருந்தி, கருவிழி மங்கையர் முகத்தைக் கண்டுகொண்டிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குச் செல்லும் நல்வழியாகும் என்று திருவாய் மலர்ந்தருளிய சூலம் ஏந்திய எம்பெருமான் நீடூழி வாழ்க!
தேவ:நீர் இப்படி எல்லாம் பேசக்கூடாது. ஆருகதர் (ஜைனர்) மோக்ஷத்திற்கு வேறுவழி காட்டுகிறார்கள்.
காபாலி:ஆமாம், அன்பே! அவர்கள் யார் தெரியுமா? காரணத்தைப் பொறுத்தது காரியம் என்று கூறுகிறவர்கள். இன்பம், துன்பத்தின் காரியம் என்று கூறுகிறவர்கள். ஆகையால் அவர்கள் நிந்திக்கத் தக்கவர்கள்.
தேவ:பாபம் சாந்தியாகட்டும்!