| நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 85 |
வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே” என்பது அந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுள். ஆகாயத்தைக் கடவுள் உடம்பாகவும், திசைகளைக் கைகளாக வும் கற்பித்தபடியால்தான் நமது கடவுளின் உருவங்களில் நான்கு, எட்டு முதலிய பல கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி, நடராசர் உருவத்தில் காணப்படுகிற உறுப்புகளையும் கைகளில் ஏந்தியுள்ள பொருள்களையும் பற்றி விளக்கிக் கூறுவோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கருத்தைக் குறிக்கிறபடியால், முதலில் இக்குறிப்புகள் எதை எதை உணர்த்துகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். ஆகவே, அவற்றின் குறிப்பை விளக்கு வோம். திருவடிகள் கடவுள் இயற்றும் ஐஞ்செயல்களில் மறைத்தல், அருளல் (திரோபவம், அனுக்கிரகம்) என்னும் இரண்டு செயல்களும் அவரது இரண்டு திருவடிகளாகக் கற்பிக்கப்படுகின்றன. மறைத்தல் என்னும் செயல் தாண்டவ மூர்த்தியின் ஊன்றிய திருவடியாகும். இத்திருவடி உயிர்களுக்கு ஏற்படும் நல்வினை, தீவினையாகிய இருவினைகளை அனுபவிக்கச் செய்து, இருவினையொப்பு, மலபரிபாகம் என்னும் நிலையை ஏற்படச் செய்கிறது. அருளல் என்னும் செயல், தாண்டவப் பெருமானுடைய தூக்கிய திருவடியாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. தூக்கிய திருவடிக்குக் ‘குஞ்சிதபாதம்’ என்னும் பெயரும் உண்டு. அனுக்கிரகமாகிய பேரின்பத்தைக் கொடுப்பது தூக்கிய திருவடி. “ அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி, அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே” என்பது திருமந்திரம். “ ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்துநின்று ஊட்டுவதாகும் நின் ஊன்றிய பதமே; அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம் கொடுப்பது, முதல்வ! நின்குஞ்சித பதமே” என்பது குமரகுருபர சுவாமிகள் திருவாக்கு.6 |