பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

இரண்டாம் களம்

இடம் : ஊர்ப்புறத்து ஒரு சார்.

காலம் :வைகறை.

(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க)

(இணைக்குறள் ஆசிரியப்பா)

நடராஜன்:  (தனிமொழி)
பரிதியி னுதயம் பார்க்கக் கருதில்
இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ்
செவ்விதிற் கண்டுபின் செல்வோம்
ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில்
 5தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல,
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
  10சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே!
சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ்
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்
இருசிறை யடித்து நெடுவா யங்காந்து
 15ஒருமுறை கூவி உழையுளார் புகழ்


பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப் படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர்.