| பலதேவன் | | எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? |
| | 60 | பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. |
| | 65 | வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! |
| | | (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) |
| தோழன்: | | செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? |
| பல: | | அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். |
| தோ: | | வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. |
| பல: | 70 | வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். |
| | 75 | எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. |
| | | (பலதேவனும் தோழனும் போக) |
| நட: | | கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். |
| | 80 | இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! |
சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.