| | | நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! |
| | 85 | ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? |
| | | (நாராயணன் வர) |
| | 90 | வாவா, நாரணா! |
| நாராயணன்: | | ஏ! ஏ! என்னை! |
| | | சினந்தனை தனியாய்? |
| நட: | | ஏன் இத் தீயவன் |
| நட: | | அனந்தைக் கேகுங் காரணம்? |
| நாரா: | | யார்? யார்? |
| நட: | | அறிவை! நீவிளை யாடலை; அறைதி. |
| நாரா: | | வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... |
| நட: | 95 | அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! |
| நாரா: | | அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் |
| நட: | | விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. |
| நாரா: | 100 | முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். |
| நட: | | அதற்கவள்? |
| நாரா: | | மறுத்தனள். |
| நட: | | எங்ஙனம்? |
| நாரா: | | ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்’ என்றாள். |
| நட: | | அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. |
அனந்தை - திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன்.