பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்251

மூன்றாம் களம்

இடம் :அரண்மனையில் ஒருசார்.

காலம் :நண்பகல்.

(ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க)

(நேரிசை ஆசிரியப்பா)

முதற் சேவகன் செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ
ஆறுதல் கூறுவம்?
2-ம் சேவ:  கூறலும் வீணே!
  பெருத்த துயரிற் பேசும் தேற்றம்
நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
3-ம் சேவ: பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித்
துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
4-ம் சேவ: நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
3-ம் சேவ: மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய்.
முதற் சேவ எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
4-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன்.
2-ம் சேவ: சகிப்பளோ கேட்கில் தமியள் ...
3-ம் சேவ: ஆயினும்,
  மகளால் அன்றி மன்னவன் தேறான்.
அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ!
2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர்.


தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள்.