| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 281 |
ஐந்தாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) | சுந்தரர்: | | வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! | | ஜீவகன்: | | முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள். | | | 5 | சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! | | | 10 | போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! | | சுந்: | | பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே ஆண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி | | | 15 | நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும் தனதுடல் காணார் எனநினை வதுபோல் என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்! |
வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் - வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் - முறிந்தாலும். காழ் அறும் - வயிரம் இல்லாத. தீக்குருவி -நெருப்புக்கோழி. |