தொட்டாற்சிணுங்கி முதல் - தொடை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தொட்டாற்சிணுங்கி தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை .
தொட்டாற்சுருங்கி தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை .
தொட்டி நீர்த்தொட்டி ; மரம் , விறகு முதலியன விற்குமிடம் ; வேலியடைப்பு ; அம்பாரி ; கள் ; சிற்றூர் ; அழி ; குப்பைத்தொட்டி ; காண்க : தொட்டிக்கட்டு ; சிறுகாஞ்சொறி ; சிற்றாமுட்டி ; அபராதம் .
தொட்டிக்கட்டு வீட்டின் நடுவில் திறந்தவெளியுடன்கூடிய சதுரக்கட்டு .
தொட்டிக்கால் கவட்டுக்கால் .
தொட்டிச்சி தொட்டியச் சாதிப் பெண் .
தொட்டிமை ஒற்றுமை ; அழகு .
தொட்டியம் ஒரு நாடு ; ஒரு மொழி ; சூனிய வித்தை .
தொட்டில் குழந்தைகளை வைத்து ஆட்டுஞ்சிறு கட்டில் ; தூளி ; நீர்த்தொட்டி .
தொட்டிலிடுதல் பிறந்த குழந்தையை முதன் முறையாய்த் தொட்டிலில் இடும் சடங்கு .
தொட்டிவயிறு பெருவயிறு .
தொட்டிவீடு தொட்டிக்கட்டுள்ள வீடு .
தொட்டு தொடங்கி ; குறித்து .
தொட்டுக்காட்டுதல் ஒன்றைச் செய்துகாட்டுதல் .
தொட்டுக்கொண்டுபோதல் ஒன்றைச் சுமப்பது போல் தொட்டுச்செல்லுகை ; பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல் ; பிணச்சடங்கில் துணிமூலை பிடித்தல் .
தொட்டுக்கொள்ளுதல் எட்டிப்பிடித்தல் ; உணவுத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிய அளவு உட்கொள்ளுதல் .
தொட்டுத்தெறித்தல் ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல் ; மிகச் சிறிய அளவு கொடுத்தல் .
தொட்டுத்தொட்டு சிறுகச்சிறுக .
தொட்டுப்பிடித்தல் மகப்பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவிசெய்தல் .
தொட்பம் திறமை .
தொடக்கம் தொடங்குகை ; ஆரம்பம் ; ஆதி ; செல்வம் ; வருக்கம் .
தொடக்கு கட்டு ; பற்று ; மகளிர் சூதகம் .
தொடக்குதல் சிக்கிக்கொள்ளுதல் ; ஆரம்பித்தல் ; கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தரித்தல் ; பொருத்தல் .
தொடங்கல் தொடங்குதல் ; ஆரம்பிக்கை ; முதற்படைப்பு ; செய்ய முயலுகை .
தொடங்கு கால்விலங்கு , தளை .
தொடங்குதல் ஆரம்பித்தல் ; முயலுதல் ; ஒத்தல் .
தொடர் தொடர்கை ; சங்கிலி ; விலங்கு ; பஞ்சு ; வரிசை ; பிசின் ; பூமாலை ; மரபுவழி ; சொற்றொடர் ; பழைமை ; நட்பு ; உறவு ; உலோகங்களை உருக்க உதவும் மட்பாண்டம் .
தொடர்ச்சி தொடர்கை ; உறவுமுறை ; பரம்பரைத்தொடர்பு ; நட்பு ; வழக்குத்தொடர்ச்சி ; பூங்கொத்து ; முயற்சி ; வரிசை ; காரணகாரியத் தொடர்பு ; தொடுசு ; செறிவு .
தொடர்ச்சொல் சொற்களின் தொடர் ; தொடர் மொழி .
தொடர்ச்சொற்புணர்த்தல் முப்பத்திரண்டு தந்திர உத்தியில் ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்துவைத்தல் .
தொடர்தல் இடையறாது வருதல் ; பிணைந்து நிற்றல் ; அமைதல் ; தாக்குதல் ; பின்பற்றுதல் ; மிகுதல் ; நெருங்குதல் ; கட்டல் ; தேடல் ; வழக்கிற்கு இழுத்தல் .
தொடர்ந்தார் நண்பர் .
தொடர்நிலைச்செய்யுள் பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல் .
தொடர்ப்பாடு தொடர்ச்சி ; பற்று ; காமநுகர்ச்சி .
தொடர்ப்பூ விரிபூ .
தொடர்பற முழுதும் .
தொடர்பு தொடர்கை ; நட்பு ; உறவு ; நியதி ; ஒட்டுகை ; பாட்டு ; பரம்பரைத் தொடர்பு ; வரிசை ; காரண காரிய சம்பந்தம் .
தொடர்முழுதுவமை உவமானம் உவமேயம் இரண்டிலும் பொதுதன்மையைத் தெரிவிக்கும் சொல் தனித்தனி வரும் அணி .
தொடர்மொழி இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக்கொண்ட சொல் ; இரண்டு சொற்களால் ஆகும் தொடர் .
தொடர்வட்டி வட்டிக்கு வட்டி .
தொடர்வண்டி இரயில்வண்டி ; புகைவண்டி .
தொடர்வு காண்க : தொடர்ச்சி .
தொடரர் மேவினர் .
தொடராமுறி விடுதலைப்பத்திரம் ; ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச்சீட்டு .
தொடரி செடிவகை ; முட்செடிவகை ; காண்க : புலிதொடக்கி .
தொடரெழுத்து நிலைமொழி ஈற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து .
தொடல் சங்கிலி .
தொடலை தொங்கவிடுகை ; மாலை ; மகளிர் விளையாட்டுவகை ; மணிக்கோவைகளால் தொடுக்கபட்ட மேகலை .
தொடி வளைவு ; கைவளை ; தோள்வளை ; வீரவளை ; சுற்றுவட்டம் ; பூண் .
தொடிசு காண்க : தொடுசு .
தொடித்தடி வளைதடி ; பூண்கட்டிய ஊன்றுகோல் .
தொடிமகள் காண்க : விறலி .
தொடு தோட்டம் ; மருதநிலம் ; வஞ்சகம் .
தொடுக்கம் பொன் .
தொடுக்கை ஆடு அடைக்கும் இடம் ; தொடுத்தல் .
தொடுகழல் செருப்பு .
தொடுசு தொடர்ச்சி ; கூத்திவைப்பு .
தொடுத்தல் இயைத்தல் ; தொடங்குதல் ; கட்டுதல் ; பூட்டுதல் ; வளைத்தல் ; எய்தல் ; அணிதல் ; சேர்த்துவைத்தல் ; பாத் தொடுத்தல் ; உண்டாக்குதல் ; வழக்குத் தொடர்தல் ; பூ முதலியன இணைத்தல் .
தொடுதல் தீண்டுதல் ; தோண்டுதல் ; பிடித்தல் ; பிழிதல் ; தொடங்குதல் ; உண்ணல் ; ஆணையிடுதல் ; செலுத்துதல் ; வாச்சியம் வாசித்தல் ; அடித்தல் ; செருப்பணிதல் .
தொடுதுணை உதவி .
தொடுதோல் காண்க : தொடுகழல் .
தொடுப்பி புறங்கூறுவோன் .
தொடுப்பு தொடுத்தல் ; தொடர்ந்திருக்கை ; கட்டு ; சேர்க்கை ; சங்கிலி ; கலப்பை ; சால் வளைத்து உழுதல் ; விதைப்பு ; புறங்கூறல் ; செய்கைத் தொடர்ச்சி ; கட்டுக்கதை ; செருப்பு ; பழக்கம் ; கள்ளக்கணவன் ; ஆசைநாயகி ; களவு .
தொடுப்புக்கத்தி பட்டாக்கத்தி .
தொடுப்புக்காரன் நெருங்கிய நண்பன் ; கள்ளக் கணவன் .
தொடுபதம் சோறு .
தொடுவழக்கு தொடர்ந்து வரும் வழக்கு ; கள்ள வழக்கு ; விடாது பற்றிவரும் வழக்கம் .
தொடுவாய் ஆறுங் கடலுஞ் சேருமிடம் ; புறங் கூறுதல் .
தொடுவான் அடிவானம் ; பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு .
தொடுவானம் அடிவானம் .
தொடுவிலங்கு இருவரைப் பிணைக்கும் விலங்கு .
தொடுவு கொல்லை ; களவு .
தொடுவை தொடுத்திருப்பது ; புதிய யானையைப் பயிற்றும் யானை ; பாங்கன் ; வைப்புக் காதலர் .
தொடுவைவள்ளம் துணைச் சிறுபடகு .
தொடை இடையறாமை ; தொடர்ச்சி ; அம்பெய்கை ; கட்டு ; தேனடை ; அம்பு ; நாண் ; பூமாலை ; பூங்கொத்து ; மதிற்சுற்று ; செய்யுள் உறுப்புள் ஒன்று ; சந்து ; பாட்டு ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; சட்டம் ; துடை என்னும் உறுப்பு .