கருணாகரப்பெருமாள் கோவில் - திருக்காரகம்

    நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய், நிறைந்தாய, கச்சி
    ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
    உள்ளுவாருள்ளத் துள்ளாய், உலகமேத்தும்
    காரகத்தாய் கார் வாளத்துள்ளாய், கள்வா
    காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
    பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
    பெருமான் உன் திருவடியே பேணி னேனே
            (2059) திருநெடுந்தாண்டகம் 8

என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் காஞ்சியில் உலகளந்த பெருமாள் சன்னிதிக்கு உட்புறமாகவே
அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் சன்னதியில் அடங்கியுள்ள திவ்ய
தேசங்களில் இதுவும் ஒன்று. காரகம் என்னும் பெயர் வந்துற்ற காரணம்
அறியுமாறில்லை.

கார்ஹமஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத்
தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தமையால் அவர் பெயரின்
பொருட்டே திவ்ய தேசம் விளங்கி நின்று கார்ஹகம் ஆகி காரகம்
ஆயிற்றென்பர். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமாகும்.

எவ்விதம் இப்பெருமாள் (காரகத்தான்) உலகளந்த பெருமாளின்
சன்னதிக்கு வந்துற்றார் என்பதும் ஆராய்தற்குரியதாகும். தனித்த ஸ்தல
புராணம் இல்லை. திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் மட்டும்
இத்தலத்திற்குத் திவ்யம் தந்து திவ்ய தேசத்திற்குள் அமிழ்த்துகிறது.

உலகமேத்தும் காரகத்தாய்     என்ற திருமங்கையாழ்வாரின்
மங்களாசாசனத்தைப் பார்க்கும் போது இத்தலம் ஒருபோது
பெருஞ்சிறப்புப் பெற்றிருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கல்விக்கும். அறிவாற்றலுக்கும் இப்பெருமாள் வரப்பிரசாதி.

பின்