தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் - திருத்தண்கா
சிறப்புக்கள்
  1. தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி
    பொருந்திய சோலையைத் தெரிவு செய்து     பிரம்மன்
    வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று.
    பாண்டிநாட்டுத் திருப்பதியில் திருத்தங்கல் என்பது ஒன்றுண்டு.
    அது வேறு இது வேறு.

  2. மாயநலன் என்னும் அசுரனைப் படைத்தனுப்பி அவன் எவ்விதம்
    யாகத் தீயைக் கிரஹித்துப் போகிறான் என்பதைக் காண சரஸ்வதி
    பின் தொடர மாயநலனை தீபம் போல் பெருமாள் ஏந்த, அந்த
    திருக்கோலத்தில் பெருமாள் சரஸ்வதி தேவிக்கு இங்கு காட்சி
    கொடுத்ததாக ஐதீஹம்.

  3. பின்னால் பிரம்மனின் யாகத்தை தடுக்க முடியாமல் போய் தனது
    தவறுணர்ந்து பிரம்மனோடு ஐக்கியமாகிய பின்பு இவ்விடத்தில்
    சரஸ்வதி தேவியே தீர்த்தமாக அமைந்து எம்பெருமான் தன்
    கரத்தில் அக்னியை ஏந்திய கடூரம் நீங்க குளிர்ந்த தீர்த்தமாக
    மாறி இவ்விடத்தில் நிலை பெற்றாள் என்றும் கூறுவர்.

  4. வைணவ சம்பிரதாயத்தில் பாஷ்யகார சித்தாந்தம் என்பதைப்
    போதித்த மாமேதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் இங்குதான் அவதரித்தார்.
    அதாவது (இத்தலம்) தூப்புல் என்னும் பகுதியே அவரது அவதார
    ஸ்தலமாகும்.

  5. இங்குள்ள வேதாந்த தேசிகரின் சன்னதியில் உட்புறச் சுவர்களில்
    எல்லாம் ஸ்வாமி தேசிகனின் ஜெனனம் முதலான வரலாற்றை
    சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் அழகோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
    இச்சன்னதியில்     தேசிகன்     ஞான     முத்திரையோடு
    எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின் திருமேனியை
    அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டை
    செய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து
    வழிபட்ட திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர்
    தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு
    நோக்கி அமைந்ததாகும்.

  6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் மங்களாசாசனம்
    செய்யப்பட்ட ஸ்தலம். தலைப்பிலிட்ட பாடலில் இப்பெருமாளின்
    திருநாமமான விளக்கொளியையும், பிராட்டியின் திருநாமமான
    மரகதவல்லி என்பதையும் இத்திவ்ய தேசத்தின் திருநாமமான
    திருத்தண்கா என்பதையும் ஒரே வரியில் முறைப்படுத்தி
    மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை.

  7. திருவேங்கடத்து எம்பெருமானையே ஈண்டு கண்டதாக திருமங்கை
    மங்களாசாசனம் செய்துள்ளார்.

    பொன்னை மாமணியை யணியார்ந்த தோர்
        மின்னை, வேங்கடத்துச்சியிற் கண்டு போய்
    என்னை யாளுடை யீசனை எம்பிரான்
        றன்னை, யாம் சென்று காண்டும் தன் காவிலே - 1849

    வேங்கடத்து உச்சியில் ஒரு ஜோதியைக் கண்டேன்.
    பொன்னொத்த சோதி உருக்கொண்ட என்னையாளும் அந்த
    எம்பிரான் தன்னைத் தண்காவில் சென்று கண்டேன் எனக்கூறி
    அணியார்ந்ததோர் மின்னை என்னும் சொற் றொடரில்
    இப்பெருமானுக்குண்டான     விளக்கொளியைப்     பிரகாசிக்கச்
    செய்கிறார்.

  8. மேற்சொன்ன தோடு மட்டுமன்றி,

    குறுங்குடியுள் நின்றானை, மூவுலகிற்கும் முதலானவனை
    அளவிட வியலா ஆராவமுதனை, அரங்கத்து அரவணையில்
    பள்ளி கொண்ட ஐ யனை, வெஃகாவில் துயில் அமர்ந்தானை
    வேங்கடத்து நின்றானை இந்த திருத்தண்காவிலே கண்டேன்

    என்று இத்தலத்தினை 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமான
    ஸ்தலங்களுக்கு இணையாக்கி விட்டார் திருமங்கை.

  9. பிள்ளைப் பெருமாளய்யங்கார் தமது அஷ்ட பிரபந்தத்தில்,

    ஆட்பட்டேன் ஐம்பொறியால் ஆசைப்பட்டே னறிவும்
        கோட்பட்டு நாளும் குறை பட்டேன் - சேட்பட்ட
    வண்காவை வண்துவரை வைத்து விளக்கொளிக்குத்
        தண்காவைச் சேர்ந்தான் தனக்கு.

முன்