பத்துப் பாட்டு, எட்டுத்
தொகை, என்னும் பழந் தமிழ்
நூல் - தொகுதிகளைப் பேராசிரியர்,
நச்சினார்க்கினியர், முதலிய உரைகாரர்கள் முறையே
'பாட்டு' 'தொகை' என்றே தத்தம்
உரைகளில் குறிப்பிட்டுள்ளனர். (தொல்.
அகத். 5, புறத். 35; செய்யு. 50, 80 உரை),
பத்துப்
பாட்டிற்கும் எட்டுத் தொகை நூல்களுக்கும் பொதுவாக வெளிவருகின்ற இந்தத் தொகுதிக்கு இவ்
உரைகாரர்களின் மரபை ஒட்டி,
'பாட்டும் தொகையும்' என்று பெயர் சூட்டப்பெற்றது.
பாட்டு பத்து, தொகை
எட்டு, என்ற வரையறை பண்டை உரையாசிரியர்களின் காலத்திற்கு
முன்பே ஏற்பட்டுவிட்டது.
ஆசிரியப் பாட்டின்
அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும்; இழிபு மூன்று அடியே.
என்ற தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திர
உரையில் (150) இளம்பூரணர்,
'பெரியபாட்டு பத்துப்
பாட்டினுள்ளும்,
சிலப்பதிகாரத்துள்ளும்,
மணிமேகலையுள்ளும் கண்டு கொள்க'
என்று
எழுதியுள்ளனர். நச்சினார்க்கினியரும் இச் சூத்திர
உரையில், 'கூத்தராற்றுப்படை தலையளவிற்கு
எல்லை. மதுரைக் காஞ்சியும் பட்டினப் பாலையும் ஒழிந்த
பாட்டு ஏழும், பரிபாடலும் கலியும்
ஒழிந்த தொகை ஆறும் இடையளவிற்கு
எல்லை' என்று எடுத்துக் காட்டியுள்ளார்.
இவற்றால்
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை,
என்ற அமைப்பு முறை உரைகாரர்களின் காலத்திற்கு முன்பாகவே
ஏற்பட்டுவிட்டமை தெளிவாம். எவ்வளவு
காலம் முந்தியது என்பது பற்றிக் கூறுவதில்
ஆராய்ச்சியாளர்களிடையே
கருத்து வேற்றுமைகள் உள்ளன.
திரு முருகு ஆற்றுப்படை
முதல் மலைபடுகடாம் ஈறாக உள்ள பாடல்கள் பத்தும்
பத்துப்
பாட்டு. இவற்றுள் சிலவற்றைப்
பற்றிய செய்திகள் பிற்கால
இலக்கியங்களிலிருந்தும்
சிலசாஸனங்களிலிருந்தும் தெரிய வருகின்றன.
தத்து நீர் வரால் குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்
பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்
எனவரும் கலிங்கத்துப் பரணிச்
செய்யுட் பகுதியில் பட்டினப் பாலை பாடிய உருத்திரங்
கண்ணனாருக்கு அரசன் செய்த சிறப்பைக்
கவிஞர் போற்றியுள்ளார். இச் செய்தி,
பாடியதோர் வஞ்சி நெடும் பாட்டால்
பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே
எனத் தமிழ் விடு தூதிலும் பாராட்டப்
பெற்றிருக்கின்றது. திருவெள்ளறைச்
சாஸனத்தில் உள்ள
'வெறியார் தளவத் தொடை
மாறன்' எனத் தொடங்கும் பாடலில்.
பறியாத தூண் இல்லை; கண்ணன் செய் பட்டினப்
பாலைக்கு, அன்று
நெறியால் விடும் தூண் பதினாறுமே
அங்கு நின்றனவே
என வரும் இறுதிப் பகுதியால்,
பட்டினப்பாலையை அரங்கேற்றிய மண்டபம்
ஒன்று சோழநாட்டில்
இருந்தமை தெரியவருகிறது.