தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட்டும் தொகையும்


  • பாட்டும் தொகையும்

    சிறப்பு

    சங்க  இலக்கியங்களான  பத்துப்பாட்டு  (பாட்டு),  எட்டுத்தொகை  (தொகை)  ஆகியவற்றில்
    இடம்பெற்றுள்ள  ஆய்வுப்பயன்மிக்க  இன்றியமையாச்  செய்திகளைத் தரும்  அகராதி  'பாட்டும்
    தொகையும்'.  சங்க இலக்கியங்கள்  அனைத்தையும் படித்துப் பல்லாண்டு முயன்று பெறவேண்டிய
    செய்திகளை இவ்வகராதி நம் சுட்டிச் சொடுக்கில் தருகிறது.

    சங்க இலக்கியப்பகுதிகளில் உள்ள சில செய்திகள் மின் நூலகத்தில் அவ்வவ் இலக்கியப்பகுதிப்
    பொருளடகத்தில் ஓரளவு தரப்பட்டுள்ளன. முழுமையான  அளவில் சங்க இலக்கியச் செய்திகளைத்
    தெரிந்துகொள்ளும் வகையில் 'பாட்டும் தொகையும்' என்னும் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதியின்  பொருளடக்கப்பகுதியில்  முகவுரை,  நூல்கள்  முதலியவற்றின்  முதற்குறிப்பு
    அகராதி,  புலவர்  அகரவரிசை,  பாடப்பட்டோர்   அகரவரிசை,   சொல் - தொடர்   விளக்கம்,
    கதைகளும்  வரலாற்றுக்  குறிப்புகளும்,  பழக்க   வழக்கங்கள்,  கட்டுரைத்தொடர்கள், உவமைகள்,
    வருணனைகள்  ஆகிய  பகுதிகள்  தரப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பார்க்க வேண்டிய பகுதியைத்
    தேர்ந்தெடுத்துச்    சுட்டியால்   சொடுக்கிப்   பார்க்கமுடியும்.   ஒவ்வொரு   பகுதி   குறித்தும்
    அறிமுகப்பகுதியாக  முன்னுரை  ஒன்றும் தரப்பட்டுள்ளது. புலவர்கள் அகரவரிசை என்ற பகுதியில்
    அகரவரிசையாகப் பாடிய புலவர்களின் பெயர்களும் பல்வேறு சங்க இலக்கியப்பகுதிகளில் அவர்கள்
    பாடிய   பாடல்களின்    எண்களும்   ஒருங்கே   தரப்பட்டுள்ளன.   எழுத்து   அகரவரிசையும்
    தரப்பட்டுள்ளது.   அறிய   விரும்பும்  புலவரின்  முதல்  எழுத்துப்   பகுதியில்   சொடுக்கினால்
    அவ்வெழுத்து வரிசையில் இடம்பெறும் புலவர்கள் பெயர்கள் பாடல் எண் விவரங்களோடு வரும்.

    இதுபோன்றே  பாடப்பட்டோர்  அகரவரிசையும்  தரப்பட்டுள்ளது.   அகர வரிசைப்பகுதியில்
    அரசன் அல்லது வள்ளலின் பெயரின் முதல் எழுத்தைச் சொடுக்கிச் செய்தியைப் பெறலாம்.

    சொல் - தொடர் விளக்கம் என்ற பகுதி சங்க இலக்கியங்களில் காணும் அருஞ் சொற்களுக்குப்
    பொருள் தருகிறது. அகரவரிசைப் பகுதியில் சொல்லின் முதல் எழுத்தைச் சொடுக்கிப் பொருளைப்
    பெறலாம்.

    'கதைகளும்   வரலாற்றுக்   குறிப்புக்களும்'   என்னும்   பகுதி   ஆய்வாளருக்கு மிகுதியாக
    உதவக்கூடியது. சங்க காலத் தொன்மம் (கதை) பற்றிய செய்திகளையும் வரலாற்றுச் செய்திகளையும்
    அறிந்துகொள்ள முடியும்.

    தேடும்   தொன்மக்   கதைக்குரியவரின்   பெயரின்  முதல்  எழுத்தையோ, வரலாற்றுக்குரிய
    அரசனின் பெயரின் முதல் எழுத்தையோ அகரவரிசையில் சொடுக்கிச் செய்தியைப் பெறலாம்.

    பழக்கவழக்கங்கள்  என்னும்  பகுதி  சங்க காலப்  பண்பாட்டை   அறிய  விரும்புவோர்க்குப்
    பயன்தருவது. பாடல் எண்களோடு செய்திகளைப் பெறலாம்.

    'கட்டுரைத்   தொடர்கள்'   என்னும்   பகுதி  சங்க  இலக்கியச்  சுவைஞருக்குப்    பெரிதும்
    பயனளிக்கக்கூடியது.  நயமான  தொடர்கள்  இடம்பெறும்  இலக்கியம் பாடல் எண் பாடலடி எண்
    ஆகியன   தரப்பட்டுள்ளன.   இதனைக்கொண்டு   சங்க  இலக்கியப்  பகுதிகளில்  தேவையான
    பாடலடிகளைக்  காணலாம்.  ஒவ்வோர்  இலக்கியத்திலுள்ள  கட்டுரைத்  தொடர்களை   அறியும்
    வகையில்   பொருளடக்கப்பகுதியில்   பத்துப்பாட்டு   எட்டுத்தொகை   நூல்களின்   பெயர்கள்
    தனித்தனியே தரப்பட்டுள்ளன.

    'உவமைகள்'  என்ற  பகுதி  ஆய்விற்கு மிகவும் உதவக்கூடியது. இப்பகுதியில் இலக்கியங்களில்
    காணும் உவமைகள் இடம்பெறும் பாடல் பாடலடி எண்கள் தரப்பட்டுள்ளன.

    'வருணனைகள்'  என்ற  பகுதி  தெய்வம்,  மக்கள்,  இடங்கள்  என  11 வகையாகவும் 'பொது'
    என்றும்  பகுக்கப்பட்டுச்   செய்திகள்   தரப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாகத்  'தெய்வம்'  என்ற
    பகுதியைச்   சொடுக்கினால்   அகரவரிசையில்   தெய்வங்களின்  பெயர்களும்  அத்தெய்வங்கள்
    இடம்பெறும் பாடலடி எண்ணும் பெறமுடியும்.

    பாட்டும்  தொகையும்  என்னும்  இவ்வகராதி சங்க இலக்கியங்களான 18 நூல்களையும் புரிந்து
    சுவைக்கவும்  ஆயவும்  தகவல்திரட்டவும்  விரும்புவோர்க்குப்  பெருந்துணையாக  அமைவதைப்
    பயன்படுத்துவோர் உணர முடியும்.
     


புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 13:50:01(இந்திய நேரம்)