2.2 கதை மாந்தர்

கதை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்பவர் கதை மாந்தர்கள் ஆவர். இக்காப்பியத்துள் கதை மாந்தர்கள் பலர் உள்ளனர். அக்கதை மாந்தர்களை இருவகைப்படுத்தலாம். அவை, (1) தலைமை மாந்தர் (2) துணைமாந்தர் எனலாம்.

பாரத சக்தி மகா காவியத்தின் தலைமை மாந்தராகச் சுத்தன் திகழ்கிறான். அவனே காப்பியத்தின் நடுநாயகமாக உள்ளான். அவனைச் சுற்றியே எல்லா மாந்தர்களும் எல்லா நிகழ்ச்சிகளும் அமைந்துள்ளன. ஏனைய காவிய மாந்தர்களான சத்தியன், சித்திமான், கௌரி, போகன், கலியன், மாவலி, சுந்தரி, சக்தி, தூமகேது முதலியவர்கள் துணைமாந்தர்களாக உள்ளனர்.

இனி, காப்பியத் தலைமகனாகிய சுத்தன் பற்றிய கருத்துகளை ஒருவாறு தொகுத்துக் காண்பது காப்பிய நோக்கைப் புரிந்துகொள்ள உதவும்.

2.2.1 சுத்தன்

பிறப்பு

பூரணம் பெறும் பாரத புண்ணிய பூமியில் மனு, மதி ஆகியோரின் வழித்தோன்றல்கள் பலர் தோன்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பரதன், தென்னவர், வளவர், சேரர், பிரகலாதன், இராமன், சீதை, மாருதி, கண்ணன், பாண்டவர், புத்தன், மகாவீரர், அசோகன், அப்பர், சம்பந்தர், சுந்தரர், வாதவூரடிகள், ஆதிசங்கரர், கிறித்து, முகம்மது, கோவிந்தசிங், இராமதாசு, இராம்மோகன், தயானந்தன், பரமஹம்சர் முதலியோர் இவர்களின் வழியில் இறுதியில் வந்தவன் சத்தியன். அவன் சித்திமாநகரை அறநெறி பிறழாமல் ஆண்டு வந்தான். நாட்டு நன்மையே நாட்டமாகக் கொண்டு பண்புடன் அரசாட்சி புரிந்தான். அவன் மனைவி இந்திரை ஆவாள். மன்னன் சத்தியன், அரசி இந்திரை ஆகியோரின் நல்லறப் பயனாய்ச் சுத்தன் பிறந்தான். கவியோகி சுத்தானந்தர், சுத்தனின் பிறந்தநாள் குறிப்பையும் பெருமையையும் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்.

ஆவணி மூலத்தில் அவத ரித்தவன்
பூவணி யாகவே பொலிவன்; புண்ணியர்
நாவணி எனத்திரு நாமம் ஓதுவார்
பாவணி புலவர்கள் இவனைப் பாடுவார்

(பாரத சக்தி மகாகாவியம், சித்திகாண்டம்-10, சுத்தநாமப் படலம் : 60)

(ஆவணி மூலம் = ஆவணித் திங்கள் மூல நட்சத்திரம்; பூ அணியாக = உலகிற்கு அழகாக)

கல்வி

கல்வி கற்கும் அகவையை அடைந்ததும் சத்தியன் தன் மகன் சுத்தனைத் தன் குலகுருவிடம் கல்வி கற்க ஒப்படைத்தான். சுத்தன் தன் ஆசானிடம் பன்னிரண்டாண்டுகள் கல்வி பயின்றான். செந்தமிழ், ஆரியம், ஆங்கிலம், இந்தி மொழிகளை எல்லாம் கற்றான். யோகம், தருமம், நீதிநெறி முறைகளையும், கணக்கு மற்றும் அறிவு நூல்களையும் கற்றான்.

ஏட்டினில் எத்தனை கற்றாலும் அவற்றுடன் உலக நடையைக் கற்றுணரவே கல்வி முழுமை பெறுகிறது. சுத்தனும் தன் தந்தையின் ஆணையின்படி அமைச்சன் சித்திமானுடன் ‘நீதி ஆட்சி நிலவு நன்னாடெலாம்’ காணப் புறப்பட்டான். அவன் வருகையை அறிந்த மன்னர்கள் வரவேற்றனர். அவனை அரியணையில் அமரச் செய்தனர்; அரசியல் சிறப்பை எல்லாம் அவனுக்கு எடுத்து மொழிந்தனர்; பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

கலியன் முதல் வீழ்ச்சி

சுத்தன் பஞ்சவடியில் சாந்தமா முனிவரின் அருளைப் பெற்றான். கலியன் அரக்கர்களின் துணையோடு கலகம் செய்ய முற்படுவதை, சாந்த முனிவர் சுத்தனுக்குத் தெரிவித்தார். அவன் வேண்டுகோளை ஏற்றுச் சுத்தனுக்கு இராமாயணக் கதையை உரைத்தார். அதனைக் கேட்டு சுத்தன் மகிழ்ந்திருந்தான். அச்சமயம் கலிநகர் சென்ற ஒற்றர்கள் வந்தனர். அவர்கள் சுத்தனும் அமைச்சன் சித்திமானும் சித்திமாநகர்க்குத் திரும்பிச் செல்வதே உத்தமம் என்றனர். சாந்த முனிவர் பக்த இராமதாசர், சிவாஜி வரலாற்றையும் அவர்களுக்கு உரைத்தார். இச்சமயம் பஞ்சவடியிலேயே கலியனின் வீரர்கள் நுழைந்தனர். சொல்ல ஒண்ணாக் கொடுமைகளைப் புரிந்தனர். சுத்தனும் சித்திமானும் போரை எதிர்கொண்டு இறுதியில் வென்றனர். பின்னர்ச் சித்தி மாநகர்க்குப் புறப்பட்டனர்.

இறையருள் நாட்டமும் மன அமைதியும் வேண்டிய சுத்தன் போர் வந்தபோது அஞ்சாமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றதால், அவன் கடமை உணர்ச்சி மிகுந்த மன்னன் என்பதை அறியலாம்.

சுத்தன், கௌரி சந்திப்பு

மன்னன் சத்தியன் அரசாட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவு பூண எண்ணினான். தன் எண்ணத்தை அரசவையில் வெளிப்படுத்தினான். அமைச்சர்கள் அவன் கருத்திற்கு இசைவு தந்தனர். மன்னனாக முடிசூடுவதற்கு முன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்னும் தன் எண்ணத்தையும் அரசன் வெளிப்படுத்தினான்.

சுத்தன் பிறந்த நாள் விழாவில் அழகுக் கன்னியர் பலரும் பங்கு கொண்டனர். எவரிடத்தும் சுத்தன் தன் காதல் உணர்வை வெளிப்படுத்தவில்லை. கௌரியைக் கண்ட மாத்திரத்தில், ‘திண்ணென மின்சாரத்தீ தெறிப்பது போல்’ உணர்ந்தான். இவனுக்கே அவள் பிறந்தாள், அவளுக்கே இவன் பிறந்தான் என்னும்படி அவ்விருவரும் உள்ளம் கலந்தனர்.

கௌரியைச் சுத்தனுக்கு மணம் முடிக்க மன்னன் எண்ணினான். சாந்த முனிவரின் கருத்தும் அதற்கு இசைவாக இருந்தது. ஆனால் சுத்தன் கௌரியை மணக்க விரும்பினாலும் கலியனை அழித்த பின்னரே மணம் புரிய இசைந்தான். சாந்த முனிவர் அவன் கௌரியை மணப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என்றும் நல்ல செயல்களைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் கூறச் சுத்தன் கௌரியை வாழ்க்கைத் துணையாக ஏற்க இசைந்தான்.

சாந்த முனிவரின் மகள் பார்வதி பெற்ற மகள் கௌரி. அவளைக் கவியோகி அறிமுகம் செய்யும் பாங்கு அறியத்தக்கது.

மங்கலப் புன்னகை மலர்ந்த பொன்முகம்
பங்கய வேல்விழி பவள மூரல்வாய்
பொங்கிள மயில் ஒயில் அன்னம் போன்றவள்

     (சித்தி காண்டம், 17, பஞ்சவடிப்படலம் : 113-115)

முதற்பார்வையிலேயே சுத்தனின் உள்ளத்தைக் கவர்ந்தாள். அவனுக்கு வாழை, மா, பலா ஆகியவற்றின் கனிகளையும் முதிர் பருப்புகளையும் பச்சிலைகளையும் ஆவின் பாலையும் அமுதாகப் படைத்து ஓம்பினாள்.

சாந்த முனிவர் இராமனின் வரலாற்றையும், இராவணன் வரலாற்றையும், அனுமன் வரலாற்றையும் விரிவாகச் சுத்தனுக்குக் கூறினார். அதனைக் கேட்ட சுத்தன் மகிழ்ந்தான்.

இன்பத்தில் இன்பமாம் இராம நாமத்தில்
அன்புடைத் தாஸரின் அரிய மாக்கதை
உன்புது வாக்கினால் உரைத்தி

(சித்தி காண்டம், 19, ஒற்றுக்கேள்விப் படலம் : 10-12)

திருமணம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையையும் விவேகானந்தர் வாழ்க்கையையும் சாந்த முனிவரால் சுத்தன் அறிந்து மகிழ்ந்தான். இல்லற வாழ்வே இனிதெனப் பாரத முனிவர் கூறக் கேட்ட சுத்தன் கௌரியை மணந்தான். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்தியன், சித்திமான், பாரத முனிவர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். சுத்தனும் கௌரியும் சிவனும் சக்தியும் போலத் தவ வாழ்க்கையில் திளைத்தனர்.

அரங்கேற்றல்

மன்னன் சத்தியன் மகனுக்கு முடிசூட்ட எண்ணினான். ஆட்சியின் பொறுப்பை எண்ணி அவன் அதனை ஏற்கத் தயங்கினான். அவனை ஊக்குவித்து ஆட்சியை ஏற்குமாறு செய்தாள் கௌரி. மன்னனாகச் சுத்தனும் அரசியாகக் கௌரியும் முடிசூட்டப்பட்டனர். மக்கள் பசியும் பட்டினியும் இன்றி, தீய ஒழுக்கங்கள் இன்றி வாழ்வதற்கு வழி செய்வதாகச் சுத்தன் வாக்குறுதி அளித்தான். சாந்த முனிவர் கூறிய கண்ணனின் வாழ்விலும் அவன் நிகழ்த்திய கீதைப் பேருரையிலும் சுத்தன் ஆழ்ந்து தோய்ந்தான். பீஷ்மனின் தியாக வாழ்விலும் வீர வாழ்விலும் உள்ளம் பறிகொடுத்தான்.

போர் அறம்

கலியன் சித்தியைக் கவரத் திட்டம் போட்டான். அது முறியடிக்கப்பட்டது. சத்தியன் போர்க்கோலம் பூண்டான். சுத்தன் போரில் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளைக் கூறினான்.

பாலரைப் பெண்டிரைப் பசுவினைப்
பண்புடை முனிவரை, கவிஞரை,
சீயரைக் கல்வியின் செல்வரை
சேமமாய்க் காமினோ சேனையீர்

(கௌரி காண்டம் - 29, படையெழுந்த படலம் :89-92)

வீரர்களுக்கு எழுச்சியூட்டப் பிரதாப சிங்கனின் வரலாற்றைச் சுத்தன் சொன்னான். அவ்வீர வரலாற்றைக் கேட்ட சித்தியின் வீரர்கள் கிளர்ச்சியுற்றுக் கலியின் படைகளைப் புறங்காட்டச் செய்தனர். சுத்தனும் போர்க்களம் புக ஆயத்தமானான். செருக்களத்தில் போர் வீரர்களுக்குத் தொண்டு செய்யக் கௌரியும் புறப்பட்டாள். போரில் புறங்காட்டிய கலியனைக் கொல்லாது ‘நாளை வாளுடன் வா’ என விடுத்தான். போரில் வெற்றி பெற்றும் அமைதியையே அவன் உள்ளம் நாடியது.

பொல்லாங்கு அறியாப் பொதுஜனங் களையே
ஊனும் கள்ளும் உயிர்க்கொலை வெறியும்
ஏற்றிப் போரில் இழுத்து நிறுத்திப்
பீரங்கி வாயில் பிணிபடச் செய்யும்
அதர்மக் கொடுமை அழியுநாள் என்றோ?

     (கௌரி காண்டம் - 34, உறுதிப் படலம் : 64-68)

பகைவனுக்கு அருளும் பண்பு

யானையைக் குழியில் தள்ளி வீழ்த்துவது போல் சுத்தனை வீழ்த்தக் கலியன் செய்த சதியை இளைய வீரன் வடிவம் பூண்ட கௌரி தடுத்தாள். சுத்தனைக் காத்தாள். ஆனால் அவளோ பகைவரின் அம்பிற்கு இரையானாள். அவளைப் பிரிந்த சுத்தன் அவளுக்காகக் கண்ணீர் வடித்தான். போரில் மீண்டும் கலியன் தோற்றான். தன்னை அடிபணிந்த கலியனைச் சுத்தன் விடுதலை செய்தான். ஆனால் கலியன் மீண்டும் படையெடுப்பதையே எண்ணினான். சத்தியன் இடத்திலே கலிநகர் இருப்பதால் வெகுண்ட வீரர்கள் மீண்டும் அவனைக் கைது செய்து சிறையில் இட்டனர்.

பல்கலைக் கழகம்

போரில் உயிர்துறந்த தன் மனைவி கௌரியின் நினைவாகப் பல்கலைக் கழகம் ஒன்றைச் சுத்தன் நிறுவினான்.

குடியாட்சி மலர்ந்தது

நல்லோரிடத்தில் ஆட்சியை ஒப்படைத்து விட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு தவம் செய்யவே சுத்தன் விரும்பினான். இமயத்திலிருந்து திரும்பிய சாந்த முனிவர் நடந்தவற்றை அறிந்தார். சுத்தனை இமயத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

சுத்தன் இமயம் செல்லும்முன் நாட்டில் குடியரசாட்சி முறையை நடைமுறைப் படுத்தினான்.

முடியர சாட்சி முடிந்தது நண்பீர் !
குடியர சாட்சிக் கொடியை உயர்த்தினேன்
வாழ்க வாழ்க மானிட உரிமை
அச்சமும் அநீதியும் அடிமையும் ஒழிக !
தலைநிமிர் கவேசம த்துவ தருமம்.

     (சாதன காண்டம், 2, சாசனப் படலம் : 34-38)

தொண்டுள்ளம்

சுத்தன் அன்னையையும் அமைச்சனையும் மற்றுள்ளோரையும் பிரிந்து தவம் செய்யப் புறப்பட்டான். அவன் அன்னை இந்திரை நாட்டைக் காக்கும் பணியை மேற்கொண்டாள். பல துறவிகளையும் வழிகளில் கண்டு அவர்களோடு வாதிட்டு வென்று காமபுரியை அடைந்தான். சாருவாகம், சாக்தம் என்னும் சமய நெறிகள் அங்குச் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆடவரும் பெண்டிரும் கள்ளருந்தலிலும் காமக் களியாட்டங்களிலும் ஈடுபடுவதை கண்டு திகைத்தான். காமி-வாமி என்னும் இருவரும் தலைமை ஏற்க ஒழுக்கச் சீர்கேடுகள் காமபுரியில் மலிந்திருந்தன. சுத்தன் காரணமாக வாமியும் காமியும் அவர்களின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டன. சண்டையில் இருபடைகளிலும் பெரும் அழிவு ஏற்பட்டது. பின்பு சுத்தன் காமபுரி மக்களைச் சந்தித்து அவர்களுக்கு இறை உணர்வையும் ஆன்ம இருப்பையும் உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்தினான். மழையின்றி மக்கள் வாடியதைக் கண்டு, கடவுளைத் தொழுது மழை பொழியச் செய்தான்.

புத்தர், மகாவீரர்

காமபுரியை நீங்கிப் புத்தபுரியை அடைந்தான். தருமசேனர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் கருத்துரைகளையும் அவனுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் ஜீனவரன் என்னும் சமண சாது மகாவீரரின் வாழ்க்கை வரலாற்றையும் தத்துவங்களையும் கூறச் சுத்தன் அறிந்து தேர்ந்தான்.

புத்தர்

மகாவீரர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

இயேசு கிறித்து, நபிகள் நாயகம்

இயேசுதாசு என்னும் கிறித்தவர் சுத்தனுக்கு இயேசு கிறித்துவின் வரலாற்றையும் போதனையையும் கூறினார். அவற்றைக் கேட்டுச் சுத்தன் மெய்யுணர்வு எய்தினான். அப்துல்லா என்னும் சான்றோர் மௌல்வி நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையையும் இசுலாமிய சமய உண்மைகளையும் சுத்தனுக்கு அறிவுறுத்தினார்.

இயேசு கிறித்து

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

குருநானக், கபீர்

சுந்தர சிங் என்னும் சீக்கியர் குருநானக்கின் வாழ்க்கை வரலாற்றையும் சமய நெறிகளையும் சுத்தனுக்கு விவரித்துரைத்தார். சீக்கியரிடத்தில் விடை பெறுமுன் கபீர்தாசின் வாழ்க்கைச் சிறப்பைத் தான் அறிந்தபடி அவர்களின் நெஞ்சம் நெகிழ இசைத்தான்.

குருநானக்

கபீர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

ஜரதுஷ்ட்ரர்

பின்னர் ஆரியமான் என்பவரோடு அக்கினி நகரை அடைந்தான் சுத்தன். ஆரியமான் ஜரதுஷ்ட்ரர் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் கருத்துரைகளையும் சுத்தனுக்கு அறிவுறுத்தினார்.

வைதிகம்

சுத்தன் தேவதாசுடன் வேதபுரிக்குச் செல்லும் வழியில் தீயவர்களால் நையப் புடைக்கப்பட்டு, காலொடிந்தும் அவர்களுக்கு அன்பு காட்டினான். தேவதாசின் பணிவிடையாலும் சக்தியின் அருளாலும் உடைந்த கால் ஒட்டிக் கொண்டது. தன் சமய அனுபவங்கள் அனைத்தும் நூலாக்கித் தன்பால் நேயமுடையோர்க்குச் சுத்தன் அளித்தான். அவர்கள் வன்கொடுமை வழிவிடுத்து நன்னெறியில் நின்றனர்.

வேதபுரி சாதிப்பிரிவினைகளால் சிதைவுற்றிருந்தது. வேத நெறிகள் பின்பற்றப்படவில்லை. போலி ஞானங்கள் பேசியே வேதியர்கள் பொழுதினைக் கழித்தனர். சில சாதியார் கோயிலுள் நுழையவும் தடை விதித்தனர். இறைவனை மறந்தனர். சுத்தனை அரட்டர்கள் மறித்து,

என்ன சாதிஎம் மதம்குலம் கோத்திரம் என்னே?
என்ன கோயிலில் எவ்வகை எவ்வுருத் தொழுவாம்?
உன்னை உய்விக்கும் குருபெயர் உரை

     (சாதன காண்டம், 18, வேதபுரிப் படலம் : 126-128)

(உய்விக்கும் = வழிநடத்தும்)

என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

அவற்றிற்கு அவன்

மனிதச் சாதியான், மனிதரின் குலம் ; உலகு எல்லாம்
எனது கோயிலாம் இதயத்தில் இருப்பதுஎன் இறையாம்.
மனதை வென்றவன் மமதையைக் கொன்றவன் குருவாம்
புனித நெஞ்சுஉரை போதமே வேதமென்று அறிவீர்.

     (சாதன காண்டம், 18, வேதபுரிப் படலம் : 129-132)

(மமதையைக் கொன்றவன் = அகந்தையை அழித்தவன்)

வேதபுரியில் திருமால் நெறியினரின் வேதநெறிக்கு மாறான வாழ்க்கையைக் கண்ட சுத்தன் வெம்பினான். வேதப்பொருளை அனைவரும் அறியச் சுத்தன் சொற்பெருக்காற்றினான். தயானந்தரின் தூய வாழ்வை விவரித்தான். சங்கரரின் வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை வெளிப்படுத்தினான்.

சைவம்

பின்னர் ஒப்புயர்வு அற்ற ஞானச் சிவகிரியைச் சுத்தன் அடைந்தான். அங்கே சத்திய உருவாய் உள்ள சதானந்த யோகியைக் கண்டு மனம் உருகி வழிபட்டு அவரையே குருவாகத் தேர்ந்தான். அவர் அவனுக்கு ஞானத்தைக் கற்பித்தார். அவர் அவனுக்குச் சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த மெய்ப்பொருள் நூலைக் கற்பித்தார். மாணிக்கவாசகர், அப்பர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரின் குறிக்கோள் வாழ்க்கையை விளங்க உரைத்தார். அவர் காட்டிய வழியில் நின்று அற்புதமான சித்தியினை அடைந்தான்.

வள்ளலார்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

வேதாந்தம்

சாந்த முனிவர் துணையால் சுத்தன் அண்ணாமலையில் உள்ள அருணஹம்ஸ பகவனைக் கண்டான். அருணஹம்ஸ பகவன் சாந்த முனிவரையும் சுத்தனையும் வரவேற்று உண்ணச் செய்தார். அவர் அருளால் பரமானந்த நிட்டை சித்தனுக்குக் கிட்டிற்று. உண்மை அறிவே யோக சித்தருக்கு உரியது என்பதைக் கண்டான்.

பின்னர், புதுவை யோகி அரவிந்தர் நிலையத்தைச் சாந்த முனிவரும் சுத்தனும் அடைந்தனர். அங்கு அவன் அரவிந்தர் தவவாழ்வையும் அலிப்பூர்ச் சிறையில் யோகசித்தி அடைந்ததையும் அறிந்தான்.

அரவிந்தர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சமரச சன்மார்க்கம்

அதன் பின் வடலூர் சென்று இராமலிங்கர் அமைத்த சுத்த சமரச சன்மார்க்கச் சங்கத்தைக் கண்டான். ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உலகிற்குத் தந்த வள்ளல் அவர் என்னும் உண்மையை அறிந்தான்.

இமயப் பயணம்

அங்கிருந்து இமயமலைக்குச் சுத்தனும் சாந்த முனிவரும் சென்றனர். தவம் செய்தற்கு ஏற்ற இடமான இமயம் ஆத்தும சக்தியின் அணிவளர் முடிபோல் காட்சி அளித்தது. அகத்தியரும், திருமூலரும், சத்தியதரிசியும், பரஞ்சோதியும் சிவனருள் பெற்றதும் இமயம் என்பதை அறிந்தான். பல யோக முறைகளையும் கற்றான்; குண்டலினிக் கனலால் குளிரைப் போக்கும் வழிவகை தெரிந்தான். சிவானந்தரைக் கண்டு அவர் அமைத்த சமயோக சமரசத்தையும் சாந்த முனிவரும் சுத்தனும் கண்டனர். பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களையும் கண்ட பின்னர் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டிச் சாந்த முனிவர்,

சுத்தநீ இங்கே சக்தி சதாசிவன்
அருளை நோக்கி அருந்தவம் செய்வாய்

     (சாதன காண்டம், இமாலயப் படலம் : 201-202)

எனக் கூறினார். சுத்தனும் அதன்படி தவம் செய்து சுத்த சக்தியாஞ் சுடர் தவக் கனலில் ஊற்றாகிப் பொலிந்தான்.

சாந்த முனிவர் அருளால் சுத்தன் சமயோக சித்தியை அடைந்தான். தன்னைச் சூழநின்ற சங்கத்தார்க்குத் தான் அவதாரமோ, இறைவனோ, குருவோ இல்லை; உழைத்திடும் தொண்டர் கூட்டத்துள் ஒருவன் என்று பணிவுடன் மொழிந்தான்.

தானவ நாட்டில்

போகரின் வரவால் தானவர் நாட்டில் தன் தந்தை சத்தியன் செய்த பணிகளை அறிந்தான்; சுந்தரியும் சக்தியும் செய்த உதவிகளை அறிந்தான். மாவலியின் நாட்டு மக்கள் மறவழி மறந்து அறவழி திரும்பினர். ஒழுக்கநெறி நின்றனர். நிலைமை மாறியதை அறிந்த மாவலி சினம் கொண்டான். தனக்கு எதிராகச் செயல்படும் அனைவரையும் பீரங்கியால் சுட்டொழிக்க ஆணை இட்டான். போக முனிவர் இறையருளை இதயத்து இருத்தி அரக்கர்கள் செயல்படாமல் மந்திரம் செபித்தார்; சத்தியனும் உளம் கசிந்து இறைவன் அருளை வேண்டினான்.

அடுத்த நாள் மாவலியின் ஆணையால் சத்தியனும் போகரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அறிந்த அன்பர்கள் சுந்தரியின் தலைமையில் சிறை புக ஆயத்தம் ஆயினர். சுந்தரியும் சிறைப்பட்டாள். சிறைப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிச் சக்தி உண்ணாநோன்பு இருந்தாள். அன்பர்கள் அனைவரையும் விடுவிக்கக் கிளர்ச்சி செய்தனர். மாவலி அனைவரையும் சுட ஆணையிட்டான். சக்தி அதனைத் தடுத்தாள். அச்சமயம் விமானங்கள் குண்டுகள் பொழிந்தன. எங்கும் இருள்சூழ அன்பர்கள் சிறையைத் தகர்த்து அனைவரையும் விடுவித்தனர். சத்தியனும் போகனும் சுந்தரியும் சக்தியும் விமானம் ஏறிச் சீகரம் சென்றனர்.

இவ்வாறு தானவ நாட்டில் நிகழ்ந்தவற்றைச் சுத்தனுக்குப் போகன் உரைத்தான்.

பாரத சக்தி

இமயத்தில் தன்னைச் சூழ இருந்த யோகசித்தி எய்திய அன்பர்களுக்குச் சில கருத்துரைகளைச் சுத்தன் வழங்கினான். மக்களை வருத்தும் மாவலி, தூமகேது உள்ளிட்ட அரக்கர் அழியவேண்டும். நாட்டினைத் திருத்தி வளமாக்க வேண்டும். அதற்கேற்ற தருணம் வாய்த்துள்ளது. தொண்டு செய்ய ஆயத்தமாகுங்கள் என்று தொண்டர்களை ஊக்கினான். பாரத சக்தியின் பெருமையைப் பலபட எடுத்துரைத்தான்.

அரக்கர் தீமையை வேருடன் அழித்திடும் ; தணலைச்
சுரக்கும் திவ்விய சுதந்தரச் சுடர்பெறும் சக்தி
இரக்கம் அன்புஅருள் ஈகைதி யாகவிவேகம்
பரக்க நல்கிடும் செல்வமாம் பாரத சக்தி

     (சுத்தசக்தி காண்டம்,1, புதுநாட்படலம் : 149-152)

(தணல் = நெருப்பு ; திவ்விய = தெய்வத் தன்மை)

சித்திமான் நிகழ்வுரை

பாரத முனிவரும் சித்திமானும் சுத்தனைச் சந்தித்தனர். சித்திமான் சுத்தனின் தவ ஆற்றலைப் புகழ்ந்தான். கலியனும் தூமகேதுக்களும் செய்த கொடுமைகளை எடுத்துரைத்தான். அவர்களின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை தந்திட வேண்டுமெனவும் கூறினான். சுத்தன் துறவறம் பூணச் சென்றதும் இந்திரை தகவுற அரசு நடத்தியதும் நாட்டைக் காத்ததும் கலியனின் ஆட்கள் பல்வகை வேடம் பூண்டு நாட்டில் நுழைந்ததும் அதனை அறிந்து சபையினர்க்குத் தெரிவித்ததும், கலியன் படையெடுத்துச் சித்தியைக் கைப்பற்றியதும் அவனைத் தூமகேது சிறைபிடித்ததும் சொன்னான். நாடு அயலவர் கைப்பட்டதற்காகச் சுத்தன் கண்ணீர் சிந்தினான். அரக்கரால் சூழப்பட்ட சித்தியை வீரர்கள் கடும்போர் புரிந்து மீட்டனர் என்பதை எல்லாம் கூறிச் சித்திமான் சுத்தனை நாட்டிற்கு எழுந்தருள வேண்டினான்.

கௌரி - சக்தி வருக

சக்தியைச் சுத்தன் கண்டான். போரில் உயிர் துறந்த கௌரி சக்தியின் வடிவம் பெற்றாள் என்பதை அறிந்தான்.

வருக கௌரியே, வருகநின் வாழ்வுஇனிப் பொலிக !
தருக நின்னைஇத் தரைமிசை தருமம்ஓங் கிடவே
வருக சக்தியே பாரத சக்தியாய் வாழ்க
தருக நின்னையே தானவர் குலந்திருந் திடவே.

(சுத்த சக்தி காண்டம், 6, சக்தி விஜயப்படலம் : 37-40)

சுத்தன் தன் உள்ளத்து எழும் கருத்துகளை எல்லாம் அறிந்து போற்றியவள் சக்தி என்று அவளைப் பாராட்டினான்.

போர் தொடுப்போம்

மானுடத்தின் மீது தீரா நேயமும் அன்பும் உடையவன் சுத்தன். எனினும் அரக்கர் போர் தொடுத்தால் தாமும் போர் தொடுப்பது பொருந்தும் என்றான் சுத்தன்.

தீரமும் வேண்டும் ; உள்ளத் திண்மையும் வேண்டும் ; ஆத்ம

வீரமும் வேண்டும் ஊணர் வெறிஎழப் படைந டத்தி

போரினை தொடுத்தால், யாமும் போருக்குப் போர்தொடுத்து

வேரொடும் தீமை சாய விடுதலை வழங்கு வோமே

(சுத்த சக்தி காண்டம், 6, சக்தி விஜயப் படலம் : 121-124)

யோக சித்திப் படலம்

சுத்தன் யோக சித்திப் படலம் என்னும் நூலைத் தீட்டி மானுடம் பயன் பெறத் தந்தான். அதனைக் கடவுள் இயல், உலகியல், அறவியல், அறிவியல், அன்பியல், நடையியல், இல்லறவியல், குலவியல், தொழிலியல், அருளரசியல், யோகவியல், சித்தியியல் என 12 இயல்களாகப் பகுத்துக் கொண்டான். இந்நூல் வாழ்வியலுக்கு நன்னெறி வகுத்துத் தருவது, சான்றாக, வறுமை வரக் காரணம்

வீண்அணி ஆடை விருந்து மணச் செலவு
காண்வறுமை காட்டி விடும்

(சுத்தசக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 405-406)

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. இதற்குச் சான்றாக, பகீரதன் உள்ளான் என்பது சுத்தன் சிந்தனை.

தங்கு முயற்சியால் சாராதது ஒன்றில்லை
கங்கை கொணர்ந்தோன் கரி.

(சுத்தசக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 423-424)

இயற்கைதரும் சக்திகளை யந்திரத்தில் ஊக்கிச்
செயற்கரிய நன்மையெலாம் செய்.

(சுத்த சக்தி காண்டம், 8, யோகசித்திப் படலம் : 463-464)

(கங்கை கொணர்ந்தோன் = பகீரதன்; கரி = சாட்சி)

என்று இயற்கையில் நிரம்பிக் கிடக்கும் ஆற்றலைக் கண்டு அதனை எந்திரங்களின் உதவியால் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.

இவ்வாறு பற்பல நற்சிந்தனைகளைத் தன் தொண்டர்களுக்கு வழங்கினான் சுத்தன்.

தொண்டர் பணிக்குழுக்கள்

சுத்தன் தன் தொண்டர்களை எல்லாம் 12 குழுக்களாக வகுத்துத் தொண்டு செய்யப் பணித்தான். அக்குழுக்கள் ஆவன :

(1) கடவுள் குழு (2) உலகக் குழு (3) அறவோர் குழு (4) அறிஞர் குழு (5) அன்புக் குழு (6) நன்னடைக் குழு (7) இல்லறக் குழு (8) குலக்குழு (9) தொழிற்குழு (10) அரசியற்குழு (11) யோகக் குழு (12) சித்தர் குழு

பாரத முனிவன் தொண்டர்களுக்குக் கூறிய காந்தி அண்ணலின் ஆன்மிக ஆற்றலை அறிந்த சுத்தன் அவர் (காந்தி அண்ணல்) புத்தனைப் போன்றும் கிறித்துவைப் போன்றும் கருணை உள்ளம் கொண்டு தன் உயிரை மன்னுயிர்க்காகத் துறந்தார். அவ்வாறே தொண்டர்கள் மக்கள் சேவைக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றான். நாத்திகம் ஒழியவும் மகளிர் சிறக்கவும் ஒழுக்கம் சீர்பெறவும் எனத் தொண்டுகளைத் தொண்டர்கள் செய்யலாயினர். அல்லல் ஒழிந்து அறம் தலைநிமிரத் தக்க வகையில் அவர்களின் தொண்டு திகழ்ந்தது. அரக்கர்களின் அடிமை விலங்கை உடைத்தெறியும் சூழலைத் தொண்டர்கள் உண்டாக்கினர்.

சுத்தன் அருள்

மோகியின் மோகவலையில் கட்டுண்டு அடாதன செய்த கலியன் சுத்தனின் அருளால் திருந்தினான். அடிமை வாழ்க்கை ஒழிந்ததெனத் தெளிவுற்றான்.

ஆவியினும் அரியநலம் ஆகியதன் உரிமையினைப்
பாவமெனும் படுசிறையில் பந்தனைசெய் கலியவனும்
சீவனிலே சுத்தவொளி புகுந்திடவே திருந்தி வந்தான்
ஏவரெமை இனியடிமை என்றடக்க வல்லவரே

(சுத்தசக்தி காண்டம், 15, கலி பணித்த படலம் : 5-8)

(பந்தனை = கட்டுதல், பிணித்தல் ; சீவன் = உயிர், ஆன்மா)

சுத்தனின் பதமலர் துதித்து நாயினேன்
சித்தமும் திருந்தினன் செய்கை சீர்உற்றேன்
அத்தகு குருபணிக்கு ஆசை கொண்டினும்
இத்தகு மானிடம் ஏந்தி நிற்கின்றேன்.

(சுத்தசக்தி காண்டம், 15, கலி பணித்த படலம் : 213-216)

என்ற கலியனின் வாய்மொழி அவன் திருந்திச் சுத்தனின் மானுடத் தொண்டிற்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதைப் புலப்படுத்துகிறது.

சுந்தரியின் கணவன் மாவலி அவன் மாமன் சீகரனால் வரவேற்கப்பட்டான். அவன் சுத்தனின் பெருமைகளைக் கூறினான், சத்திய யோகச் சங்கத்தின் பெருமைகளையும் கூறினான். அவற்றைக் கேட்ட மாவலியும் ஆணவம் அழிய

சென்றது செல்க ; நானும் திருந்தினேன்; அறிந்தேன் உண்மை ;

நன்றிது நானும் சுத்த நாயகன் சேவை செய்வேன்

என்று கூறினான்.

2.2.2 கலியன்

நற்பண்புகள், நற்செயல்கள் உடைய சுத்தனின் எதிர்நிலைத் தலைவனாகக் கலியன் படைக்கப்பட்டான். இவன் சத்தியனின் உடன் பிறந்தான் ஆவான். சித்தி நகரின் கீர்த்தியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டான். அவன் பொறாமையின் வடிவமாய் விளங்கினான். அவன் பொறாமைக்குச் சுத்தனின் புகழ் காரணமாயிற்று. சுத்தனை எதிர்க்கக் கலிநகர் ஒன்றையும் அமைத்துக் கொண்டான். மந்திர மாயங்கள் மாறுபாடு செய்து சுத்தனை அழிக்கத் திட்டமிட்டான். அண்ணனுக்குப் பின் நாட்டை ஆள எண்ணிய எண்ணம் ஈடேறாமல் ஆனதற்குக் காரணம் சித்தன் என்பதை நினைத்து மனம் வெந்தான் கலியன். அதனைக் கண்டு வருந்திய அவன் மனைவி மோகி அண்ணன் மாவலியின் படை உதவியால் சித்தியைக் கைப்பற்றலாம் எனத் தன் சூழ்ச்சியை வெளிப்படுத்தினாள். அவள் உரை கேட்ட கலியன்

கவலையும் ஒழிந்தது ; கனவு மெய்த்தது ;
புவனமும் கிடைத்ததுன் பொன்சொ லால்இனி
எவரும்என் நிகரில்

(சுத்தசக்தி காண்டம், 13, பொறாமைப் படலம் : 69-71)

என்று விம்மிதமுற்றான் கலியன்.

சித்தியைக் கைப்பற்றப் படைகளைப் பெருக்கினான். சத்தியனின் தம்பியாயினும் அரக்க குணம் உடையவன் கலியன். தீக்குணங்களின் உறைவிடம்.

நச்சராப் போன்ற நெஞ்சன் ; நல்லதை வெறுக்கும் தீயன்

பச்சைமோ கினிபி டித்த பாதகன் ; காமக்கள்ளன்

(கௌரி காண்டம், 11, வாழ்க்கைப் படலம் : 105-106)

கலியன் சூழ்ச்சி

சத்தியன் மணிமுடியைத் தரப் பாரத முனிவன் சுத்தனுக்கு அதனைச் சூட்டினான். மக்கள் மகிழ்ந்தனர். சித்தி நகரம் விழாக்கோலம் பூண்டது. இதனை ஏற்காத கலியன் மோகினியின் எண்ணப்படி காலிக் கூட்டத்தையும் காவி உடுத்திய போலிக் கூட்டத்தையும் புண்ணியம் பேசிடும் கேலிக் கூட்டத்தையும் சித்தியுள் நுழையச் செய்தான். சமயம் கிட்டும்போது சித்தியைப் கைப்பற்றவும் திட்டமிட்டான். மக்களும் போலித் துறவிகளை உண்மைத் துறவிகள் என எண்ணி உணவு அளித்து இருப்பிடமும் தந்தனர். போலித் துறவியான அகம்பரனின் பெருமைகளை அவனுடைய போலிச் சீடர்கள் மக்கள் இடையே பரவச் செய்தனர். பெண்களுடன் கூடிக் களித்தனர்.

சிறைவாசம்

சுத்தன் ஒற்றர்களின் வழியாகக் கலியன் சூழ்ச்சியை அறிந்தான். தன் அமைச்சன் சித்திமானோடு கலந்து பேசினான். வஞ்சகர் தங்கியிருந்த சித்தினி பவனத்தை வளைத்து அனைவரையும் சிறைப்பிடித்தான்.

கலியனின் சதித்திட்டம் வெளிப்பட்டது. அகம்பரனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கலியன் போர் செய்ய எத்தனித்தான். கலியன் சித்திக்கு உரிமை கொண்டாடினான். கலியன் ஏவலால் மாயன் என்பவன் சித்திக் கோட்டையை முற்றுகை இட்டான். சித்தியைச் சேர்ந்த விசயன் போரில் மாயனை வென்றான்.

மேலும் மேலும் தோல்வியைக் கண்டாலும் கலியன் அடங்கவில்லை. சத்தியனே படை நடத்தி வாகை சூடினான். கலியன் சுத்தனோடு நடத்திய போரிலும் தோல்வியைத் தழுவினான். சுத்தனின் அடிபணிந்து இனிச் சித்தியின் பக்கம் வருவதில்லை என்றும் தன்னை விடுதலை செய்யும்படியும் வேண்டினான். சுத்தன் அவனை விடுவித்தான். எனினும் கலியன் மீண்டும் போர்தொடுக்கும் வஞ்சத்தோடு சத்தியனைக் காணும்போது தன் நாடு பறிபோனதை எண்ணி மனம் பதைத்தான். தன் ஆணவத்தால் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலிருந்து மோகியோடு தப்பித்து விமானத்தில் தானவர் தீவை அடைந்தான். மீண்டும் படை திரட்டிச் சித்தியின் மீது போர் தொடுக்க எண்ணினான். தானவர் தலைவன் மாவலி கலியனுக்கு உதவ முன்வந்தான்.

மீண்டும் சிறைவாசம்

கலியனும் சித்தியின் படை ஆற்றலையும் நன்கு அறிந்திருந்தான். சத்தியனும் அவன் மகன் சுத்தனும் படையின் வலிமையோடு மனவலிமையும் உடையவர்கள். படைக்கலங்களால் அவர்களை வெல்ல முடியாது. அவர்கள் வரம் பெற்ற ஆற்றலர். எனவே அவர்களை வாதிலும் வெல்ல இயலாது. பூத சக்தியினாலும் அவர்களை வெல்ல இயலாது வெளிப்படுகிறது. ஆனால் வஞ்சனை செய்து சித்தியைக் கைப்பற்றலாம் எனத் தன் மைத்துனன் மாவலிக்கு உரைத்தான் கலியன்.

கலியன் சித்தி நாட்டில் புகுந்து அடாச் செயல்கள் செய்ய மக்களைத் தூண்டினான். அறவழியில் சென்ற மக்கள் மறவழியில் சென்றனர். அவனால் பெண்கள் மானம் இழந்தனர். செல்வர்கள் செல்வம் இழந்தனர். இல்லற உறவு கெட்டது. உறவாடியே மக்களைக் கெடுத்தான். செல்வத்தை அளவில்லாது சேர்த்துக் கொண்ட மன்னனென முடி சூட்டிக் கொள்ளத் திட்டமிட்டான். இதனை அறிந்த மாவலி தூமகேதுவை அனுப்பி அவனைச் சிறையில் அடைக்க ஆணை இட்டான். கலியனும் சிறையில் அடைக்கப்பட்டான். மோகியைத் தூமகேது கைப்பற்றிக் கொண்டான்.

மனமாற்றம்

சிறைப்பட்ட கலியன் தன் இரக்கம் கொண்டான். தன் தமையன் சத்தியனுக்கும் நாட்டிற்கும் இழைத்த கொடுமைகளை எண்ணி வருந்தினான். சுத்தனைச் சார்ந்து தொண்டு செய்வதை விரும்பினான்.

ஐயனை என்னுடை அண்ணல் மைந்தனைத்
துய்யனை அடைந்தினித் தொண்டு செய்தலே
உய்வழி என்றனன்

(சுத்தசக்தி காண்டம், 4, தூமகேதுப் படலம் : 57-59)

(ஐயன் = தலைவன் ; துய்யன் = தூயவன்)

சுத்த சமயோகியரின் இடையறாத தொண்டால் நாட்டில் அமைதிப் புரட்சி நடந்தது. மக்கள் தூமகேதுவின் ஆட்சியை வெறுக்கத் தொடங்கினர். செயலற்ற தூமகேது கள்ளுண்ட மயக்கில் மோகியின் சொற்களை நம்பினான். நாட்டில் அமைதிப் புரட்சி நடக்கக் கலியனே காரணம் என்றாள் மோகி. கலியனைக் கொல்ல அவனைத் தேடிப் புறப்பட்டான் தூமகேது.

சிறையிலிருந்து தப்பிய கலியன் நேரே மோகியின் தங்குமிடம் சென்று அவளைக் கண்டான். அவளைக் கொடுஞ்சொற்களால் பலவாறு வசை பாடினான்.

நேர்மை கெட்ட நீலிநீ இருக்கும்
வீடும் வேசை விடுதியா வதுவே
பள்ளியும் வெறிதரும் கள்ளுக் கடையே
புசிக்கும் இடமும் புலால்கடை நாற்றமே.

(சுத்தசக்தி காண்டம், 15, மோகி இறுதிப் படலம் : 53-57)

இறுதியில் கலியன் அவளைக் கொலை செய்தான்.

அரண்மனைக்குள் புகுந்த கலியன் அவையைக் கூட்டினான். தான் திருந்தியவனாக வந்திருப்பதைக் கூறினான். சுத்தன் யோகசித்தியால் தன்னை மறக்காமல் மறைப்பெனும் மாயையை நீக்கிக் காத்தான்; அமைச்சன் சித்திமானைப் போற்றிப் பாராட்டினான்; தன் தவறுகளுக்கு எல்லாம் மன்னிக்க வேண்டினான். சித்திமானும் கலியன் கூறக் கேட்டு ‘இனி நீ கடவுளின் அடியவன், மலைமேல் தவம் இயற்றும் சுத்தன் உன்னை ஏற்பான்’ என நல்லுரை கூறினான். சுத்தன் கலியனை ஏற்றுக் கொண்டான்.

2.2.3 கௌரி

அழகு

சாந்த முனிவரின் மகள் பார்வதியின் மகள் கௌரி. மகர யாழ் மீட்டுவதில் வல்லவள். சாந்த முனிவரின் வேண்டுகோளின்படி சுத்தனையும் சித்திமானையும் விருந்தாக ஏற்றுப் போற்றினாள். சுத்தனைக் கண்டதும் அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டாள். கவியோகி சுத்தானந்தர் கௌரியின் இயல்பினை இவ்வாறு சுவைபடக் கூறுகிறார்:

மங்கலப் புன்னகை மலர்ந்த பொன்முகம்
பங்கய வேல்விழி பவள மூரல்வாய்
பொங்குஇள மயில்குயில் அன்னம் போன்றவள்
புங்கவன் அருளினில் பொலியும் கௌரியே.

(சுத்தசக்தி காண்டம், 17, பஞ்சவடிப் படலம் : 113-116)

(பங்கயம் = தாமரை ; மூரல் = முறுவல், புன்னகை ; புங்கவன் = முனிவன்)

காதல்

இத்தகு அழகுப் பதுமையாய் விளங்கிய கௌரியைத் தன் பிறந்த நாளில் கண்டு மகிழ்ந்தான் சுத்தன். கவியோகி காதலர் சந்திப்பைத் தமக்கே உரிய பாணியில் பாவாக வடித்துத் தந்துள்ளார்.

பெண்ணொடு பெண்அளாவிப் பெருமைகள் பேசும்சுத்தன்
எண்ணமும் விழியும் உள்ளே இருந்தனன் ; கௌரிவந்தாள்
திண்ணென மின்சா ரத்தீ தெறிப்பது போலுணர்ந்தான்
கண்ணொடு கண்அளாவிக் கருத்துறக் கலந்த தம்மா

(கௌரி காண்டம், 2, சுத்த ஜயந்திப் படலம் : 805-808)

பெண்ணோடு பெண்அளாவி = மகளிர் பேச்செல்லாம் சுத்தனைப் பற்றி இருந்தது என்பது கருத்து. திண்ணென மின்சாரத்தீ = காதல் உணர்ச்சி வேகத்தைக் கவிஞர் இவ்வாறு அற்புதமாகக் கூறியுள்ளார். மேலும் சுத்தனும் கௌரியும்

அவனையே கண்டகௌரி அவனையே எங்கும் கண்டாள் ;
அவளையே கண்டசுத்தன் அவளையே எங்கும் கண்டான்
இவனுக்கே அவள்பிறந்தாள் அவளுக்கே இவன் பிறந்தான்

(கௌரி காண்டம், 2, சுத்த ஜயந்திப் படலம் : 809-811)

என்னுமாறு உள்ளம் ஒன்றினர். காதலர் ஆயினர்.

கலைவளம்

கௌரி பாண்டியர் மரபினில் வந்த பாவை ஆவாள். அறிவும் ஆற்றலும் ஒருங்கே உடையவள்; கற்பின் செல்வி. குண்டலி சக்தியை எழுப்பும் ஆற்றல் உடையவள்; கலைகளின் தாயகமாக விளங்கினாள்.

காவியக் கலையும் ஓவியக் கலையும்
ஆவியை உருக்கும் அமுதயாழ்க் கலையும்
வேதக் கலையும் விரிதமிழ்க் கலையும்
மாதவக் கலையும் மாசறப் பயின்றாள்

(கௌரி காண்டம், 3, கௌரி குலப் படலம் : 263-266)

என்பது சுத்தானந்தர் வாக்கு. இவை மட்டும் அன்றிப் போர்க்கலைப் பயிற்சியும் பெற்றவள். ‘சுத்தனுக்கு இவளே சக்தியாவாள்’.

இவ்வாறு கௌரியின் பெருமையும் சுத்தனுக்கு ஏற்ற சுடர்க்கொடி என்று பொருத்தமும் கூறப்பெற்றன.

உறுதிமொழி

கலியன் கேட்டை நீக்கும் தன் பணிக்கு அவள் துணைநிற்க வேண்டும் எனத் தன் உள்ளக் கிடக்கையைச் சுத்தன் உணர்த்தினான். அக்கருத்தை உடன்பட்டுக் கௌரி கூறிய உறுதிமொழி எண்ணத்தக்கது.

உன்மனம் ஒன்றே என்மன மாகும்
ஊடும் பாவும் கூடியே ஆடை
பீடுறும் ஆண்பெண் பிழையறக் கூடி
ஈருட லுக்கும் ஓருயி ராகிப்
பாருள் வளமும் பயிரும் போலே
இகமும் பரமும் இணைந்திட வாழ்வதே
சுகமாம் ; அதுவே சுத்தான்ம வாழ்வாம்.

(கௌரி காண்டம், 5, கௌரி காதற் படலம் : 162-168)

திருமணம்

மன்னன் சத்தியன் தன்மகன் சுத்தன்-கௌரி திருமண ஏற்பாட்டினைச் செய்தான். மணமக்களை,

தவம்பெற்ற தவமணி சாந்த கௌரியும்
சிவம்பெற்ற சுத்தனும் திகழ்கநீடு என்றார்

(கௌரி காண்டம், 8, ஊர்மகிழ் படலம் : 263-266)

என்று மன்னரும் மக்களும் வாழ்த்தினர்.

இல்லறம்

ஆன்றோர் கூறிய அறிவுரையின்படி கௌரி-சுத்தன் இல்லறம் அமைந்தது. அவர்கள் வாழ்க்கை ‘பண்ணுடன் பனுவல் போலே, சத்தியும் சிவனும் போலே’ அமைந்தது.

(பனுவல் = நூல், பாட்டு)

வாழ்க்கைத் துணை

கலியன் சித்தியைக் கைப்பற்றும் கருத்துடன் சூழ்ச்சிகள் பல செய்தான். கலிநகர் வீரர்களைப் பல இடங்களிலும் ஊடுருவச் செய்தான். கலியனின் சூழ்ச்சியைச் சத்தியனும் சுத்தனும் சித்திமானும் முறியடித்தனர்.

கௌரி கணவனிடத்து அன்பும் மதிப்பும் நாட்டுப் பற்றும் உடையவள். கலியனின், கொடுமையைக் கட்டுடன் அழிக்கச் சுத்தன் புறப்பட்டான். தானும் அவனோடு போர்க்களம் செல்லக் கௌரி ஆயத்தமானாள். அவள் உள்ளம்

நாதா, யாதும் தீதுவ ராமல்
யானும் உம்முடன் இருந்துபோர்க் களத்தில்
உதவி செய்க உவந்தே யருள்க

(கௌரி காண்டம், 32, போரணிந்த படலம் : 46-48)

என்பதால் விளங்குகிறது.

கணவனை விட்டுப் பிரியத் தயங்கினாள் கௌரி. அவனிடத்து அவள் கொண்டுள்ள அன்பினைக் கீழ்க் காணுமாறு வெளிப்படுத்தினாள்:

ஞானச் சுடரே, நானுன் பாதி
பிறந்தும் பிரியேன் இறந்தும் பிரியேன் ;
வீட்டிலும் பிரியேன் ; காட்டிலும் பிரியேன்
நாட்டிலும் பிரியேன் ஞாலத் துயிரே

(கௌரி காண்டம், 32, போரணிந்தப் படலம் : 68-71)

(ஞாலம் = உலகம்)

கணவனின் அன்பிற்கு இனியவள். அவன் பாராட்டிற்கு உரியவளாகக் கௌரி திகழ்ந்தாள். அழகாலும் பண்பாலும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் யோகத்தாலும் உயர்ந்து விளங்கினாள் கௌரி எனச் சுத்தன் பாராட்டியதால் அவளின் ஒப்பற்ற தன்மை புலப்படுகிறது.

கௌரி தன் எண்ணத்தாலும் உயர்ந்து விளங்கினாள். பகை சினம் தவிர்த்து உலகில் அன்பும் அறமும் ஆன்மநேயமும் தழைத்திட விரும்பினாள். போர் இல்லா உலகம் அமைய விரும்பினாள்.

ஓர்குல மாகப் பாரெலாம் வாழ்ந்தால்
போரெனும் பேச்சே வாரா தொழியும்
வெளிவே டங்களும் விதவித மதங்களும்
மண்பொன் வெறியும் மனத்தின் விகாரமும்
உள்ள மட்டிலும் உலகம் கலகமே

(கௌரி காண்டம், 34, உறுதிப் படலம் : 102-106)

தன்னுயிர் நீத்தாள்

போர்க்களத்தில் கணவனுக்குத் தீங்கு நேராமல் காக்கப் போர் வீரனாகப் போர்க்கோலம் பூண்டு அவனைத் தொடர்ந்தாள் கௌரி. பகைவரின் படுகுழியிலிருந்து கணவனைக் காத்தாள். அச்செயலில் தன் உயிரையும் துறந்தாள். சுத்தன் அவள் இழப்பைத் தாங்கொண்ணாமல் கதறினான்.

என்னுயிர்க்கு உயிரே ஆனாய் என்விழி மணியே ஆனாய்
இன்னுயிர்த் துணைவி யானாய் இறுதிமூச்சு எனக்கே ஈந்தாய்
மன்னுயிர் உள்ள மட்டும் வான்நிலம் உள்ள மட்டும்
அன்னையின் அன்பு மிக்காய் ஆருனை மறப்பார் ஈங்கே

     (கௌரி காண்டம், 35, இறுதிப் படலம் : 108-111)

2.2.4 சக்தி

சக்தி தோற்றம்

கௌரியின் மறுவடிவம் சக்தி. சுத்தனைச் சற்றும் பிரிய எண்ணாத கௌரி சக்தி என்னும் பெயரில் அரக்கர் நாட்டில் பிறந்தாள். சாந்தமுனிவர் இதனை,

சக்திபெற் றெழுந்தது தான வத்திலே
உத்தம நின்பணிக் குதவி ஆகவே

     (சாதன காண்டம், 1, கருணைப் படலம் : 123-124)

என முன்னறிவிப்பாக வெளியிட்டார்.

சக்தி சீகரன் மகள் சுந்தரிக்கும் அரக்கன் மாவலிக்கும் பிறந்தவள். மாவலி சுந்தரியைச் சீகரனிடமிருந்து கடத்திவந்து மணந்து கொண்டான். அத்தகைய அரக்கனின் மகள் சக்தி என்றாலும், அவள் கவியோகி சொல்வது போல்

செருகுல வாணர் நாப்பண் சேற்றினில் பூவைப் போல
வருகுல மணியாம் சக்தி வாய்மையும் தூய கற்பும்
கருவிலே திருவும் கொண்ட கன்னிகை ஆனாள்.

(தானவ காண்டம், 6, மாவலி எழுந்த படலம் : 89-91)

(செருகுல வாணர் = போரையே வாழ்வாகக் கொண்ட அரக்கர்கள் ; கருவிலே = பிறப்பிலேயே)

மேலும் அவள் புகையற்ற தீப்போலப் பொலிவுடன் திகழ்ந்தாள். முழுநிலவு போன்ற முகத்தாள்; பாலைவனத்தின் இடையே அமைந்த சோலை போன்றவள். புன்னகை முத்துகளை உதிர்க்கும் அமுதச்செல்வி. அன்புத் தேனால் ஆன செம்பொன் கொடி போன்றவள். போகனையும் சத்தியனையும் முதன்முதலில் காணும்போதே ‘வணக்கம் ஓம்’ எனக் கூறி வணங்கினாள். தன் உள்ளே கௌரியின் உயிர் கலந்தது என்னும் மெய் உணர்வை,

தண்ணருள் சோதி யாகத் தவத்தணல் வீசி என்னுள்
பெண்ணுயிர் புகுந்து கௌரி எனப் பெயர் பேசிற்று.

(தானவ காண்டம்,12 , சக்தி விருப்பப் படலம் : 71-72)

(தன்னருள் சோதி = அருள் ஒளி ; தவத்தணல் = தவமாகிய தணல் -உருவகம்; தணல் = தீ)

அவள், சுத்தன் தன் சித்தத்தின் உள்ளே புகுந்தான் என்றும் தானும் அவனும் ‘கிரணமும் சுடரும் போலப்’ பிரிவற்ற நேயம் பூண்டதாகவும் கூறினாள்.

இசைப் பயிற்சி

போகனிடம் குழலும் யாழும் பயில மாவலி தன் மகள் சக்தியை அனுமதித்ததை நோக்கத் தந்தையின் வாஞ்சைக்குரிய மகள் அவள் என்பதை அறியலாம். சத்தியன் குழலும் யாழும் அவளுக்குக் கற்பித்தான்.

கலைக் கோயில்

மாவலி தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க இசை, கூத்து, நாடகம், அரிய சிற்பம் இவற்றைப் பயிலுவதற்காக ஒரு கலைக்கோயிலையும் உருவாக்கினான். அக்கலைக் கோயிலில் சக்தி பாடிய பாடலைக் கேட்டுத் தானவர் தீய பண்புகள் மாறி, பரம்பொருள் ஒன்றென அறிந்தனர். பாட்டிற்கு ஏற்ப நடனம் ஆடும் திறனையும் சக்தி பெற்றாள். சன்மார்க்கக் கலைச் சங்கம் அமைவதற்குச் சக்தி துணை நின்றாள். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவியும் செய்தாள்.

துணிச்சல்

தானவ நாடு மெல்ல மெல்ல ஆன்மீகத் துறையில் நுழைவதையும் மங்கையும் மதுவும் துறக்கப்படுவதையும் அறிந்த மாவலி இதற்குக் காரணமான சத்தியனையும் போகனையும் சக்தியையும் சுட்டழிக்க ஆணை பிறப்பித்தான். மூவரும் அஞ்சாது இறையுணர்வில் ஈடுபட்டனர். சக்தி மிகத் துணிச்சலோடு தன் தந்தை மாவலியைத் தடுத்துக் ‘குடிவெறியால் கொடுமை செய்திடத் துணிந்தாய். சுடவேண்டும் என்றால் முதலில் என்னைச் சுடு’ என்று நின்றாள்.

போகத்தையும் போதையையும் தவிர்த்து ஆணும் பெண்ணும் பிரமசரியம் காத்துக் காமம் கடந்து சமயோக நேயம் பூண்டு வாழ வேண்டும் எனச் சக்தி வற்புறுத்தினாள். சிறைப்பட்டாலும் குண்டடிபட்டாலும் ஊர் தோறும் சென்று தொண்டு செய்யவேண்டும் என ஆன்ம நேயர்களை ஊக்குவித்தாள்.

தன் தந்தை மாவலி அடாத செய்த போது சக்தி எதிர்த்து நின்றாள். தொண்டர்கள் கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்டபோது மாவலி கள்குடிச் சட்டம் போட்டான். பெண்ணின்பத்தை வெறுத்தோரை இழிவுபடுத்தினான். சத்தியனையும் போகனையும் சுந்தரியையும் மெய்த்தொண்டர்களையும் சிறைப்படுத்தினான். இத்தகு நிலைமையை அறிந்த சக்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை ஆனால் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறப்பேன் என வெகுண்டாள். சொல்லியபடியே உண்ணாநோன்பு இருந்தாள். மக்கள் மாவலியைத் தூற்றினர். மாவலி மனம் மாறவில்லை. மாறாகப் பீரங்கியால் அவளைச் சுட்டுத் தீர்த்திட ஆணையிட்டான். தானவர்கள் ஆணையை நிறைவேற்றத் தயங்கினர். சுத்தனை மனத்தில் நிறுத்திப் போற்றினாள் சக்தி. மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். திடீர் என வானில் மின்னலிட்ட விமானங்களிலிருந்து குண்டுகள் விழுந்தன. தொண்டர்கள் சிறையைத் தகர்த்து அனைவரையும் விடுவித்தனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போகனும் சத்தியனும் சுந்தரியும் சக்தியோடு விமானம் ஏறிச் சீகர நாட்டை அடைந்தனர்.

தொண்டு

தூய தொண்டு வாழ்வையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவள் சக்தி. சுத்தனை எப்போதும் தன் உள்ளத்தில் கொண்டு அவன் வழியில் உலக உயர்விற்கும் பாடுபட்டாள்; சீல வாழ்க்கையும் செவ்விய சிந்தையும் கொண்டாள்.

அண்ணல் சுத்தனுக்கு அன்பை அளித்தவள்
கண்ணு லகைஅவனெனக் காண்பவள்
கண்ணும் சோறும் அவனென்று உணர்பவள்
எண்ணம் எண்ணாம் எலாம்அவன் எண்ணமே

     (சுத்த சக்தி காண்டம், 3, திருத்தொண்டர் படலம் : 231-234)

சாதி வேற்றுமையின்றி, சமய வேற்றுமையின்றி, மக்கள் அனைவரும் அடிமைத் தளையைக் களைந்து உரிமை பெற்று வாழ வேண்டும். இறை உணர்வுடன், தன்னலம் மறந்து வாழ வேண்டும் எனச் சக்தி உழைத்தாள்.

மாவலியும் கலியும் தவறுணர்ந்து மனம் திருந்தி வாழச் சக்தி துணை நின்றாள்.

2.2.5 மாவலி

மாவலி தோற்றம்

மாவலி அரக்கர் குலத் தோன்றல். ஆதி போகனுக்கும் இருள் மாயைக்கும் பிறந்த தானவர் மரபிலே வந்தவன்; இவன் தந்தை சிங்கன்; தாய் கமலி. மாவலியுடன் பிறந்தவர்கள் அனலன் என்னும் தம்பியும், மோகி என்னும் தங்கையும் ஆவர். அனலன் தன் அண்ணனுக்கு எதிரியாக ஆனான். மோகி சத்தியனின் தம்பி கலியனை மணந்தாள். அவனும் தன் அண்ணன் சத்தியனுக்கு எதிராகச் செயல்பட்டான். மாவலியின் அன்பிற்கு இலக்கானான்.

பேராசை

பொதுவாக, அரக்கர்க்கு உரிய இயல்புகள் அனைத்திற்கும் உரியவன் மாவலி. அனைத்தையும் தனது என்னும் பேராசை கொண்டவன்.

எனதுடல், எனதுயிர், எனது செல்வமே
எனதுலகு, எனதுவிண், எனது போகமே
எனதுஇசை, எனதுஅறிவு எனது கட்டளை
எனதுஎனது எனும்அவர் இழிபொ றாமையே

         (தானவ காண்டம், 6, மாவலி எழுந்த படலம் : 253-56)

(விண் = ஆகாயம் ; போகம் = இன்பம் ; இசை = புகழ்)

இராக்கத மணம்

காம வெப்பம் கரை கடந்திடச் சீகர மன்னன் மகள் சுந்தரியை மாவலி கடத்தி வந்து திருமணம் புரிந்து கொண்டான். அவள் இணக்கமின்றி அவள் கற்பையும் சூறையாடினான். மாவலியின் ஆட்சியில் அரக்கர்கள் பகலில் உறங்கி இரவில் காமவேட்டையாடுவதில் கைதேர்ந்தவர்கள்.

தானவ நாட்டில் எவ்விடத்தும் கள்ளும் ஊனும் குருதியும் நாறின; பொன்னையும் போக போக்கியங்களையும் பெண்களையும் அரக்கர்கள் நாடித் திரிந்தனர்.

நாத்திகன்

மாவலி கடவுள் மறுப்பாளன்; நாத்திகன். கடவுள் என்ற சொல்லையும் கேட்க விரும்பாதவன். ஏசுவின் புகழ்பாடும் 'கடவுள் ஆட்சி கதிர் விட்டு ஒளிர' என்ற அடியைக் கேட்டுச் சினந்தான்.

கடவுளும் கிடவுளும் கலந்துஎன் காதினைக்
குடைந்திடின் அவர்களைக் கொன்று போடுவேன்
திடமுறு லூஸிஃபர் செருக்கைப் பாடினால்
அடைகுவர் மதிப்பு

         (தானவ காண்டம், 8, மாவலி எழுந்த படலம் : 113-116)

லூஸிஃபர் - பிதா (இறைவன்)வை எதிர்த்தவன் பிதாவால் சபிக்கப்பட்டவன் என்பதால் அவன் நாத்திகன் என்பதை அறியலாம்.

காமமிகு கணவன்

மாவலி முரடன். ஆயினும் தன் மனைவி சுந்தரியிடம் ஆழ்ந்த காமமுடையவன். அவள் புன்னகை மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தான்.

சுந்தரி வந்துஒரு சுடரும் மென்னகை
அந்தமாய் அவனுளம் அழிய வீசினாள்

         (தானவ காண்டம், 8, மாவலி இசைந்த படலம் : 91-92)

(அந்தமாய் = அழகாய்)

சுந்தரியின் சொல்கேட்டுப் போகனையும் சத்தியனையும் மாவலி விடுதலை செய்தான்.

பிற மகளிர் உறவு

அழகிய மனைவி சுந்தரி இருந்தும் மாவலி பிற மகளிரோடும் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டான். சுந்தரி அவன் செயலைக் கடிந்தாள். அவனை ‘இனி ஒருக்காலும் தீண்டேன்’ என்று விரதம் பூண்டாள். மாவலி அவள் இருக்க ஒரு மனையும், உண்ண இருவேளை உணவும் அளித்தான். மனைவியைப் புறக்கணித்து வாழும் அவன் கொடுமனம் இதனால் தெளிவாகிறது.

மகளிடம் அன்பு பாராட்டல்

மகள் சக்தியிடத்து அளப்பரிய அன்புடையவன். அவள் போகனிடத்தும் சத்தியனிடத்தும் இசை பயில மாவலி அனுமதி வழங்கினான்.

பூமுகச் செல்வி யேநீ
இங்குவந்து இருக்கும் இந்த எளியநல் இசைவா ணர்கள்
எம்குணம் அறிந்து வாழு மட்டும்மென் இசையை மீட்டாய்
மங்கலம் உனக்கு உண்டு.

(தானவ காண்டம், 12, சக்தி விருப்பப் படலம் : 145-148)

என்று மாவலி அனுமதியும் ஆசியும் வழங்கினான்.

சக்தி யாழ் மீட்டி இசைத்த ‘திராய்ப் போர்ப் பாட்டினைக் கேட்ட மாவலி’ அதில் உள்ளம் தோய்ந்தான். தன் மகளைப் பாராட்டினான்.

மதுரக்கீதம் மாந்திய மயக்கில் என்சேயே
நலம்பெறு நாதசக்தி நயத்தினை இன்றுகண்டேன்
இவளவு கற்றநீஉன் இச்சைஒன்று இயம்பாய்

         (தானவ காண்டம், 15, யாழிசைப் படலம் : 138-140)

என்று பாராட்டி அவள் விருப்பம் ஒன்றையும் கேட்டான். சக்தி இசையையும் மற்ற கலைகளையும் இந்த நாட்டு மக்கள் எளிதில் கற்றிடக் கலைக்கோயில் ஒன்றைத் தன் தந்தை அமைத்துத் தரவேண்டுமெனக் கேட்டாள். அவள் கருத்திற்கேற்ப, கலைக்கோயில் ஒன்றையும் அழகுற அமைத்துத் தந்தான்.

இதனால் மாவலி தன் மகளிடம் கொண்ட அன்பும் இசையின்பால் அவன் கொண்ட ஆர்வமும் அறியலாம்.

மாவலி கொடுமை

தன் கொள்கைக்கும் பகுத்தறிவிற்கும் மாறாகக் கடவுளின் பெயராலும் கலைகளின் பெயராலும் அரக்கர்கள் மனந்திருந்தி வாழ்வதை அறிந்து மாவலி மனம் கொதித்தான். போகனும் சத்தியனும், சுந்தரியும், சக்தியும், சன்மார்க்கத் தொண்டர்களும் தனக்கு எதிராகச் செயல்படுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்திரர்க்கும் கிடைத்திடாச் சித்திராங்கிகளின் ஆட்டமும் பாட்டமும் காமுகர் களியாட்டங்களும், ஊனும் கள்ளும் ஒழியாது உண்டு மயங்கலும் போதை தலைக்கேறி விரசமாய்ப் பாடலும் தானவத்தின் தனிவாழ்க்கை ஆகும். இன்னும் சொன்னால் ஆணும் பெண்ணும் அறிவிழந்தனர்; நெறி பிறழ்ந்தனர். இப்படி எல்லாம் இருந்த தானவ நாடு கலைக்கோயில் திருப்பணியாலும் அன்பர்களின் முயற்சியாலும் படிப்படியாகத் திருந்தியது. இவ்வாறு திருந்தியதை அறிந்த மாவலி இம்மாற்றங்களுக்கு எல்லாம் காரணமானவர்களைச் சுட்டொழிக்கத் துணிந்தான். போகன், சத்தியன், சுந்தரி ஆகியோரைச் சிறையில் இட்டான். தந்தையின் அடாச்செயலைக் கண்டு அதனைச் சக்தி எதிர்த்தாள். உண்ணாநோன்பு மேற்கொண்டாள். மாவலியின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு உதவியாக விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. சிறைச்சாலை உடைக்கப்பட்டது. சிறைக்காவலர் செய்வது அறியாது திகைத்தனர். போகனும் சத்தியனும் சுந்தரியும் சக்தியும் விமானம் ஏறிச் சீகரம் சென்றனர். மாவலியின் எண்ணம், ஆணவம், அகங்காரம் தூள் தூள் ஆயிற்று.

அறிவியல் வளர்ச்சி

தானவ நாடு அறிவியல் முன்னேற்றம் கண்ட நாடு. குண்டுகள், கண்ணிகள், நச்சுப் புகை, சூத்திரப் படகுகள், விமானங்கள், கரி, இரும்பு, எண்ணெய், மின்சாரம், வானொலி இவ்வளவு இருந்தும் மாவலியால் வெற்றி பெற இயலவில்லை. ஆயுத ஆற்றலைவிட ஆன்மிக ஆற்றல் மிக்க வலிமை வாய்ந்தது என்பதை மாவலி ஏற்கவில்லை.

தன் தோல்விக்கெல்லாம் தன் தம்பி அனலன்தான் காரணம் என்று மாவலி எண்ணினான். ‘அனலனின் ஆணவபுரியை அசுர பீரங்கிகள் வைத்துத் தகர்ப்பேன்; காஸ்மிக் கதிர்களைக் கக்குவேன்; இங்கே விசையை இப்படி அழுத்தினால் அங்கே அனல் பற்றி எரியும்; குண்டுகள் பொழிவேன்; காந்த வெடிகளால் கப்பலை உடைப்பேன்; அறிவியல் கருவிகளை அழிவிற்குப் பயன்படுத்துவேன்’ என்று முழங்கினான்.

உறவு முரிந்தது

வக்கிரன் சொல்லைக் கேட்டுத் தன்னால் உயர்ந்த கலியனையும் மோகியையும் சிறைப்படுத்த ஆணை இட்டான். தூமகேது கலியனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு மோகியைத் தான் கைப்பற்றிக் கொண்டான். இறுதியில் அவளும் கலியனால் கொல்லப்பட்டாள்.

மாவலியும் அனலனும்

தானவ மன்னன் மாவலியும் ஆணவ மன்னன் அனலனும் உடன்பிறப்பினராயினும் ஒருவரை ஒருவர் மாய்த்து ஒழிப்பதிலேயே செருக்குற்று இருந்தனர். இருவரும் அழிவு தரும் படைக்கருவிகளைப் படைத்துக் கொண்டு போரில் அவற்றைப் பயன்படுத்தினர். உறவை மறந்து உறுபகையால் மோதிக் கொண்டனர். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த தம்பி, நெப்போலியனைப் போல, அணுகுண்டு வெறிபிடித்த இட்லரைப் போல, மூர்க்கமாய்ப் போர் செய்கின்றானே என்று பதறினான் மாவலி. அனலன் சினந்து கோபால்ட் குண்டை வீசினான்; வெடிகளை வீசினான். இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்டன.

ஆயிரம் கப்பல் செல்லும் ஆயிரம் கப்பல் வீழும்
ஆயிரம் படைகள் ஏகும் ஆயிரம் படைகள் சாகும்
ஆயிரம் பொறிகள் முட்டும் ஆயிரம் பொறிகள் வெட்டும்
ஆயிரம் ஆயுதங்கள் அனற்பட்ட பஞ்சு மாமே

(சுத்த சக்திக் காண்டம், 17, அணுப்போர்ப் படலம் : 51-54)

(பொறிகள் = போர் இயந்திரங்கள்)

எங்கும் பிணக்குவியல்கள். ஊர்கள் மண்ணாயின. கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. பல்லாண்டுகளாகச் சேர்த்த படைகள் அழிந்தன. அண்ணனும் தம்பியும் போரிட்டனர். ஒருவர் கையை ஒருவர் வெட்டப் பாய்ந்தனர். இறுதியில் அனலன் தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். ‘ஆள்வன்இவ் ஆணவத்தை அவுணன் யான்’ என்று முழங்கிய மாவலியை நோக்கிக் குண்டுகள். உயிருக்கு அஞ்சி, ‘தப்பினேன், பிழைத்தேன்’ என்று ஓடினான் மாவலி. சுந்தரி விடுத்த கடிதம் எரி நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலாயிற்று. அவனிடம் கொண்ட இரக்கத்தால் அவள் எழுதிய கடிதத்தில், ‘உன்னுயிரும் மன்னுயிரும் வேறில்லை. உயிருக்குயிராய் ஒருபொருள் உள்ளது. அதுவே பரம்பொருள். அன்பும் அருளும் மேற்கொண்டு உலகில் அழகாய் வாழலாம். போரால் நாடுகள் சுடுகாடுகள் ஆயின. பசுவள நாடு பாலையாயிற்று. மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர். மானமிழந்து மக்கள் வாழ்கின்றனர். இந்நிலை தீரச் சங்கத் தொண்டர்கள் கூடி அருள் குடியரசை அமைத்துள்ளோம். அதில் இணைந்து புகழ்பெறுவாய்’ என்று தன் உள்ளத்தை வெளிப்படுத்தினாள். கடிதத்தைக் கண்டதும் அவளைக் கொல்லவே துணிந்தான் மாவலி. மீண்டும் குண்டுகள் விழுந்தன. இனி உயிர் பிழைப்பது தவிர வேறொன்றும் இல்லை என எண்ணிச் சீகரம் சேர்ந்தான். சீகரன் அவனை வரவேற்று அவனுக்கு நன்மைகள் கூறித் திருத்தினான். அவனும் சுத்தனுக்குச் சேவை செய்ய முன்வந்தான்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

பாரத சக்தி மகாகாவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?

விடை
2.

சுத்தானந்த பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

விடை
3.

சாந்த முனிவர் மூலம் எவற்றை அறிந்து சுத்தன் மகிழ்ந்தான்?

விடை
4.

சுத்தன் தன் தொண்டர்களை எத்தனை குழுக்களாக அமைத்தான்?

விடை
5.

கலியன் எத்தகையவன்?

விடை