1.2 குகைக் கல்வெட்டுகளின்
மொழியும் எழுத்தும்
குகைக் கல்வெட்டுகள் ஒன்றிரண்டு வரிகளையே
உடையன.
எல்லாக் கல்வெட்டுகளும் குறிப்பிடும் செய்திகள் சிலவே.
குகைகளில் தங்கியிருந்த துறவிகளுக்கு அரசர்களும்,
வணிகர்களும் அளித்த தானம் பற்றித் தெரிவிக்கின்றன அதாவது,
துறவிகள் தியானம் செய்வதற்கும், உறங்குவதற்கும் உரிய கல்
படுக்கைகளையும், அமர்வதற்கு உரிய கல் இருக்கைகளையும்
செதுக்கியோர் பற்றித் தெரிவிக்கின்றன. குகைகளில் தங்கியிருந்த
துறவிகளின் பெயர்களைத் தெரிவிக்கின்றன.
இச்செய்திகளைக் குறிப்பிடும் குகைக் கல்வெட்டுகள்
எந்த
மொழியில் எழுதப்பட்டன என்பது பற்றியும் எந்த எழுத்து
வடிவில் எழுதப்பட்டன என்பது பற்றியும் இங்கே காண்போம்.
1.2.1
குகைக் கல்வெட்டுகளின் மொழி
குகைக் கல்வெட்டுகளின் வாசகங்களில் உள்ள
ஒலிகள்,
சொற்கள், தொடர்கள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் தமிழ்
மொழியே ஆகும். இக்கல்வெட்டுகளை உருவாக்கியவர்கள்
பெரும்பாலும் சமணர்கள். இவர்களின் தாய்மொழி பிராகிருதம்.
எனவே இக்கல்வெட்டுகளில் பிராகிருத மொழிச் சொற்கள்
கலந்திருந்தன. எனினும் குகைக் கல்வெட்டு மொழியின் இலக்கண
அமைப்பு முழுவதும் தமிழாகவே உள்ளது. எனவே குகைக்
கல்வெட்டுகளின் மொழி தமிழே எனலாம்.
1.2.2
குகைக் கல்வெட்டுகளின் எழுத்து
குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ்.
ஆனால்
அம்மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்தோ பிராமி
வடிவம்
ஆகும். இதனால் இவற்றைப் பிராமிக் கல்வெட்டுகள்
என்றும்
அழைத்தனர். பிராமி என்பது கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல்
கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பல்வேறு
பகுதிகளில் பேசப்பட்ட பல்வேறு மொழிகளை எழுதுவதற்குப்
பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் என்று கூறப்படுகிறது.
இக்கால கட்டத்தில் இந்தியா முழுவதிலும் தோன்றியுள்ள
கல்வெட்டுகளின் எழுத்து வடிவம் ஒன்று போல் உள்ளது.
வட இந்தியாவில் அசோகர் காலத்தில் எழுதப்பட்ட பிராகிருதம்
மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுகள், தமிழ்நாட்டுக் குகைகளில்
உள்ள தமிழ்க் கல்வெட்டுகள், ஆந்திராவில் குண்டூர்
மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு என்னும் இடத்தில்
புத்தபிரானின் புனித எலும்பு வைக்கப்பட்டுள்ள
கற்பேழை மீது
உள்ள கல்வெட்டு, அண்டை நாடான இலங்கையில் உள்ள
சிங்களக் கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் ஏறத்தாழ ஒரே
எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்து வடிவே
பிராமி என்று சொல்லப்படுகிறது.
குகைக் கல்வெட்டுகளை உருவாக்கிய சமண, பௌத்த
துறவிகளின் தாய்மொழி முறையே பிராகிருதமும் பாலியுமாம்.
இம்மொழிகளின் எழுத்து பிராமியாக இருந்தது. எனவே சமயம்
பரப்ப வந்த இத்துறவிகள் தமிழ்மொழி வழியாகச் சமயம்
பரப்பும்போது பிராமி எழுத்துகளைத் தமிழகத்தில்
பயன்படுத்தினர். இதனால் குகைக் கல்வெட்டுத் தமிழும் பிராமி
வடிவில் எழுதப்பட்டது என்று கூறுவர்.
1.2.3
பிராமி பற்றிய கருத்துகள்
“தொடக்க காலத்தில் தமிழில் ஏதோ
ஒரு வகையான
தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்கு
வந்து வழங்கிய பிறகு அதற்கு முன்பு வழங்கி வந்த பழைய
தமிழ் எழுத்து மறைந்து போய்ப் பிராமி எழுத்து நிலைத்து
விட்டது” என்று கூறுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
(சங்க
காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள், ப.9)
பிராமி எழுத்தானது திராவிட மொழிகளுக்காக
உருவாக்கப்பட்டது என்றும், குறிப்பாக அவற்றுள்
பழைமையானதான தமிழுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்றும்,
பின்னாளில் பிராகிருத மொழி அதனைப் பயன்படுத்திக்
கொண்டது என்றும், நாளடைவில் இந்தியா முழுவதும் அதுவே
வழக்கத்தில் நிலவியது என்றும் தி.நா.சுப்பிரமணியன்
கருத்துத்
தெரிவித்துள்ளார். (தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள்,
தொகுதி - 3, பகுதி-2.)
எவ்வாறாயினும், பழங்காலத்தில் இந்தியா
முழுவதிலும்
உள்ள மொழிகள் பிராமி எழுத்தைப் பயன்படுத்தின என்பதையும்
வடநாட்டில் அது பிராமி எனவும் தமிழ்நாட்டில்
தமிழ்
எனவும் வழங்கியது என்பதையும் நடன.
காசிநாதன்
தெளிவுறுத்தியுள்ளார். தமிழைப் பிராகிருத
மொழியில் தாமிலி
என வழங்கியுள்ளனர்.
1.2.4
தென்பிராமியும் வடபிராமியும்
தென் பிராமிக்கும் வடபிராமிக்கும்
இடையே
குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் சில உண்டு. அசோகரது
கல்வெட்டுகளில் (வடபிராமி) மெய்யெழுத்து புள்ளியிட்டு
எழுதப்பட்டது. ஆனால் தென்பிராமியில் அமைந்த குகைக்
கல்வெட்டுகளில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் எழுதப்பட்டது.
க்
என்பது அசோகர் கல்வெட்டில் +் என எழுதப்பட்டது.
குகைக் கல்வெட்டில் +
என எழுதப்பட்டது.
தமிழுக்குச் சிறப்பான ஒலிகளாகிய எகர ஒகரக்
குறில்களும்,
ற,ன,ழ எனும் மெய்களும் அசோகர் கல்வெட்டுகளில்
இல்லை.
ஆனால் தமிழ்க் குகைக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
பிராமி வருவதற்கு முன்பே தமிழகத்தில் வழக்கில் இருந்த
பழைய எழுத்து வடிவத்திலிருந்து இவ்வடிவங்கள்
இடம்பெற்றிருக்க வேண்டும்.
1.2.5
கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் கூறிய முறை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட
எழுத்துகள் தட்ப வெப்ப மாற்றங்கள், பாறைகளில் ஏற்பட்ட
கீறல், வெடிப்பு, புள்ளி புரைசல்கள் போன்றவற்றால் மழுங்கியும்
உருமாறியும் உள்ளன. எனினும் அறிஞர்கள் பெரும்பாலான
கல்வெட்டுகளை மிகவும் முயன்று படித்துப் பொருள்
கூறியுள்ளனர். இங்குச் சில கல்வெட்டுகள் படித்துப் பொருள்
காணப்பட்டமையைக் காணலாம்.
திருப்பரங்குன்றக்
கல்வெட்டு
மதுரை மாநகருக்குத் தெற்கே ஐந்து கல்
தொலைவில்
உள்ள திருப்பரங்குன்ற மலையில் உள்ள குகைகளில்
பழங்காலத்தில் சமணர்கள் தங்கியிருந்தனர். இம்மலையின்
மேற்குப் புறத்தில் 55 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட
ஒரு பெரிய குகை உள்ளது. இக்குகையில் கற்படுக்கைகள் பல
உள்ளன. அவற்றுள் ஒரு கற்படுக்கையின் தலைமாட்டில் 31
எழுத்துகளைக் கொண்ட ஒருவரிக் கல்வெட்டுக் காணப்படுகிறது.
இதனை டி.வி. மகாலிங்கம்,
எருக்கோடூர்
இழ குடும்பிகன் போலாலையன்
செய்த ஆய்சயன நெடு சாதன(ம்) |
என்று படித்துள்ளார். இதற்கு இலங்கை
(ஈழம்) யிலிருந்து
வந்து எருக்கோட்டூரில் வசிக்கிற குடும்பிகனான
போலாலையன் இந்தக் குகையின் கற்படுக்கைகளை,
உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும்
அமைத்தான் என்று பொருள் கூறுகிறார். சயனம், சாதனம் என்ற
வடசொற்களுக்கு முறையே உறக்கம், தியானம் என்று பொருள்
கொள்கிறார். (Early South Indian
Palaeography, pp.
250 - 251) மயிலை சீனி. வேங்கடசாமி
இதே கல்வெட்டை.
எருக்காடூர்
இழ குடும்பிகன் பொலாலையன்
செய்தா ஆய்சயன் நெடு சாதன் |
என்று படித்து எருக்காட்டூர்
ஈழக் குடும்பிகன் (வாணிகன்)
பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானம்
செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து
அமைத்தவன் ஆய்சயன் நெடுஞ் சாத்தன் என்று பொருள்
கூறுகிறார். (சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டுகள், பக். 124-125)
செய்தா என்பதில் இறுதி னகர மெய் கெட்டுள்ளது.
நெடு என்ற
அடைக்குப் பின்னர் வல்லினம் வரும்போது ஞ்
என்ற இன
மெல்லினம் மிகவில்லை. சாத்தன் என்பதில் தகரம்
இரட்டிக்கவில்லை. ஈழம் என்பது இழ என
எழுதப்பட்டுள்ளது.
பேசுவது போல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
மறுகால்தலைக் கல்வெட்டு
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டைக்கு
வடகிழக்கே பத்து கல் தொலைவில் மறுகால்தலை என்னும்
சிற்றூர் உள்ளது. இங்குப் பூவில் உடையார் மலை என்னும்
மலையில் இயற்கையாக அமைந்த குகை உள்ளது. இங்கு ஒரே
வரியில் பதினோர் எழுத்துகளைக் கொண்ட சிறிய கல்வெட்டு
உள்ளது. இதனை ஐராவதம் மகாதேவன்,
வேண்
காஸிபன் கொடுபித கல் காஞ்சணம் |
என்று படித்து, வேண்
காசிபன் என்பவனால்
கொட்டுவிக்கப்பட்ட (செதுக்குவிக்கப்பட்ட) கல்லால்
ஆகிய காஞ்சணம் என்று பொருள் கூறுகிறார்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
குகைக்
கல்வெட்டுகள் தோன்றக்
காரணமானவர்கள் யார்? |
|
2.
|
முதன்முதலாகக்
குகைக் கல்வெட்டு எந்த
இடத்தில், யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? |
|
3.
|
கெமைடு
என்பவர் கண்டுபிடித்த குகைக்
கல்வெட்டு யாது? |
|
4.
|
குகைக்
கல்வெட்டு எத்தனை வரிகளை
உடையது? |
|
5.
|
குகைக்
கல்வெட்டுகளின் மொழியை எழுதப்
பயன்படுத்திய எழுத்து வடிவம் யாது? |
|
6.
|
குகைக்
கல்வெட்டுகளில் எகர, ஒகரக் குறில்கள்
உண்டா? |
|
7.
|
குகைக்
கல்வெட்டுகளில் காணப்படும்
தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள மெய்ஒலிகள்
யாவை? |
|
8.
|
குகைக்
கல்வெட்டுகளில் மெய்யெழுத்து
எவ்வாறு எழுதப்பட்டது? |
|
9.
|
குகைக்
கல்வெட்டுகளைப் படிப்பதில் உள்ள
இடர்ப்பாடுகளைப் பற்றிக் கூறியவர் யார்? |
|
|