5.3 அணுகுமுறைகள்

ஆய்வாளர் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் தரவுகளைச் சேகரிக்கும் திறன் உடையவராகவும், நம்பிக்கை உடையவராகவும் தகவலாளர்களிடம் இருந்து தரவுகளை முழுமையாகப் பெற்றுச் சேகரிக்கும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். சமூகம் ஏற்றுக் கொண்டவை பற்றியோ அல்லது ஏற்றுக் கொள்ளாதவை பற்றியோ கருத்தில் கொள்ளாமல் தரவுகளைச் சேகரிக்க வேண்டும். ஆய்வுக்கான தரவுகளைச் சேகரிப்பதில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவை,

1) உற்று நோக்கல்
2) நேர் காணல்
3) வினாத் தொகுப்பு

இவற்றில் நுட்பமான உத்திகள் பலவும் மேற்கொள்ளப்படும்.

5.3.1 உற்று நோக்கல்

களப்பணித் தரவுச் சேகரிப்பில் முதன்மையான கருவி உற்று நோக்கல் என்பதாகும். உற்று நோக்கல் என்பது குறிப்பிட்ட நோக்கத்தை மனத்தில் வைத்துக் கொண்டு நடைபெறும் அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை நுணுக்கமாக நோக்குவதாகும்.

உற்று நோக்கலின் வகைகள் :

1) பங்கு பெறும் உற்று நோக்கல் (Participant observation)
2) பங்கு பெறா உற்று நோக்கல் (Non-Participant observation)
3) செய்காட்சி முறை (Arrangement observation)
  • பங்கு பெறும் உற்று நோக்கல்
  • பங்கு பெறும் உற்று நோக்கலில் நாட்டுப்புற வழக்காற்று நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதில் ஆய்வாளரும் முழுமையாகப் பங்கு கொண்டு செயல்களில் விவாதங்களில் கலந்து கொள்வதாகும்.

    சான்றாக :

    நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பில் பின்பாட்டுப் பாடுபவராகவோ, விடுகதைகளைப் போடுபவராகவோ, வில்லுப் பாட்டில் கதை கேட்கும் உதவியாளராகவோ வழக்காற்று நிகழ்வுகளில் தம்மை இணைத்துக் கொண்டு உற்று நோக்கலில் ஈடுபடலாம்.

  • பங்கு பெறா உற்று நோக்கல்
  • ஆய்வாளர் ஆய்வுச் சூழல் மற்றும் நிகழ்விலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு தரவுகளைத் திரட்டும் முறை பங்கு பெறா உற்று நோக்கல் எனப்படும். சமூகப் பண்பாட்டுச் சூழல்களையும், சிக்கல்களையும் ஆய்ந்திடப் பங்கு பெறா உற்று நோக்கல் சிறந்த முறையாகும். பங்கு கொள்ளாமல் பார்வையாளராக ஒதுங்கியிருந்து நிகழ்ச்சியைக் கவனிக்கும் போது, சேகரிப்பாளர் நிகழ்ச்சியின் இயற்கையான போக்கில் குறுக்கிடாமல் இருக்கின்றார். குறிப்புகள் எடுத்துக் கொள்ளவும், நிகழ்ச்சியினை ஒலிப்பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அவருக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் தகவலாளிகளின் கவனத்தைத் திருப்பாமலும் இருக்கும். பங்கு பெறும் உற்று நோக்கலை மேற்கொள்ளும் ஆய்வாளருக்குக் கிடைக்கும் அனுபவப் பரப்பும், தகவல் அளவும் பங்கு பெறா உற்று நோக்கலை மேற்கொள்பவருக்குக் கிடைப்பதில்லை. மேலும் ஆய்வாளர் தம்முள் ஒருவராகக் கலக்காமல் பட்டும் படாமல் இருப்பதைப் பல நேரங்களில் தகவலாளர்கள் விரும்புவதில்லை. இத்தகைய இடர்ப்பாடுகள் இதில் காணப்படுகின்றன.

  • செய்காட்சி முறை
  • செய்காட்சி முறை என்பது பரிசோதனை முறையில் ஆய்வாளர் தாமே ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து, தம் தேவைக்கேற்ப நிகழ்வின் காரணிகளைக் கட்டுப்படுத்தியும் நீக்கியும் உற்று நோக்குவதாகும். ஆய்வாளரே ஒரு நிகழ்வை உருவாக்கிச் செய்து காண்பதால் இது செய்காட்சி முறை எனப்படுகிறது.

    ஆய்வாளர் இம்முறையைப் பயன்படுத்தித் துல்லியமான விடை காணும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் நிகழ்வை மீண்டும் மீண்டும் உருவாக்கி அறிந்து கொள்ளலாம். நிகழ்கலைகளின் ஆட்ட முறைகளைத் துல்லியமாகப் படம் எடுப்பதற்குச் செய்காட்சி முறை பயன்படுகிறது.

    5.3.2 நேர்காணல்

    ஆய்வாளர் தகவலாளரை நேரில் சென்று கண்டு உரையாடுவது நேர்காணல் ஆகும். இதனைப் பேட்டி முறை என்றும் குறிப்பிடுவர். நாட்டுப்புற வழக்காற்றுத் தகவலாளர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாதவர்கள். ஆதலால், அவர்களிடம் தரவுகள் சேகரிக்க நேர்காணல் முறையே சிறந்ததாக அமைகிறது. நேர்காணலுக்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதும் உருவாக்கித் தருவதும் நேர்காணலின் முதல்படியாகும். தகவலாளரின் ஒத்துழைப்பின்றி நேர்காணலை வெற்றிகரமாக நடத்த இயலாது. நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு அதன் அடிப்படையில் நடத்தப்படும் நேர்காணலே சரியான தகவல்களைத் திரட்டித் தரும்.

    களப்பணியில் தகவல் திரட்டுவதன் அடிப்படையில் நேர்காணலை இருவகைப் படுத்தலாம்.

    1) கட்டமைப்புடைய நேர்காணல் (Structured Interview)
    2) கட்டமைப்பில்லா நேர்காணல் (Unstructured Interview)
  • கட்டமைப்புடைய நேர்காணல்
  • நேர்காணலின் நோக்கம், பயன், வினாக்கள், அணுகுமுறை ஆகிய அனைத்தையும் முன்னரே தீர்மானித்துத் திட்டமிட்டு நடத்தப் படுவதாகும். தரவுகளைத் துல்லியமாகப் பெற இம்முறை உதவும். ஆனால் இம்முறை இயல்பான சமூகச் செயலாக இல்லாமல் எந்திரத்தனமாகவும் செயற்கைத் தன்மையுடையதாகவும் ஆகிவிடலாம்.

  • கட்டமைப்பில்லா நேர்காணல்
  • நேர்காண்போரின் திறமை, தகவலாளியின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப அந்தந்த நேரத்தில் அமைத்துக் கொள்வது கட்டமைப்பில்லா நேர்காணல் ஆகும். இது நெகிழ்ச்சியும், இயல்புப் போக்கும் உடையது. முன்னரே வினாக்களை உருவாக்காமல் தகவலாளியை அணுகி நேர்காணலைத் தொடங்குவார். தகவலாளியும் பரந்த அளவில் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள், வழக்காற்று அனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகள் போன்றவற்றை இயல்பான போக்கில் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைப்பார். அதிலிருந்து ஆய்வாளர் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நாட்டுப்புற வழக்காற்றுக் களப்பணிக்குக் கட்டமைப்பில்லா நேர்காணல் மிகவும் பயன் தரும்.

    5.3.3 வினாத் தொகுப்பு

    ஆய்வுப் பொருள் குறித்த வினாக்களை எழுத்து வடிவில் பட்டியலாகத் தொகுத்துத் தகவலாளர்களிடம் கொடுத்துப் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வது வினா நிரல் முறை ஆகும். வினா வரைவு என்பது எழுத்துரையாக வரிவடிவில் அமைகின்றது. ஒரு பெருங்குழுவின் (சமூகக் குழு அல்லது இனக்குழு) சார்பாளராக உள்ள சில தகவலாளிகளைத் தேர்ந்தெடுத்து வினா நிரலை வழங்க வேண்டும். அவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆராய்ந்து அதில் கிடைக்கும் முடிவுகளை இறுதியானவைகளாகக் கொள்ள வேண்டும். இந்த முடிவுகள் பெருமளவில் அக்குழு முழுவதற்கும் பொருந்துவதாக அமையும். அப்பெருங்குழு முழுமைக்கும் பொதுவானதாக அமையும் தன்மை இவ்வினா நிரலுக்கு உண்டு. இனவரைவியல், நிகழ்கலைகள், வழக்காறுகள் குறித்த கருத்துக் கணிப்புகளுக்கு வினா நிரல் முறையைப் பயன்படுத்தி விடை காணலாம். ஆனால் நாட்டுப்புறவியல் ஆய்வுகளைப் பொறுத்த வரையில் வினா நிரலின் பயன்பாடு குறைவு என்றே கூறலாம்.

    நாட்டுப்புற வழக்காறுகளை எடுத்துரைப்போர் நிகழ்கலைக் கலைஞர்கள், நாட்டுப்புறப் பார்வையாளர்கள், சடங்குகளை நிகழ்த்துவோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர்களாக உள்ளனர். இவர்களிடம் வினா நிரலைக் கொடுத்துத் தகவலைப் பெறுதல் என்பது இயலாத செயல்.

  • உதவியாளர் மூலம் அணுகுதல்
  • ஆய்வாளர் தரவுகளைச் சேகரிக்கக் களத்திற்குத் தானாக நேரடியாகச் செல்லாமல், அக்களப்பகுதியில் வாழும் நண்பர், உறவினர் போன்றவரின் மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டு, உறவினை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றொரு முறை. இவ்வாறு உதவுபவர் அவருக்குத் தகவலாளியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

    ஆய்வாளர் அரசு அதிகாரிகளையும் தமக்கு உதவுபவர்களாக வைத்திருக்கக் கூடாது. அவர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மூலம் மக்களை அணுகக் கூடாது. அவ்வாறு அணுகும் போது ஆய்வாளருக்குப் பல வேளைகளில் உண்மையான தகவல்கள் கிடைக்காமல் போகலாம்.

    இவ்வாறு நமக்கு உதவுபவரைத் தெரிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவரைத் தெரிவு செய்தபின் ஆய்வுக் களத்தில் உள்ள மக்கள் ஆய்வாளரை அவரது நண்பராகவோ அல்லது உறவினராகவோதான் பார்ப்பர். அவரை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்களோ அவ்வாறே ஆய்வாளரையும் நோக்குவர். எனவே ஆய்வாளர் இதில் கவனமாகச் செயல்பட்டால் கள ஆய்வின் போது பல தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1)

    நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள் யாவை?

    (விடை)
    2)
    தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் யாவை?
    (விடை)
    3)
    தரவுகளின் வகைகளைக் கூறுக.
    (விடை)