தன் மதிப்பீடு : விடைகள் - II

5. புராணக் கதைப்பாடல்களில் கதைநாயகர்கள் பெறுமிடம் பற்றிக் கூறுக.

புராணக் கதைப்பாடல்களில் தேவர்கள், தெய்வங்கள், மனிதர்கள், அரக்கர்கள் போன்றோர் கதைப்பாத்திரங்களாக வருகின்றனர். இக்கதைப் பாத்திரங்கள் இதிகாசங்களிலோ புராணங்களிலோ காணப்படும் பாத்திரங்கள் போன்று புராணக் கதைப்பாடல்களில் அமைவதில்லை. புராணங்களில் சிறந்த வீரராகச் சிறந்த கதாநாயகராகச் சித்திரிக்கப்படும் பாத்திரங்கள் புராணக் கதைப் பாடலில் வலுவிழந்து காணப்படுகின்றன. சான்றாகப் பாரதத்தில் வலிமையுடையவனாகக் காணப்படும் துரியோதனன் கதைப்பாடலில் வலிமையுடையவனாகக் காணப்படவில்லை. அதே போல் அல்லி என்னும் பாத்திரத்தின் பண்புகளும் ஒன்று போலக் காணப்படவில்லை. இதற்குக் காரணம் பாத்திரத்தை விடக் கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தமையே ஆகும். பாத்திரங்கள் கதையை வளர்க்க உதவினால் போதும் என்ற நிலையிலேயே கதை நாயகர்களைப் படைத்துள்ளனர் புராணக் கதைப்பாடலாசிரியர்கள் எனலாம்.