புராண, இதிகாசங்களில் இடம் பெற்றுள்ள துணுக்குகளை
அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளின் விரிந்த வடிவமே
புராணக் கதைப்பாடலாகும். இது புராணக் கதைப்பாடல்,
புராணச் சார்புக் கதைப்பாடல், சிறு தெய்வ வழிபாடு வளர்ந்த
வளர்ச்சி பற்றிய கதைப்பாடல் என
வகைப்படுத்தப்
பட்டிருப்பினும் ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் சேர்த்து,
‘புராணக் கதைப்பாடல்’ என்ற தலைப்பிற்குள்ளேயே
உள்ளடக்கி விளக்கம் தருகின்றனர். அவ்விளக்கமே இப்பாடப்
பகுதியிலும் எடுத்து உரைக்கப்பட்டுள்ளது.
புராணக்
கதைகளும் புராணக் கதைப்பாடல்களும் ஒரே
பாடுபொருளைக்
கொண்டிருப்பினும் பாடுகளத்தால் இரண்டும்
வேறுபடுகின்றன. பாடமாக இடம் பெற்றுள்ள கதைப்பாடல்கள்
அனைத்தும் கிராமங்களையே பாடுகளமாகக் கொண்டுள்ளன.
புராணங்களில்
வரும் கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும்
மட்டுமே கருவாகக் கொண்டு விளங்குவது புராணக்
கதைப்பாடல் என்றும், புராண இதிகாச நிகழ்வுகளைக் கருவாகக்
கொண்டு பரந்த அளவில் கற்பனை கலந்து பாடப்படுவது
புராணச் சார்புக் கதைப்பாடல் என்றும் வரையறை செய்தாலும்
இரண்டிற்கும் பாடுபொருளாக அமைவன புராண மற்றும்
இராமாயண, மகாபாரதத்தில் இடம்பெறும் சிறு சிறு நிகழ்வுகளே.
இவற்றுள் இராமாயணத்தை விட, பாரதக் கதைகளே மிகுந்த
அளவில் கதைப்பாடலாகப் பாடப்
பெற்றுள்ளன.
இக்காரணங்களால் புராணம் மற்றும் புராணச் சார்புக்
கதைப்பாடல்கள் ஆகிய இரு வகைகளும் ‘புராணக்
கதைப்பாடல்’ என்று ஒரு கூறாக வகைப்படுத்தி இப்பாடம்
எடுத்துச் சொல்லியுள்ளது.
அமைப்பைப்
பொறுத்தவரையில் அனைத்துக் கதைப்பாடல்களும் பொதுவாக ஒரே புற அமைப்புடையனவே.
இவை இறைவணக்கம், காப்பு, அவையடக்கம், நாட்டு வருணனை, நகர வருணனை, கதை,
வாழி என்னும் அமைப்பில் அமைந்து உள்ளன.
கதைப்
பாத்திரங்கள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம்
பெறுவது போன்று புராணக் கதைப்பாடலில் சித்திரிக்கப்படுவது
இல்லை. பாத்திரங்களைவிடக் கதைநிகழ்வுக்கே புராணக்
கதைப்பாடல் முக்கியத்துவம் தருகின்றது. இதனைப் புராணக்
கதைப்பாடல்களில் இடம் பெறும் அருச்சுனன், துரியோதனன்
நிலை கொண்டு உணரலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட
புராணக் கதைப்பாடல்கள் அனைத்திலும் அல்லியும் அருச்சுனனும் இடம் பெற்றுள்ளனர்.
அல்லி ஆண் வர்க்கச் சார்பை மறுப்பவளாக, ஆணவம் மிக்கவளாகச் சித்திரிக்கப்பட,
இதிகாச நாயகர்களான அருச்சுனனும் துரியோதனனும் பெண் மோகம் கொண்டு அலைபவர்களாகக்
கீழான நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்வு
பல படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது. அவற்றுள்
ஒன்றாக இடம்பெறும் குழந்தைப் பிறப்பு மற்றும் ஆண், பெண்
உறவுநிலை ஆகிய முறைகள் கதைப்பாடலில் இடம்பெற்று,
கதையை வளர்க்கத் துணை செய்கின்றன. மேலும் அறவாழ்க்கை
மேற்கொண்டோருக்கே குழந்தைச் செல்வம் வாய்க்கும் என்றும்
ஒருவன் ஒருத்தி என்ற நிலையே இல்லறம் சிறக்க வழி என்றும்
அது மாறுபடும் போது என்னென்ன இன்னல்களைச்
சமுதாயத்தில் சந்திக்க நேரிடும் என்றும் புராணக்
கதைப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. |