6.2 தமிழ்ச் சமூகமும் - சமயமும்

கதைப் பாடல்கள் வாயிலாகத் தமிழகத்தில் பல விதமான சமயங்கள் இருப்பதை அறியலாம். வாழ்க்கையுடன் ஒட்டியது சமயம். அதன் தாக்கம் சமூகத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்து சமயப் பிரிவுகளான சைவம், வைணவம், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு ஆகிய மூன்றும் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால் அவற்றைப் பற்றியே பெரும்பாலான கதைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சமயச் சிந்தனையை மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சமணம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயம் சார்ந்த கதைப்பாடல்களும் எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.

6.2.1 சைவ உணர்வு

சிவன்

சிவ வணக்கம் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பிற தெய்வ வழிபாடு இருந்த போதிலும் சிவனையே பெருங்கடவுளாக மக்கள் மதித்து வந்தனர். சைவ சித்தாந்தம், தத்துவம் பற்றிய அறிவோ எண்ணமோ இன்றிச் சிவனை வணங்கி வந்துள்ளனர். இத்தைகைய வழிபாட்டு முறையைச் சைவம் என்று கூறுவதைக் காட்டிலும் சிவ வணக்கம் என்று கூறுவதே பொருத்தமாகும்.

மாணிக்க வாசகர் அம்மானை மாணிக்கவாசகரின் சைவசமய வாழ்க்கை நெறிகள் பற்றி விளக்குகிறது மாணிக்க வாசகர் சிறுவராக இருந்த போது சிவனை வணங்க வேண்டும் என்று அவருடைய தாய் கூறுவதாகக் கதைப்பாடல் உரைக்கிறது.

மாடுதனி லேறும் மாதவர் தன்னருளால்
வேறு வினை வராமல் வெற்றி கொள்வாய் என்மகனே

என்பது தாயின் அறிவுரை. அருச்சுனனுடைய மனைவியான மின்னொளியாள் சிவபூசை செய்ததாக மின்னொளியாள் குறம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பிச்சைக்காரன் கதையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமியைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பிச்சைக்காரன் அவரை வணங்கி வரம் பெறுகிறான். சிவனைத் தலைமைக் கடவுளாகப் பல கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

6.2.2 வைணவச் சிந்தனை

சிவனை வணங்கியது போல் திருமாலையும் மக்கள் வணங்கியுள்ளனர். தேசிங்குராசன் திருவரங்க நாதனைத் தினமும் வணங்கி வந்ததாகக் கதைப்பாடல் கூறுகிறது. இறையருள் இருந்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும் என்பது தேசிங்கு ராசனின் நம்பிக்கை. தனக்கு இறையாதரவு இல்லை என்று நினைக்கிறான். அதனைத் தன் நண்பனிடம் வருத்தத்துடன் கூறுகிறான்.

எனக்குத் தெய்வபலம் இல்லையடா சமேதாருமாரே
என்கைப் பலங்கொண்டு போறேனடா சமேதாருமாரே

கன்னியாகுமாரி மாவட்டத்துப் பறக்கை என்னும் ஊரிலுள்ள மதுசூதனப் பெருமாள் கோயிலில் ஆராட்டுத்திருவிழா நடந்ததைப் பற்றி வெங்கலராசன் கதை குறிப்பிடுகிறது. திருமால் வழிபாடு தமிழகத்தில் இருந்ததற்கு இவை சான்றுகளாக மட்டுமே அமைகின்றன. வைணவ சமயம் என்று கூறும் அளவிற்குச் செய்திகள் கதைப் பாடல்களில் அதிகம் இல்லை.

பள்ளி கொண்ட பெருமாள்

தத்துவ விளக்கங்கள் நிறைந்த சைவத்தைப் பற்றியோ வைணவத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாமல், சாதாரண நிலையில் சிவனைப் பற்றியும் திருமாலைப் பற்றியும் செய்திகளைக் கூறிக் கொண்டு கதைப்பாடல்கள் செல்கின்றன. சமயவுணர்வுகள் பற்றி ஆழமான சிந்தனைகள் கதைப் பாடல் ஆசிரியர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

6.2.3 நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு

கதைப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுவது நாட்டுப்புறத் தெய்வ வழிபாடே. மனிதன் இறந்த பின் அவனுடைய ஆவி ஆற்றலுடன் அலையும் தன்மையுடையது என மக்கள் நம்பியுள்ளனர். இந்த முறையில் அரிய செயல் ஆற்றியவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், தவறாகக் கொலை செய்யப்பட்டவர்கள் போன்ற பலரைத் தெய்வங்களாக்கிக் கொடை விழாக்கள் நடத்திப் பலியும் பூசையும் கொடுத்து மக்கள் கொண்டாடியுள்ளனர். அச்சவுணர்வு, இரக்கம், நன்றியுணர்வு காரணமாகச் சிலரை வணங்கத் தலைப்பட்டுள்ளதாகவும் கருதலாம். முத்துப்பட்டன், குலசேகரன், சேர்வைக்காரன். சிதம்பரநாடார், மதுரை வீரன், காத்தவராயன், பொன்னிறத்தாள், தோட்டுக்காரி முதலிய நாட்டுப்புறத் தெய்வங்கள் இவ்வாறு வணங்கப்பட்டவர்கள்.

கடவுளால் உலகுக்குப் படைத்து அனுப்பப்பட்டதாகச் சில தெய்வங்களை வணங்குகின்றனர். சுடலை மாடன் முதலிய தெய்வங்களை இந்த நிலையில் கருதலாம். இத்தகைய தெய்வங்கள் இறைவனிடம் வரம் வாங்கி அரிய ஆற்றலுடன் உலகுக்கு வருவதாக நம்பினர். இவர்கள் அருள் செய்வதுடன் தங்களைப் பணியாதவர்களை அழிக்கவும் செய்வர் என்ற நம்பிக்கை மக்களிடம் வேரூன்றி இருந்தது. ஆகையினால் இந்தத் தெய்வங்களை அச்சத்துடன் வணங்கி வந்தனர். சுடலைமாடன் கதையில் வரும் பகுதி இந்த உணர்வை விளக்கும்.

சுடலைமாடன் பயிரழிவு செய்கிறான். அதனைக் கண்டவர் அவனிடம் வேண்டிப் பணிகின்றனர்.

எங்களுடைய இடமதிலே அட்டாதுட்டம்
செய்ய வேண்டாம்
ஆதாளிகள் போடவேண்டாம் உங்களுக்கு
நாங்களுமே ஊட்டுப் போட்டுத்
தருவோம் என்றார்

இயக்கி அம்மன் கதையில் வரும் இயக்கி, மானுடப் பிறவியில் தன்னைப் பழிசெய்தவனைப் பாழாக்கிக் கொல்கிறாள். அவனுக்குத் துணை நின்றவர்களையும் அழித்து இறுதியில் தன் தமையனுடன் சிவனிடம் வந்து வரம் வாங்குகிறாள். அழிவு செய்யும் ஆற்றலுடன் வரம் வாங்கி, தெய்வமாக வந்தவர்கள் என்று மக்கள் இவர்களை நம்புகின்றனர். அதனால் அச்சம் காரணமாக இவர்களை வணங்கி இவர்களுக்குப் படையல் செய்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வசதியுள்ளபோதோ இத்தெய்வங்களை வணங்கிச் சாந்தப்படுத்த முனைகின்றனர். இதுவே அம்மன் கொடை, சுடலைமாடன் கொடை என்று வழங்கப்படுகிறது.

6.2.4 சமணம்

தமிழ்நாட்டில் சமண சமயம் ஒரு காலத்தில் மிகச்சிறப்பாய் வாழ்ந்தது. ஆனால் இன்றோ ஒரு சிலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. சில கதைகள் சமண சமய உண்மைகளை விளக்கும் வகையில் கதைப்பாடல்களாகப் புனையப்பட்டுள்ளன. சமண சமயக் கருத்துகளைப் பாமர மக்களுக்கு எளிதாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே இத்தகைய கதைப் பாடல்களின் நோக்கமாகும். கபிலைக் கதையில் ஒரு பசு கொடிய புலிக்கு அறவுரை கூறித் திருத்தும் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. வரங்கன் கதை இன்னும் சிறப்பாகச் சமணக் கருத்துக்களைத் தெரிவிக்கிறது. வரங்கன் ஓர் அரசனின் மூத்த மகன். அவனுடைய தாயின் மறைவிற்குப் பின் வந்த சிற்றன்னை வரங்கனுக்கு அளவிலாத துன்பத்தைத் தருகிறாள். என்ன செய்வது என்று அறியாத நிலையில் அருகனின் அருளை வேண்டிப் பணிகிறான். அருகனின் அருளால் சிற்றன்னையின் கொடுமைகளிலிருந்து விடுபட்டு அரச பதவியை அடைகிறான். வரங்கன் கதையில் சமண சமயக் கொள்கைகள் சிறப்பாக விளக்கப்படுகின்றன. வரங்கன் கதை சமண சமயத்தை ஆதரித்து எழுதப்பட்டதாகும். இதற்கு எதிராக எழுதப்பட்டது பெரியண்ணன் சின்னண்ணன் கதையாகும். சமயக் காழ்ப்புக் கொண்ட காலத்தில் இவ்வாறு எதிர்ப்புகள் நடைபெறுவது வழக்கம். கதைப் பாடலாசிரியர்களும் இத்தகைய எதிர்ப்பில் பங்கு கொண்டுள்ளனர் என்பதற்குப் பெரியண்ணன் சின்னண்ணன் கதை நல்லதொரு சான்றாகும்.

6.2.5 இசுலாமியக் கதைகள்

குரான் புத்தகம்

இடைக்காலத்தில் இசுலாமிய சமயம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. இசுலாமிய அறிஞர்கள் சமய உண்மைகள் நிறைந்த பலவகையான இலக்கிய நூல்களைத் தமிழில் படைத்துள்ளனர். சிலர் கதைப்பாடல்களும் எழுதியிருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமாகக் கருதத்தக்கவை மலுக்குமுலுக்கு ராஜன் கதை, தமீமன்சாரிமாலை, ஒசியத்துக் கதை, செய்தத்துப்படைப் போர், நபுசுபடைப் போர், மூட்டை சுமந்த முடி மன்னர் முதலியவையாகும். கான் சாகிபு சண்டை என்பது ஒரு இசுலாமிய வீரனைப் பற்றிய கதை. இதில் சமயவுணர்வு அதிகம் இல்லை.

ஒசியத்துக்கதை இசுலாமிய சமய உணர்வுடன் அறக்கருத்துகளை மிகுதியாகத் தந்து சிறக்கிறது. செய்தத்துப்படைப்போர், நபுசு படைப் போர் ஆகியவை இசுலாமியர் சமயவுணர்வுடன் நடத்திய போர்களைப் பற்றிச் சுவையாக எடுத்துக் கூறுவன. மூட்டை சுமந்த முடி மன்னர் கதை பல நீதிகளைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

அரசன் ஆண்டியாவதும் ஆண்டி அரசனாவதும் இறைவனின் அருளால் நடக்கக் கூடியவை. ஆனால் இறைவனின் படைப்பில் அனைவரும் சமமானவர்கள்; சகோதரர்கள். இசுலாம் உணர்த்தும் இந்த உண்மையைத் தம் வாழ்வின் மூலம் விளக்கி, எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இசுலாமியப் பேரரசின் ஆட்சித் தலைவராக (கலீபா) இருந்த உமறு. இவர் மாறுவேடத்தில் தம் தலைநகரை வலம் வந்த போது, அங்கு வந்த ஒரு வெளியூர்ப் பயணியின் மூட்டையை ஒரு கூலி ஆள்போலச் சுமந்து உதவிய வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் கதைதான் மூட்டை சுமந்த முடிமன்னர் கதை ஆகும். தீயவை எவ்வளவுதான் வலியவையாக இருந்தாலும் இறைவன் அருளால் அழிக்கப்படும் என்பதை மலுக்குமுலுக்குராஜன் கதை விளக்கிக் காட்டுகிறது, கொடுமையே உருவான மலுக்குராஜன் வெட்டப்பட்டு இறப்பதை இந்தக் கதை கூறுகிறது.

நெட்டுடலாய் வளர்ந்த
நீள்முடி மலுக்கு ராஜன்
வெட்டுப்பட் டிறந்தவாறை
விளம்பிடப் புவியின் மீதில்

என்று கதையின் பொருள் குறிப்பாகச் சொல்லப்படுகிறது

சமயக் கருத்துகளைச் சற்றும் மாறுபடாது சரியான முறையில் தருவதிலும் இசுலாமியத் தமிழ் நூலாசிரியர் தவறவில்லை.

அவர்களுள் சிறந்தவர் காயல்பட்டினம் ஷெய்கு லெப்பை ஆவார். இவரால் இயற்றப்பட்ட தமீமன்சாரி மாலை நபிகள் நாயகத்தின் பெருமைகளைத் தமிழ் உலகிற்கு விளக்கும் கதைப் பாடலாகும். இக்கதை தமிழ்நாட்டு இயல்பை மனத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது, வறுமைநிலை பற்றிய ஒரு விளக்கம்

உடுக்கக் கலையுமில்லை உண்டிருக்கச் சோறுமில்லை
படுக்கவொரு பாயுமில்லை பாராளும் மன்னவரே

என்ற பாடற் பொருளை எந்தத் தமிழனும் தனக்குப் புரியாத அந்நியத் தன்மையுடைய விளக்கம் என்று நினைக்கவே மாட்டான். இசுலாமியக் கதைப் பாடல்கள் சமயக் கருத்துகளிலிருந்து சற்றும் மாறுபடாமல் கதைப் பொருளை அமைத்துக் கொள்கின்றன. மேலும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் எழுதப் பெற்றுள்ளன.

6.2.6 கிறித்தவக் கதைப்பாடல்கள்

இயேசு
மரியாள்

மேல் நாட்டாரின் வருகையினால் கிறித்தவ சமயம் தமிழ் நாட்டில் பரவியது. கிறித்தவ சமயவாதிகள் தமிழில் இலக்கியப் படைப்புக்களை உருவாக்கினர். அவற்றுள் கதைப்பாடலும் அடங்கும். கிறித்தவக் கதைப் பாடலுள் முக்கியமானது வீரமாமுனிவர் எழுதிய கித்தேரியம்மாள் அம்மானை. கித்தேரியம்மாள் ஏசுபெருமானைத் தினமும் வழிபடுபவள். அவளுடைய வாழ்க்கையில் துன்பங்கள் பல ஏற்படுகின்றன. ஆயின் அந்தத் துன்பங்களின் காரணமாக அவள் கடவுளை மறக்கவில்லை. இறைவனருளைப் பிறரும் பெறவேண்டி உருகிய கித்தேரியம்மாளுக்கு அந்த இறைவனருள் பெருந்துன்பத்துக்கு இடையில் கிடைக்கிறது. இந்தக் கதை இறையருளைப் பெறும் வாயிலாக அமைய வேண்டி எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்னென்ன சமயங்கள் இருந்தனவோ அவற்றுக்கெல்லாம் கதைப்பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவரவர் சமய நம்பிக்கைக்கும் கொள்கைக்கும் ஏற்றவாறு கதைக்கருத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களின் இயல்புகள் அனைத்தையும் நன்றாக உணர்ந்து அதற்கேற்பக் கதைகள் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

கதைப்பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூகம் சாதிப் பாகுபாட்டாலும் சமய வேறுபாட்டாலும் சிதறிச் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றது. இருப்பினும், சாதிகளால் ஏற்பட்ட சிக்கல்களும் சீர்கேடுகளும் சமயங்களால் மிகுந்த அளவுக்கு ஏற்பட்டதாகக் கருத முடியவில்லை. மேலும் சாதிப் பாகுபாட்டிலுள்ள இறுக்கமான ஏற்றத்தாழ்வு உணர்வு சமய வேறுபாட்டில் இருந்ததாகக் கூற முடியவில்லை.

 

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சமுதாயம் என்றால் என்ன?
2.
சாதிச் சிக்கலை மையப்படுத்தி எழுந்துள்ள இரு கதைப் பாடல்களைக் குறிப்பிடுக.
3.
நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு எவ்வாறு தோன்றியது?
4.
சமண சமயக் கதைப்பாடல் இரண்டின் பெயரினைச் சுட்டுக.
5.
மன்னர்களிடையேயும் சமுதாய ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நிலவியது என்பதற்குச் சான்று தருக.