நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டோ, கற்பனையாகவோ உருவாக்கப்பட்டு,
உரைநடை வடிவில் எடுத்துரைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவி, ஒன்றுக்கு
மேற்பட்ட வடிவங்களைக் கொண்டதாக உள்ள கதை வடிவத்தை நாட்டுப்புறக் கதை
என்கிறோம். நாட்டுப்புறக் கதைகள் எங்குத் தோன்றியிருந்தாலும் வாய்மொழியாகப்
பரவி மக்கட் குழுக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துபவையாக
மாறிவிடும். மதத்தைப் பரப்பும் நோக்கத்திற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும்
தேசீய உணர்வு காரணமாகவும் நாட்டுப்புறக் கதைகள் சேகரிக்கப் பெற்றன.
தமிழில் ஏராளமான நாட்டுப்புறக் கதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நூல்கள் பிற மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்
பெற்றவை. நாட்டுப்புறக் கதைகளை தோற்றக் கதைகள், காரணக் கதைகள், நீதிக்கதைகள்,
நகைச்சுவைக் கதைகள், இடப்பெயர்வுக் கதைகள், வரலாற்றுக் கதைகள், நம்பிக்கை
விளக்க கதைகள் என்று பலவாறு வகைப்படுத்தலாம். நாட்டுப்புற இலக்கியங்களுள்
உலகளவில் கதைகள் பற்றிய ஆய்வுகளே மிகுதி. தமிழகத்தில் நாட்டுப்புறக்
கதைகள் காட்டும் சமுதாயம் மற்றும் கதைகளின் அமைப்பு முதலிய ஆராயப்
பெற்றுள்ளன. நாட்டுப்புறக் கதைகள் அனைத்து வயதினரிடையேயும் பல்வேறு
நோக்கங்களுக்காக வழக்கில் உள்ளன. கூறுவோர், கேட்போர், கூறப்படும் நோக்கம்,
கூறப்படும் சூழல், ஆகியவற்றுக்கேற்ப, கதைப் பொருள் அமையும். நாட்டுப்புறக்
கதைகள் மனித சமுதாயத்தை உருவாக்கும் மிகச் சிறந்த சாதனமாகச் செயற்படுகின்றன.
|