5.2 பயன்பாடுகள்

பழமொழிகள் பேச்சின் ஊடே மிகப் பொருத்தமாக ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதிப் பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் ஒரு செயலைச் செய்வதற்கு முன்னதாகவே எச்சரிக்கின்றது; சில வேளைகளில் ஒருவனின் செயலை நையாண்டி செய்கின்றது; ஒன்றைச் செய் என்று தலையில் அடித்தாற்போல் நேரடியாகக் கட்டளை இடுகின்றது. செய்யாதே என்று தடுக்கின்றது. மறைமுகமாக யாருக்கோ சொல்வது போல எச்சரிக்கின்றது. பெரியோர்கள் இப்படித்தான் சொல்லி வைத்துள்ளார்கள். இப்படிச் செய்வது நடைமுறைப் பழக்கம் என்பது போல வாழ்க்கை அனுபவத்தைச் சுருக்கித் தருகிறது.

’பழமொழி பொய்யானா பழையதும் சுடும்’ என்ற பழமொழி பற்றிய பழமொழி தற்காலத்திலும் மக்கள் அதன் மேல் கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கையைத் தெளிவாகப் புலப்படுத்தும் அரிய சான்றாகும். பழமொழி ஒரு பொழுதும் பொய்யாகாது’ (தே.லூர்து 1988 24, 25) பழமொழிகள் பயன்படுத்தப்படும் சூழல் மிகவும் இன்றியமையாதது. சூழல் பின்னணி தெரியாமல் பழமொழிக்குப் பொருள் கூறுவது தவறாகவே முடியும். எனவே சூழல் விளக்கங்களோடு அவை மக்களிடையே எவ்வாறு பயன்படுகின்றன என்பதைச் சில சான்றுகள் வாயிலாகக் காணலாம்.

5.2.1 இடித்துரைத்தல்

(அ) மகன் (சிறுவன்) உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் விளையாடிக் கொண்டு திரிந்தான். அதனைப் பார்த்த தந்தை அவனிடம்,

நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமில்ல

என்று கூறினார்.

இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் நாயின் இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. எந்த வேலையும் இல்லாமல் தெரு நாய் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்தில் நிற்பதற்கு அதற்கு நேரமிருக்காது என்பதேயாகும். இங்கு மகனும் அவ்வாறே ஓரிடத்தில் நில்லாமல் வீணாகச் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தந்தை சுட்டிக்காட்டி இடித்துரைத்து அவனுக்கு அறிவு கூறும் போக்கு காணப்படுகிறது.

(ஆ) ஒரு குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சனை மிகுதியாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பெற்றோர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் வீட்டில் உள்ள பிள்ளை ஆடம்பரமான பொருள் ஒன்றினை வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடிக்கிறது. இந்நிலையில் அப்பிள்ளையின் தந்தை பின்வரும் பழமொழியைக் கூறினார்.

 

 

குடல் கூழுக்கு அழுவுது
கொண்ட பூவுக்கு அழுவுதாம்

 

இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் வயிற்றுக்குக் குடிக்கக் கூழ்கூடக் கிடைக்காத நிலையில் கொண்டைக்குப் பூ வாங்க இயலுமா? என்பதாகும். அதாவது அடிப்படைத் தேவைகளுக்கே பொருளாதார நெருக்கடி இருக்கும் போது ஆடம்பரச் செலவு செய்ய இயலுமா? என்று பிள்ளையின் ஆடம்பர ஆசையை இடித்துரைக்கிறது. ஆடம்பரப் பொருள் கேட்ட பிள்ளை உண்மையை உணர்ந்து அடங்கிவிட்டது.

5.2.2 இயலாமையை வெளிப்படுத்தல்

ஒரு தந்தைக்கு நான்கு பெண் பிள்ளைகள் தங்களுடைய மூத்த பெண்ணுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டு பெண்பிள்ளை உடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுமாறு முன்னவரிடம் கூறினார். அவரும் ஒன்றிரண்டு மாப்பிள்ளைகளைப் பற்றிக் கூற, அவர்கள் தன் பெண்ணுக்குப் பொருத்தமில்லை என்று நிராகரித்த பின், மேலும் மாப்பிள்ளை தேடுமாறு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த முன்னவர் (நான்கு பெண்களின் தந்தை) சிரித்துக் கொண்டே அங்கிருந்தவர்களைப் பார்த்துப் பின்வரும் பழமொழியைக் கூறினார்.

 

தாரம் இழந்தவரைப் பொண்ணு பாக்கச்சொன்னார்
தனக்குப் பாப்பானா? தம்பிக்குப் பாப்பானா?

 

இந்தப் பழமொழியின் நேர்பொருள்: ஏற்கனவே தாரத்தை இழந்த அண்ணனிடம் சென்று தம்பிக்குப் பெண் பார்க்குமாறு கூறினால் அவன் தனக்குப் பெண் பார்ப்பானா அல்லது தம்பிக்குப் பெண் பார்ப்பானா? என்பதாகும். ஆனால் இந்தப் பழமொழி கூறப்பட்ட சூழலில் அதைக் கூறியவர் ஏற்கெனவே தன் பெண்ணுக்கு மணமகனைத் தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரிடம் தன்னுடைய பெண்ணுக்கு மணமகன் தேடுமாறு மற்றொருவர் கடிதம் எழுத ’என் பெண்ணுக்கே மணமகன் தேவையாக இருக்க. நான் என் பெண்ணுக்கு மணமகன் தேடுவேனா? அல்லது அவர் பெண்ணுக்கு மணமகன் தேடுவேனா?’ என்ற பொருளில் பழமொழியைப் பயன்படுத்தினார். இங்கு இப்பழமொழி அறிவுரை ஏதும் கூறவில்லை. ஆனாலும் தன்னால் தன் உறவினருக்கு உதவ முடியவில்லை என்பதை நயமாக வெளிப்படுத்தும் தன்னிலை விளக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு கூறியதன் வாயிலாக அதனைக் கூறியவர் தன்னுடைய இயலாமை குறித்துத் தனக்குத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதையும் தன் நிலையைப் பிறருக்குத் தெரிவிப்பதையும் அறிய முடிகிறது.

5.2.3 ஆறுதல்

படித்தவர்களிடையே அலுவலகச் சூழல்களில் பல்வேறு பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ஒரு சான்று காணலாம்.

ஓர் அலுவலகத்தின் தலைவராக சிபாரிசின் பேரில் ஒருவர் பணி அமர்த்தப்பட்டார். அவரை விடத் தகுதி வாய்ந்தவர்கள் பலர் அந்த அலுவலகத்தில் பணியாற்றினர். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டால் தன்னை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சம் தலைவருக்கும் இருந்தது. எனவே அலுவலகத்தின் பல பணிகளைச் செய்யத் தகுதி வாய்ந்தவர்களை அவர் அனுமதிப்பதில்லை. அப்படியே செய்தாலும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைச் செய்யவிடாமல் தடுத்து விடுவார். அதே நேரத்தில் அப்பணிகளை அவராலும் செய்ய இயலாது. இதனால் எரிச்சலுற்ற தகுதி வாய்ந்த பணியாளர்களில் ஒருவர் தன் நண்பரிடம் பின்வரும் பழமொழியைக் கூறினார்.

 

வைக்கப்போருல நாய் படுத்தாற்போல
தலைவர் உள்ளார்

 

இப்பழமொழியின் நேரடிப் பொருள் : வைக்கோல் போரில் (படப்பில்) நாய் படுத்திருக்கும் போது வைக்கோல் தின்பதற்காக மாடுகள் வந்தால் அவற்றைப் போர் அருகே நெருங்க விடாது. கடுமையாகக் குரைத்து மாடுகளை விரட்டிவிடும் நாய். அதே நேரத்தில் அதுவும் வைக்கோலைத் தின்னாது.

அலுவலக நண்பர் கூறிய சூழலில் அப்பழமொழி பின்வரும் பொருளைத் தருகின்றது. அதாவது தலைவர் முக்கியமான அலுவலகப் பணிகளைத் தானும் செய்ய மாட்டார், பிறரையும் செய்ய விடமாட்டார், இவ்வாறு கூறுவதால் அவர் தன்னுடைய மன எரிச்சலை வெளிப்படுத்துவதன் வாயிலாக ஆறுதல் பெறுகிறார். தொடர்ந்து தனக்குத் தொல்லை தரும் தலைவரை நாயோடு ஒப்புமைப் படுத்துவதால் அவருக்கு இத்தகைய ஆறுதல் கிடைக்கிறது. இதே சூழலில்,

நாய்கிட்ட கெடச்ச தேங்கா மூடிபோல

என்ற பழமொழியும் பயன்படுத்தப்படுவதுண்டு. இங்கு நாய் தேங்காய் மூடியை உருட்டிக் கொண்டே இருக்குமேயொழிய அதனால் அதனைத் தின்ன இயலாது. அதே நேரத்தில் பிறர் தின்பதையும் அனுமதிக்காது.

மேற்காட்டிய சான்றுகள் வாயிலாகப் பழமொழிகள் அறிவுரை கூறவும், தன் இயலாமையைக் குறித்துத் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளவும் தன் மன உளைச்சலை வெளிப்படுத்தி அதன் வாயிலாக மகிழ்ச்சியடையவும் பயன்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. இதுபோன்ற பல பயன்பாடுகள் பழமொழிகளுக்கு உண்டு. மேலும், பழமொழியின் நேர் பொருள் பயன்படுத்தப்படும் சூழலுக்கு ஏற்பப் பொருள் கொள்ள முடிவதையும் அறியமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட பழமொழிகள் பயன்படுத்தப்படும் என்பதையும் கூட மேற்காட்டப்பட்ட சான்றுகள் வழி அறிய முடிகிறது.

 

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
பழமொழியைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு சொற்கள் யாவை?
2.
பழமொழிக்கு வரையறை கூறிய தொல்காப்பிய நூற்பாவிற்கு தே. லூர்து கூறிய விளக்கத்தினைத் தொகுத்துச் சுட்டுக?
3.
பழமொழிகளின் இயல்புகள் நான்கினை எடுத்துரையுங்கள்.
4.
’பழமொழி நானூறு’ நூலின் ஆசிரியர் யார்?
5.
முதன்முதலில் தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து உள்ளது உள்ளபடி வெளியிட்டவர் யார்?
6.
அயல் நாட்டுப் பாதிரியார்கள் பழமொழிகளைச் சேகரித்து வெளியிட்டதன் நோக்கம் என்ன?
7.
தமிழ்ப் பழமொழிகளை ஆராய்ந்தவர்கள் யார் யார்?
8.
பழமொழிகளின் பயன்பாடுகளைச் சுட்டுக?
9.
இக்கால அலுவலகச் சூழலில் பழமொழிகள் பயன்படுத்தப்படுவது உண்டா?