5.5 பெண் முன்னேற்றம்

மக்கள் தொகையில் ஒரு பாதியாக இருக்கும் பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உரிமை பெற்றதில்லை. அடிமைப் பெண்கள் அடிமைக் குணமுள்ள குழந்தைகளையே பெறுவார்கள். அக்குழந்தைகளின் உள்ளத்தில் சுதந்திர உணர்வு எழாது. அதனால் அடிமை
வாழ்வு தொடருமே ஒழிய சுதந்திரச் சீர்திருத்தச் சமுதாயத்தைக் காணமுடியாது. எனவே பெண்களுக்குச் சம உரிமையும் மதிப்பும் கொடுக்க வேண்டும் என்கிறார் பாரதியார். பெண்கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்குச் சிறந்தவழி என வழிகாட்டுகிறார். பெண்கள் முன்னேற்றம்

குறித்துத் தமது கருத்துகளைச் ‘சக்கரவர்த்தினி’ என்ற இதழில் கட்டுரைகளாகவும், மற்றும் எழுச்சிமிக்க கவிதைகளாகவும் எழுதியுள்ளார். தாம் எழுதிய சிறுகதைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். புதிய பாரத சமுதாயத்தை உருவாக்க, புதுமைப் பெண்களைப் படைத்துக் காட்டுகின்றார். அவற்றைக் காண்போம்.

பெண்ணடிமை

பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் இழிவுபடுத்துவது அறிவற்ற செயல் என்றும் அதனை அறவே நீக்க வேண்டும் என்றும் பாரதியார் குறிப்பிடுகின்றார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்

(விடுதலை - 3)

மேலும், நாட்டுக்கு நன்மை செய்ய எண்ணமுள்ளவர்கள் பெண்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்கிறார். ஆகவே,

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய கடமைகளைச் செய்யத்
தவறுபவர்கள் தேச விரோதிகள்

(சக்கரவர்த்தினி கட்டுரை)

எனக் கடுமையாகப் பேசுகின்றார்.
பெண் கல்வி

பெண்ணின் வாழ்வியலை வகுத்தால், அது கல்வியில் தொடங்க வேண்டும். வேறு பிறவழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெறமுடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்தி்ற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன,
முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி;
மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர
வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது
என்பது கருத்து“

(சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83)

(உபாயம் = வழிமுறை)


இதில் கல்வி ஒன்றே பெண்களுக்கு அடிமை நிலையிலிருந்து முன்னேற்றத்தை நல்கும் கருவி எனப் பாரதியார் நம்புவது புலப்படுகிறது.

படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு ஆட்சியிலும் பங்கேற்கிறார்கள். இதை,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண்
இளைப்பில்லை காண்

(பெண்கள் விடுதலைக்கும்மி - 6)


எனப் படித்த விடுதலைப் பெண்கள் கூறுவதாகப் பாரதியார்
குறிப்பிடுகின்றார்.

நாட்டு வளர்ச்சியில் பெண் பங்கு

கல்வி கற்ற பெண்கள் பலநாடுகளுக்குப் பயணம் செய்து அறிவின் மேன்மையை அங்குப் புலப்படுத்திப் புகழ்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அங்குள்ள புதுமைகளைக் கொண்டுவந்து நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் பாரதியார் விரும்புகின்றார். பெண்களே கூறுவது போல் அவர் கூறுவதைக் காண்போம்.

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுதலார் தங்கள் பாரத
தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம

(புதுமைப்பெண் - 8)


நான்கு திசைகளிலுமுள்ள நாடுகளுக்குச் செல்வது வாழ்க்கை நுட்பத்தை அறியவும் பற்பல நூல்களைக் கற்கவும் பயன்படும் எனக் கூறுகின்றார்.இந்த நோக்கத்தில்,

சென்றி டுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர

(தமிழ்த் தாய் - 11)


எனக் கூறிய பாரதியார், அப்பணிக்குப் படித்த பெண்கள் செல்ல வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறார். எதிர்கால இந்தியச் சமுதாயத்தின் வளத்திற்கும் நலத்திற்கும் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்த்துகிறார்.

புதுமைப் பெண்கள்

கல்வி பெற்ற, ஆளுமைபெற்ற, சுதந்திர உணர்வுடைய,
அச்சமற்ற, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டு வெற்றி உலாவரும் புதுமைப் பெண்களைப் பாரதியார் படைத்துக் காட்டுகின்றார். அவர் போற்றும் புதுமைப் பெண்ணின் இயல்புகளும், திறன்களும் பிறிதோர் பாடத்தில் (Co1116: பாரதியார் நோக்கில் பெண்மை) விளக்கப் பெற்றுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. சமுதாயச் சீர்திருத்தத்திற்குத் தடையாய் இருப்பவை எவை?
2. பாரதியார் மக்கள் சக்தியை எதற்கு ஒப்பிடுகிறார்?
3. விதவைக் கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன?
4. கீழ்வருவனவற்றுள் சரியான விடையைத் தருக.
புதுமைப் பெண்ணின் பண்புகள் நிமிர்ந்த நடை/ஆணவம்/நாணம் உடையவர்/அச்சம் உடையவர்