1.1 பாரதி - தமிழைப் பற்றி....
|
 |
தமிழின் பெருமை
பாரதி
ஒரு பன்மொழிப் புலவர். தாய்மொழியாகிய தமிழைத் தவிர, ஆங்கிலம்,
பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு,இந்தி முதலிய
மொழிகளை நன்கு கற்றிருந்தார். எனவே,
தமக்குத் தெரிந்த பிற மொழிகளுடன்
தமிழ் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
தம் தாய் மொழியாகிய தமிழ் மொழி இனிய
மொழியாகவும் சிறந்த மொழியாகவும்
இருப்பதை எண்ணி மகிழ்கிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
|
(பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1)
என்று புகழ்ந்து பாடுகிறார்.
தமிழ்ப் புலவர் பெருமை
அடுத்த நிலையில்,
தாம் அறிந்த
புலவர்களிலே தமிழ்ப் புலவர்களாகிய
கம்பனையும், வள்ளுவரையும், இளங்கோவையும் போலச் சிறந்த புலவர்களை
வேறு எங்கும்
பார்க்கவில்லை என்கிறார் பாரதியார்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
(தேசிய கீதங்கள், தமிழ்: 2)
(யாம் = நான்,
யாங்கணுமே = எங்குமே)
தமிழ்ச் சொல்லின் பெருமை
பாரதியார் குழந்தைகளுக்காகப்
பாடிய ‘பாப்பா பாட்டில்’
குழந்தைகளுக்குப் பலவிதமான அறிவுரைகளைக் கூறுகிறார்.
தாய்நாட்டின் பெருமை, தாய்மொழியின்
பெருமை
ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு உரைக்கிறார்.
அவ்வாறு கூறும்பொழுது தமிழ்ச்
சொற்களின்
பெருமையினை எடுத்துரைக்கிறார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்
சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
|
(பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12)
1.1.1 தமிழ் மொழி உணர்வு
ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் ஆங்கில மொழி
செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழ் தனக்கு உரிய இடத்தைப்
பெறவில்லை. தமிழர்களும் தமிழில் பேசுவதை
விட,
ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பினர். எனவே ஏடுகளிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும்
ஆங்கிலமே ஆட்சி
செலுத்தியது. கல்வியும் ஆங்கிலத்தின் வாயிலாகவே
கொடுக்கப்பட்டது. தமிழுக்கு உரிய இடத்தில் ஆங்கிலம்
இருந்தது. தமிழ் இரண்டாம் தர நிலையில் துணைப்பாடமாகும்
தன்மையிலேயே அமைந்திருந்தது. இதைப் பார்த்த பாரதியார்
மிகவும் வேதனை அடைந்தார். தமிழைக்
கற்காமல்
பிற மொழிகளையே கற்பவர்களையும், அவ்வாறு கற்பதையே
பெருமையாகக் கருதுவோரையும் பார்த்து,

வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
|
(பாரதியார் தேசிய கீதங்கள், போகின்ற பாரதம்:3)
(வீட்டுவார்த்தை = தாய்மொழி)
என்று சினந்து கூறுகின்றார்.
தமிழுக்கு உரிய
இடம் கிடைக்க வேண்டும்.
தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்ட
வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ் மொழி வாழும்,
வளரும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்? பாரதி என்ன கூறுகிறார்
என்று பார்க்கலாமா?
தமிழ் வழிக் கல்வி
தமிழ்நாட்டில், தமிழ்
வழியாகவே கல்வி கற்பிக்க
வேண்டும். அப்பொழுதுதான் புதிய புதிய
சொற்களை
உருவாக்க முடியும். இதனால் தமிழ் மொழி தலைமை பெற்று
வளருவதற்கான வாய்ப்பும் உண்டாகும். இந்தக்கொள்கையைத்
‘தேசியக்கல்வி’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில்
வெளியிட்டுள்ளார் பாரதி.
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
மேலும், எங்கும் எதிலும்
தமிழ் இருக்க வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் தமிழைப் புகுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ் செழிக்கும். இதனை,

............. ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
|
(தேசிய கீதங்கள், தமிழ்: 2)
(சேமம் = நலம்,
உற = அடைய)
எனத் தம் பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
1.1.2 புதிய படைப்புகள்
உலகத்தில் உள்ள செம்மொழிகளுள்
(Classical Languages) தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழியின்
இலக்கியங்களும், இலக்கண வளமும் தொன்மையும்
அதைச்
செம்மொழிகளுள் ஒன்றாக இடம்பெறும் சிறப்பினை நல்கின.
ஆனால் அந்தச் சிறப்பு நிலைபெற்று இருக்க வேண்டுமானால்
என்ன செய்ய வேண்டும்? ஆக்கபூர்வமான பணிகள்
சிலவற்றைத் தமிழுக்குச் செய்யவேண்டும் என்கிறார் பாரதியார்.
அவற்றுள் ஒன்று புகழ்பெறும் தன்மையிலமைந்த பல புதிய
படைப்புகள் தமிழில் வரவேண்டும் என்பதாகும்.
உலகெலாம் தமிழோசை ஒலிக்கட்டும்
தமிழைத் தமிழ்
நாட்டிலுள்ள தெருக்களில் எல்லாம்
ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய பாரதியார், அதை
உலகம் எல்லாம் பரவும் வகை செய்ய வேண்டும் என்றும்
குறிப்பிடுகிறார். எனவே,

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
|
(தேசிய கீதங்கள், தமிழ்: 1)
என்று அறிவுறுத்துகின்றார். பின்னர் தமிழ் மொழி வளம் பெற
வழி கூறுகின்றார்.
மொழிவளம் சேர்க்கும் வழிமுறை
தமிழ் இனிய மொழி. இலக்கிய,
இலக்கணச் சிறப்புடைய
மொழி. தொன்மையான மொழி. இத்தகைய தமிழ் மொழியை
வளப்படுத்த வேண்டுமானால் பிறநாட்டிலுள்ள
சிறந்த
அறிஞர்களின் நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும்,
மேலும் புகழ் தரக்கூடிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும்
என்று குறிப்பிடுகிறார் பாரதி.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
|
(தேசிய கீதங்கள், தமிழ் : 3)
(சாத்திரங்கள் = நூல்கள்,
பெயர்த்தல் = மொழிபெயர்த்தல்,
இறவாத = அழியாத)
எல்லாக் காலத்திலும்
எல்லோருக்கும் பொருந்துகின்ற, எல்லோரும் ஒத்துக் கொள்கின்ற
உயர்ந்த கருத்துகளைக்
கொண்டிருக்கும் இலக்கியங்கள் புகழுடைய
இலக்கியங்களாகத் திகழும். அத்தகைய
புகழுடைய
இலக்கியங்களைப் படைத்துத் தமிழை வளப்படுத்துங்கள்
என்கிறார் பாரதியார்.
அதோடு மட்டும்
அல்லாமல், உலகிலுள்ள சிறந்த
பல்துறை அறிஞர்களின் உயர்ந்த சிந்தனைகளும்
தமிழ்
மொழியில் இடம்பெறும் வகையில் அவற்றைத்
தமிழில்
மொழிபெயர்த்து எழுதவேண்டும் என்கிறார் பாரதியார்.
அறிவியலில் முன்னேறிக்
கொண்டிருக்கும் இந்த
நூற்றாண்டில், அறிவியல் கூறுகள், மேலைநாட்டு மொழிகளில்
இருப்பதைப் போலத் தமிழில் இல்லை. அறிவியல் கூறுகளைப்
பற்றிச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை என்றும்
தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும்
என்றும்
ஓர் அறிவிலி உரைத்தான். அந்த அறிவிலியின்
சொல்
மெய்யாகி விடுமோ என்று பாரதி அஞ்சுகிறார்.
எனவே,
அந்த அச்சத்தை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் |
(தேசியகீதங்கள், தமிழ்த்தாய்: 10)
(புவி = உலகம்,
மிசை = மேல், ஓங்கும்
= புகழ் அடையும்)
என்று கூறுவதாகப் பாரதியார் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன
செய்ய வேண்டும்?
உலகிலுள்ள பல நாடுகளுக்கும் செல்லுங்கள்.
தமிழை
வளப்படுத்துவதற்காக, நீங்கள் செல்லும் இடங்களில் அல்லது
நாடுகளில் உள்ள கலைச் செல்வங்கள் அனைத்தையும்
சேகரியுங்கள். நீங்கள் சேகரித்த அத்தகைய செல்வங்களை
எல்லாம் தமிழில் சேர்த்துத் தமிழை வளப்படுத்துங்கள்
என்கிறார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்
|
(தேசியகீதங்கள், தமிழ்த்தாய் : 11)
(திக்கு = திசை,
கொணர்ந்து = கொண்டு வந்து)
|