4.1
சாதி
|
E
|
அறிவுக்குப்
பொருந்தாத ஒன்று சாதி ஆகும். மனித சமுதாயத்தை
ஒரே குலமாகப் பார்க்கும் பண்பு கொண்டவர்கள் தமிழர்கள். உலக
மக்கள் இடையே எந்தப் பிரிவும் இல்லை என்ற எண்ணம் கொண்டு
அவர்கள் வாழ்ந்தார்கள்.
இவ்வாறு
உலக மக்களை ஒன்று என்று கருதினாலும் ஆட்சி
நிர்வாகத்திற்காக உலகில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அவற்றுள்
மொழி அடிப்படையில் பல இனங்கள் உள்ளன.
இந்தப்
பிரிவுகளுக்கு நிர்வாக நோக்கம் இருப்பதை நாம் அறிய முடிகிறது.
ஆனால், இந்தச் சாதிப்பிரிவிற்கு நம்மால்
எந்த நல்ல
நோக்கத்தையும் அறிய இயலவில்லை. ஆகவே
சாதியை
அறிவுக்குப் பொருந்தாது என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.
|
உலகினில் சாதிகள் இல்லை-என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்ற சாதி-என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?
|
(காதல்
பாடல்கள், ‘அவள் அடங்காச் சிரிப்பு’ - 3)
|
என்று கேள்வி கேட்டு, ஒரு பெண்ணின் வாய்மொழியாக இந்த
உலகில் சாதி இல்லை என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
|
4.1.1 சாதி நீக்குவது தமிழர் கடமை
|
தமிழ்
மக்கள் தங்களிடையே இருக்கும் சாதி
உணர்வை
ஒழிக்கவேண்டும். அவ்வாறு ஒழிக்காமல் உயர்வு, தாழ்வு சொல்லித்
திரிவது மடமை ஆகும் என்பதைப் பாவேந்தர்
உணர்த்த
எண்ணினார். எனவே,
|
பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல்
மடமை - இந்தப்
பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை
|
(பாரதிதாசன்
கவிதைகள், 60, சகோதரத்துவம் - 1)
|
என்று தமிழர்களின் கடமையை உணர்த்தியுள்ளார்.
இந்தக்
கடமையை உணராமல் மேலும், சாதி வளர்ப்பவர்களைப்
பார்த்துப் பாரதிதாசன் கேள்வி கேட்கிறார் பாருங்கள்.
|
மாந்தரில்
சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?
|
(பாரதிதாசன்
கவிதைகள் 50. ஆய்ந்துபார் - 1)
|
என்று கேட்கும் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வோம்?
‘மக்கள் ஒரே குலமாய் வாழ்வதுதான்
சரி’ என்றுதானே
சொல்வோம்.
பாவேந்தர்,
எந்தக் கருத்தை வலியுறுத்த விரும்புகிறாரோ அந்தக்
கருத்தை நம் வாயால் வர வைக்கும் திறத்தை இந்தப் பாடலில்
வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்தீர்களா?
|
4.1.2 ஐந்து சாதிகள்
|
முதலில்
நான்கு பிரிவுகள் மட்டுமே நம்மிடையே புகுத்தப்பட்டன.
அவை வேதியர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆகும்.
இந்த நான்கு சாதிகளுக்கும் அப்பால் ஐந்தாம் சாதியாகப் ‘பஞ்சமர்’
என்று ஒரு பிரிவையும் உருவாக்கி விட்டார்கள்.
இன்று
அப்பிரிவுகள் பலநூறு சாதிகளாக வளர்ந்து விட்டன. இந்தச்
சாதிகளுக்கு அடிப்படை யார்? என்ற கேள்வி இப்போது நம்மிடம்
தோன்றுகிறது அல்லவா? பாரதிதாசனே சொல்கிறார் பாருங்கள்.
|
வேதம் உணர்ந்தவன் அந்தணன்
- இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் - மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் - இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்
|
(பாரதிதாசன்
கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் 6)
|
(நீதமுடன் = நீதியுடன்,
நாதியற்று = உதவியில்லாமல்,
நாத்திறம் = வாதாடும் திறமை, ஆதியினில்
= பழங்காலத்தில்)
|
என்று இந்த வருணப் பாகுபாட்டை முதலில் மனு
என்பவர்
வகுத்ததாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். (வருணம் - நிறம்,
நிறம் அடிப்படையில் உண்டான பிரிவு) இந்தச் சாதிப்பிரிவு
உலகநாடுகளில் எல்லாம் உள்ளதா? அல்லது நம் இந்திய நாட்டில்
மட்டுமே உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலாகப் பாரதிதாசன்,
|
தீண்டாமை என்னும்
ஒருபேய் - இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம்
- எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் - செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்
|
(பாரதிதாசன்
கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் - 3)
|
(காறி உமிழ்தல் = எச்சிலைச் சேர்த்துக் கோபத்துடன் துப்புதல்)
என்று
பாடியுள்ளார். இந்தப் பாடல் மூலம் தீண்டாமைக் கொடுமை
இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று பதில் தந்துள்ளார். இந்தக்
கொடுமையைப் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தால் நம்மை
உமிழ்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுக்குப்
பொருந்தாத இந்தச் சாதிப்பிரிவை ஏன் இந்தியாவில்
நாம்
வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இதற்கும் பாரதிதாசன் தமது பாடல்
வழியே பதில்
சொல்லியிருக்கிறார்.
|
சாதிப்பிரிவு
செய்தார்
தம்மை
உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
நீதிகள்
சொன்னாரடி
|
(பாரதிதாசன்
கவிதைகள் 3, சமத்துவப்பாட்டு - 45)
|
என்று தம்மை மேலும் உயர்த்திக் கொள்வதற்காகத்தான்
சாதிப்பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தாங்கள்
வகுத்த
சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப அவர்கள் நீதியையும்
வகுத்துக்
கொண்டார்கள் என்றும் பாரதிதாசன் பாடியுள்ளார்.
|
4.1.3 தமிழர்க்குச் சாதி இல்லை
|
தமிழ்
மக்களுக்குச் சாதி கிடையாது. அவர்கள் அனைவரும்
தமிழர்கள் என்ற இன வரையறைக்கு உட்பட்டவர்கள். ஆனால்,
தற்காலத் தமிழர்களிடம் சாதி வேரூன்றி விட்டது. இதைப் போக்க
எண்ணிய பாரதிதாசன் தமிழர்களுக்குச் சாதி இல்லை
என்ற
உண்மையை,
|
மிக்கு
உயர்ந்த சாதி, கீழ்ச்சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க்கில்லை
பொய்க் கூற்றே சாதி எனல்
|
(பாரதிதாசன்
கவிதைகள் - கடல்மேல் குமிழிகள் : 26)
|
என்று உணர்த்தியுள்ளார். மேலும், தமிழர்க்குச் சாதி உண்டு என்று
கூறுவது பொய்க்கூற்று என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார்.
மனிதர்களில் சாதியாலோ வேறு காரணங்களாலோ உயர்வும்
இல்லை; தாழ்வும் இல்லை என்ற நிலை வரவேண்டும். அப்போது
மனித வாழ்க்கையானது இன்பத்தின் எல்லையாக விளங்கும்
என்பதை
|
தாழ்வில்லை
உயர்வில்லை
சமமென்ற
நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி
- சகியே
வாழ்வெல்லை
காண்போமடி
|
(பாரதிதாசன்
கவிதைகள் - 3, சமத்துவப்பாட்டு - 109)
|
என்ற பாடல் வரிகளின் வழியாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். சாதிப்
பற்றுக் கொண்ட தமிழர்கள் தமிழ் மொழியைத் தமது மொழியாகவும் உயர்ந்த
மொழியாகவும் கருதுவது இல்லை. சாதிவெறி கொண்ட தமிழ் இளைஞர்களால் தமிழ்
எழுச்சிக்காகப் போரிட இயலாது. எனவே தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழர்களிடம்
சாதிப் பற்று இருக்கக் கூடாது என்பதனைப் பாரதிதாசன் பின்வருமாறு பாடியுள்ளார்.
|
சாதி
களைந்திட்ட ஏரி - நல்ல
தண்டமிழ்
நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே
- நல்ல
தண்டமிழ்
வாளினைத் தூக்கும்
|
(பாரதிதாசன்
கவிதைகள் - 2, 25, பாரதி உள்ளம் -1)
|
இந்தப் பாடலில் பாரதிதாசன் சமுதாயத்தை ஏரியாக உருவகம்
செய்து உள்ளார்; தமிழை நீராக உருவகம் செய்துள்ளார். சாதி
இல்லாத சமுதாயம் அமைந்தால் அது தமிழை உயர்த்தும் என்ற
உண்மையை உணர்த்துவதற்கு இவ்வாறு உருவகப்படுத்தி உள்ளார்.
|
4.1.4 சாதிகள் ஒழியும் வழி
|
தமிழ்ச்
சமுதாயத்தை விட்டுச் சாதிகள் ஒழிய வேண்டும் என்றால்
கலப்புத் திருமணம் பெருக வேண்டும் என்ற
கருத்தைப்
பாரதிதாசன் தெரிவித்து உள்ளார். ஆனால், இந்தக் கலப்புத்
திருமணத்தைச் சமுதாயம் உடனே ஏற்றுக் கொள்ளும் என்று நம்ப
இயலாது. ஏனெனில், இந்தச் சமுதாயம் சாதியில் ஊறிப் போனது.
எனவே, இதற்கு எதிர்த்து நின்று போராடும் உணர்வு வேண்டும்
என்று பாரதிதாசன் பாடியுள்ளார். கலப்புத் திருமணம் செய்ய
விரும்பும் பெண்ணும் அவளது தந்தையும் உரையாடுவது போல்
பாரதிதாசன் தமது காதல் பாடல்களில் பாடியுள்ளார். மகளது
கலப்புத் திருமணத்தை எதிர்த்துப் பேசும் தந்தையார்,
|
|
காட்சி |
நமது
சாதி வேறு நல்லோய்
அவனது சாதிவேறு என்று அறிகிலாய்
என்று சினத்தைச் சொல்லில்
ஏற்றினான்
|
(காதல்
பாடல்கள், ‘கலப்புமணம் வாழ்க’ - 2)
|
என்று கூறுகிறார். அதைக் கேட்ட மகள்,
|
அப்பா!
உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்;
காக்கை அல்லர்; கரும்பாம்பு
அல்லர்
|
(காதல்
பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ -2)
|
என்று கேலியாகக் கூறுகிறாள். அதைக் கேட்ட அவளது தந்தை,
|
மனிதரில் சாதி இல்லையா மகளே
|
(காதல்
பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ - 2)
|
என்று கேட்கிறார். அதற்கு மகள்,
|
சாதி
சற்றும் என்நினைவில் இல்லை
மாது நான் தமிழனின் மகள்ஆதலாலே
|
(காதல்பாடல்கள்,
கலப்பு மணம் வாழ்க - 3)
|
என்று பதில் சொல்கிறாள். இந்த உரையாடலில் தந்தையார் முதலில்
தனது மகளைப் பார்த்துக் கோபமாகக் கேட்பதுபோல் பாரதிதாசன்
பாடியுள்ளார். கலப்பு மணம் செய்து கொள்ள விரும்பும் மகளும்
சற்றும் விட்டுக் கொடுக்காமல் எள்ளலுடன் (கேலியுடன்) பதில்
சொல்வதுபோல் பாரதிதாசன் அமைத்து உள்ளார்.
இந்தப் பகுதியின்
தொடக்கத்திலிருந்து கலப்புத் திருமணத்தை, வெற்றியை நோக்கி
வளர்த்துக் கொண்டு வந்து முடித்துள்ள தன்மை சிறப்பு உடையது
ஆகும்.
|
தன்
மதிப்பீடு: வினாக்கள் - I
|
|
|
|
- பகுத்தறிவு என்றால் என்ன?
|
|
- தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகப் பாரதிதாசன் எதை உணர்த்துகிறார்?
|
|
- சாதி நீங்கிடப் பாரதிதாசன் காட்டும் வழி யாது?
|
|
|
|