5.1 நாடகம்
 

E

ஒரு கதையை நடந்தது போல் நடித்துக் காட்டுவது நாடகம் எனப்படும். இந்த நாடகங்கள் காலப் போக்கில் மூன்று வகையாகப் பிரிந்தன.

1. பார்ப்பதற்கான நாடகங்கள்
2. படிப்பதற்கான நாடகங்கள்
3. பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடகங்கள்

பார்ப்பதற்கான நாடகங்கள் பலவற்றைப் பம்மல் சம்பந்தனார் காலம் தொடங்கிப் பல நாடகக் குழுவினர் நடத்தி வருகிறார்கள்.

படிப்பதற்கான நாடகங்கள் பலவற்றைக் கவிதை வடிவில் காணமுடிகிறது. அச்சிடப்பட்ட நூல் வடிவிலும் கிடைக்கின்றன.

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடகங்கள் மேடை நாடகங்களாகப் பார்க்கப்பட்டும் நூல் வடிவில் படிக்கப்பட்டும் வருகின்றன.
 

5.1.1 பாரதிதாசனின் நாடகங்கள்
 

பாரதிதாசனின் நாடகங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடக வகையைச் சேர்ந்தவை ஆகும். பாரதிதாசனின் நாடகங்களில் பலவும் அச்சிடப்பட்டு நூல் வடிவில் நமக்குக் கிடைக்கின்றன, அவற்றில் பல நாடகங்கள் மேடைகளில் நடிக்கப்பட்டவை என்பதை அந்த நூல்களின் முன்னுரை வாயிலாக நாம் அறிய முடிகிறது.

பாரதிதாசன் நாடகங்களின் எண்ணிக்கை மொத்தம் 47 ஆகும். இவற்றில் பத்து நாடகங்கள் செய்யுள் வடிவில் வந்தவை. அவை,

1. தமிழச்சியின் கத்தி
2. வீரத்தாய்
3. பாண்டியன் பரிசு
4. புரட்சிக்கவி
5. ஒன்பது சுவை
6. போர் மறவன்
7. ஏழை உழவன்
8. சத்தி முத்தப் புலவர்
9. அமிழ்து எது?
10.நல்ல முத்துக்கதை

என்பவை ஆகும்.

இவற்றில் தமிழச்சியின் கத்தி, வீரத்தாய், பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, நல்லமுத்துக்கதை ஆகிய ஐந்து நாடகங்களும் காப்பியங்களாகவும் வெளிவந்துள்ளன. இவை பாரதிதாசனின் காப்பியங்கள் என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

உரை நடையில் பாரதிதாசனால் எழுதப்பட்ட நாடகங்களில் பதினொரு நாடகங்கள் நூல்வடிவில் வெளிவரவில்லை. அவை,

1. சங்கீத வித்வானோடு
2. ஐயர் வாக்குப் பலித்தது
3. ஆக்கம்
4. தீவினை
5. சிந்தாமணி
6. லதாக்ருகம்
7. கருஞ்சிறுத்தை
8. பாரதப் பாசறை
9. இசைக்கலை
10. மக்கள் சொத்து
11. பறவைக் கூடு

என்பவை ஆகும்.

இவை தவிர இருபத்தாறு நாடகங்கள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன.

1. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
2. பிசிராந்தையார்
3. சேரதாண்டவம்
4. நல்ல தீர்ப்பு
5. அமைதி
6. கற்கண்டு
7. பொறுமை கடலினும் பெரிது
8. இன்பக் கடல்
9. தலை மலை கண்ட தேவர்
10. கழைக் கூத்தியின் காதல்
11. குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும்
12. ஆரிய பத்தினி மாரிஷை
13. ரஸ்பு டீன்
14. அம்மைச்சி
15. வஞ்ச விழா
16. விகடக்கோர்ட்
17. சௌமியன்
18. மேனி கொப்பளித்ததோ
19 படித்த பெண்கள்
20. மூளை வைத்தியம்
21. குலத்தில் குரங்கு
22. முத்துப்பையன்
23. கோயில் இரு கோணங்கள்
24. சமணமும் சைவமும்
25. மருத்துவர் வீட்டில் அமைச்சர்
26. காதல் வாழ்வு.

என்பவை ஆகும்.

இந்த இருபத்தாறு உரைநடை நாடகங்களையும் இந்தப் பாடத்தில் அறிமுகம் செய்ய இயலாது. எனவே இரணியன், பிசிராந்தையார், சேரதாண்டவம், நல்ல தீர்ப்பு, அமைதி, கழைக் கூத்தியின் காதல் ஆகிய ஆறு நாடகங்கள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.