6.2 இன்சொல்
இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் போற்றப்படுவார்கள். இன்சொல் பேசுவதன் சிறப்பை
நல்வழியில் ஒளவையார் விளக்கியுள்ளார்.
அதை, இந்தத் தொகுதியில் உள்ள மூதுரையும் நல்வழியும்
என்ற பாடத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். இன்சொல் பேசுதலின்
பெருமையையும் வன்சொல் பேசுவதால் ஏற்படும் இழிவையும் சிவப்பிரகாசர் எவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை இங்கே
பார்ப்போம்.
6.2.1
வன்சொல்லும் இன்சொல்லே
கொடிய சொற்கள் பேசுகிறவர்களை
யாரும் விரும்பமாட்டார்கள்; இனிய சொற்களைப் பேசுகிறவர்களை
எல்லோரும் விரும்புவார்கள் என்று கூறிய சிவப்பிரகாசரே
‘கொடுஞ்சொல்லும் இனிய சொல்லே’ என்று கூறியுள்ளார். கொடுஞ்சொல்லைச் சிவப்பிரகாசர் ஏன் இனிய சொல் என்று
கூறியுள்ளார் என்பது சிந்தனைக்கு உரியது
அல்லவா? இதற்கும் அவரே விளக்கம் தந்துள்ளார்.
மாசற்ற நெஞ்சுடையார்
வன்சொல்இனிது ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு
(2) |
 |
(பிறிது = வேறு, ஈசற்கு = சிவனுக்கு, நல்லோன்
= சாக்கிய நாயனார், எறிசிலை = எறிந்த கல், கரும்பு வில்லோன்
= கரும்பு வில் கொண்ட மன்மதன், நல்நுதால் =
அழகிய நெற்றியை உடைய பெண்ணே)
என்னும் பாடலில் உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் ஒருவர் சொல்கின்ற கொடிய சொல்லும் இன்சொல்லே என்று அவர்
கூறுகிறார்.
உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ
ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும்.
மாணவனைப் பார்த்து ஆசிரியர்
சொல்லுகின்ற கொடுஞ்சொல்லும், மகனைக் கண்டிக்கும் தந்தையின் கொடுஞ்சொல்லும் உண்மையில் கொடுமையானவை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கூறுபவை. எனவே,
அந்தக் கொடுஞ்சொற்களும் இன்சொற்களாகவே கருதப்படும் என்று நாம் அறிதல் வேண்டும்.
இந்தக் கருத்தை விளக்கும் வகையில் ஒரு பழமொழியும் நிலவுகிறது. ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்’
என்பதே அப்பழமொழி.
நெல்லிக்காயை உண்ணும்போது அது முதலில் கசக்கும்.
பின்னர் அதுவே இனிக்கும். அதைப் போன்றே பெரியவர்கள் சொல்லும் அறிவுரையும் முதலில் நமக்கு மனக் கசப்பைத்
தந்தாலும் அந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில்
பயன்படும்போது நமக்கு இனிப்பைத் தரும்
என்பதே இப்பழமொழியின் விளக்கம். இந்தப் பழமொழிக்கு ஏற்பவே சிவப்பிரகாசரும் ‘வன்சொல்லும் இன்சொல்லே’ என்று
விளக்கியுள்ளார்.
இன்சொலால் அன்றி
இருநீர் வியன்உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய் அதிர்வளையாய்!
பொங்காது அழல்கதிரால் தண்என் கதிர்வரவால் பொங்கும் கடல் (18) |
 |
(இருநீர் = கடல், வியன்உலகம்
= அகன்ற உலகம்; பொன்செய் அதிர்வளையாய் = பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த பெண்ணே, அழல்கதிர் = சூரியன்,
தண்என்கதிர் = நிலவு)
என்னும் பாடலும் இன்சொல்லின் சிறப்பை விளக்குகிறது.
இனிய சொற்களைப் பேசினால் இந்த உலக
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். வன்சொல் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்ற உண்மையை
ஓர் உவமையின் வாயிலாக நன்னெறி விளக்கியுள்ளது.
கதிரவனின் ஒளி வெப்பமானது. அந்த வெப்பத்தில் கடலின் அலைகள் பொங்கி எழுவதில்லை. நிலவின்
ஒளி குளிர்ச்சியானதுதான். என்றாலும் கடலின் அலைகள் பொங்கி எழுகின்றன. அதைப் போல வன்சொல் பேசும்போது யாரும் மகிழ்வதில்லை; இன்சொல் பேசும்போது தான் மகிழ்ச்சி
அடைகிறார்கள். இதில் அலை பொங்கி எழுவதை மகிழ்ச்சி பொங்குவதற்குச் சிவப்பிரகாசர் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
|