1.3 தொகுப்புரை

இதுகாறும் மெய்ஈற்றின் முன் உயிர் வந்து புணரும் பொதுவிதிகள் பற்றியும், ணகர னகர ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம். ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும். தனிக்குறிலை அடுத்து வரும் மெய், வருமொழி முதலில் உயிர்வந்தால் இரட்டிக்கும்.

நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்; மெல்லினமும், இடையினமும் வந்தால் இயல்பாகும். அல்வழிப் புணர்ச்சியில் அனைத்து மெய்களும் வந்தாலும் இயல்பாகும்.

பாண், உமண், அமண், பரண், கவண் போன்ற பெயர்ச்சொற்களின் இறுதியில் உள்ள ணகரமெய் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்; சிலவிடங்களில் அகரச் சாரியை பெறும்.

அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் தேன் என்ற சொல், வருமொழி முதலில் மூவினமெய்கள் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும்; வருமொழி முதலில் மெல்லினம் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு; வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு, அவ்விடத்தே வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அல்லது அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு. இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால், ணகர னகரங்கள் எவ்வாறு திரியும்?
2.
சிறுகட்களிறு – பிரித்து எழுதுக.
3.
அல்வழிப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் வருமொழி முதலில் மூவின மெய்கள் வந்தால் இயல்பாகுமா? திரியுமா?
4.
பாணக்குடி – பிரித்து எழுதுக.
5.
மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வர வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்? சான்று தருக.
6.
தேன்+மொழி – எவ்வெவ்வாறு புணரும்?
7.
தற்பகை, எற்பகை – இவற்றைப் பிரித்து எழுதுக.