2.0 பாட முன்னுரை
|

|
மொழியும் பண்பாடும் என்பது இந்தப் பாடத்தின் தலைப்பு. மொழி
நாகரிகம் என்ற குழந்தையின் தொட்டில்! அதைக் கண்டு பிடிப்பதற்கு மனித இனம் என்ன
பாடுபட்டிருக்கும். இன்பமாக மனிதர்கள் ஆடியும் பாடியும் பொழுது போக்கிக்
கொண்டிருந்த நிலையிலிருந்துதான் மொழி தோன்றியிருக்க வேண்டும் என்கிறார், மேலைநாட்டு
அறிஞர் ஒருவர். மொழி தோன்றுவதற்கு முன் சைகைகளாலும், பல்வேறு குறியீடுகளாலும்
மனிதர்கள் கருத்தைப் புலப்படுத்தியிருக்க வேண்டும். அறிவு இல்லாமல் மொய்த்துக்
கிடந்த மனிதக் கூட்டம் என்ற வெள்ளத்தின் மேலே செந்தாமரைக் காடு பூத்ததுபோல் மொழி
பூத்தது என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். |
 |
முந்திய நாளினில்
அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி
(பாரதிதாசன் இசைஅமுது
தொகுதி -1, தமிழ் :1) |
 |
(மொய்த்த = நெருங்கிய , புனல் =
நீர்)
மொழி மனிதனுக்குக் கிடைத்த ஒப்பற்ற கருத்துப்
புலப்பாட்டுக் கருவியாகும். மொழியில் எழுத்து, பேச்சு என்று இரு
வழக்குகள் உள்ளன. உலக மொழிகளில் சில மொழிகள்
பழைமையும் இலக்கிய வளமும் உடையன. அச்சில
மொழிகளில்
தமிழ் ஒன்று. தமிழ் நல்ல பண்பாடு வளர்க்கும் ஒரு கருவியாக
உள்ளது. பல்வேறு
காலப்பகுதிகளில் தமிழ் பாதுகாத்து வளர்த்த
பண்பாடு பல
அயல்மொழிகளின் தாக்கங்களைப் பெற்றிருக்கிறது.
இச்செய்திகள் இப்பாடத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளமை
காணலாம். |