1.3
பத்தாம் பாடலும் முப்பதாம் பாடலும்
பத்தாம் பாட்டு
வழிபடு வோரை வல்லறி தீயே
எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் ஊன்பொதி
பசுங்குடையார். இப்பாட்டில் பாடப் பெற்றவன்
நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
என்னும் சோழ வேந்தன்.
முப்பதாம் பாட்டு
செஞ்ஞாயிற்றுச் செலவும்
எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் உறையூர்
முதுகண்ணன் சாத்தனார். சோழன் நலங்கிள்ளி
பாடப்பெற்ற அரசன்.
1.3.1 நல்ல அறிவுரை (பத்தாம் பாட்டு)
ஊன்பொதி பசுங்குடையார்
சோழனுக்கு இப்பாட்டின் வழியாகச் சில நல்ல அறிவுரைகளை வழங்குகின்றார். புகழ்ச்சிக்கு
மயங்குதல், பிறரைப் பற்றிப் பழி கூறுவோர் சொற்களை ஆராயாமல் ஏற்றல் போன்ற
பண்புகள் வேந்தனுக்கு மிகவும் வேண்டாதன. உண்மையாக ஒருவன் தவறு செய்திருப்பின்
அவனைத் தண்டிக்கலாம். தவறு செய்தவர் உணர்ந்து திருந்துவாராயின் தண்டனையும்
விடத்தக்கது. இத்தகையனவும் வேந்தனுக்குத் தக்க நெறிகளாகும். இவற்றை இப்பாட்டு
எடுத்துரைக்கின்றது.
பாட்டும்
கருத்தும்
இப்பாட்டு பதின்மூன்று
அடிகளைக் கொண்டது. பாட்டு முழுமையும் பயில விரும்புவோர் இணைய நூலகத்தை அணுகலாம்.
“உன்னை வணங்கி
வாழுபவர்களை நீ விரைந்து அறிந்து கொள்ள வேண்டும். பிறரைக் குற்றம் சொல்பவர்களின்
சொற்களை நீ ஆராய்ந்து தெளிய வேண்டும். நீயே பிறரிடத்து உண்மையாகத் தீமை உள்ளது
எனக் கண்டால், அதனைக் குறித்து மனத்தில் ஆராய்ந்து, அக்குற்றத்திற்குத் தகுந்த
தண்டனையை வழங்க வேண்டும். தவறு செய்வோர் உன் பாதங்களை அடைந்து உன் முன்னே
நிற்பாரானால், பிழை செய்யாதவர்க்கு நீ அருள்வதை விட மிகுதியும் அருள் செய்ய
வேண்டும். அமிழ்தத்தையும் தன் சுவையால் வென்ற நல்ல உணவை விருந்தினர்க்குக்
குறையாமல் வழங்கும் குற்றமற்ற மனைவாழ்க்கை உடையவர் நின் பெண்டிர்; அப்பெண்டிரைத்
தழுவுவதாலேயே நின்மார்பில் அணியும் மாலை மாறுபாடுகளை அடையுமே தவிரப் பகைவரது
போரால் அது மாறுபாடுகளை அடையாது. அம்மாலை இந்திரவில் போன்றது. அதனை அணிந்த
மார்பனே! ஒரு செயலைச் செய்துவிட்டுப் பின்பு பிழையானதைச் செய்து விட்டோமே
என்று இரங்குமாறு இல்லாமல் திருந்தச் செய்யும் திறமும், மிகத் தொலைவிலும்
விளங்கும் புகழும் கொண்டவனே! நெய்தலங்கானல் என்னும் ஊரை உடைய நெடியோனே! உன்னிடம்
நெருக்கமாக வந்தேன்; உனது நல்ல பல குணங்களையும் போற்றுவேன்” என்பது பாட்டின்
கருத்துரை.
வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
என்ற இரண்டடிகள் கூறும் அறிவுரைகள் எக்காலத்திலும்
அதிகாரத்தில் இருக்கும் எவர்க்கும் ஏற்றவை. புகழ்ச்சிக்கு அடிமையாதல், பிறர்
கூறும் பழிகேட்டல், தானே ஆராயாமை இவை ஆள்வோர்க்குப் பெரிய தீங்குகளை உண்டாக்கும்.
செய்திரங்காவினை என்ற தொடர்
மிக அழகானது. பின்னர் நினைத்துப் பார்க்கும்போது இதை ஏன் செய்தோம் என்று
வருந்தச் செய்யும் செயலைச் செய்தல் கூடாது. முன்னரே நீள நினைந்து அழிவதும்
ஆவதும், இடையிலே உண்டாகும் நன்மையுமெல்லாம் கருதி, யாரும் எள்ளாதவாறு எண்ணிச்
செயல்பட வேண்டுமென்பதை இத்தொடர் எடுத்துக் காட்டுகின்றது.
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின்
திணை பாடாண்;
துறை இயன்மொழி.
இளஞ்சேட்சென்னி
பகைவரால் அணுக முடியாத மார்பினன் என்றும், செய்திரங்காவினை உடையவன் என்றும்,
மிகத்தொலைவிலும் மிக்க புகழ் கொண்டவன் என்றும் போற்றியமையால் பாடாண் திணை
ஆயிற்று. இவ்வேந்தனின் இனிய இயல்புகளை மொழிந்தமையின் இயன்மொழித் துறையுமாயிற்று.
1.3.2 நலங்கிள்ளியின்
பேராற்றல் (முப்பதாம் பாட்டு)
இவ்வுலகில் அறிஞர்கள்
பலர் உள்ளனர். அவர்கள் ஞாயிற்றின் இயக்கம், அவ்வியக்கத்தால் பொலியும் பார்வட்டம்,
காற்றியங்கும் திசைகளின் பரிமாணம், ஒன்றாலும் தாங்கப்படாமல் நிற்கும் ஆகாயம்
ஆகிய இவற்றின் நுணுக்கங்களை அங்கங்கே சென்று அறிந்தோர்போலத் துல்லியமாகக்
கணக்கிட வல்லவர்கள். அவர்களாலும் அளத்தற்கரிய பேராற்றல் படைத்தவன் நலங்கிள்ளியென்று
புலவர் இப்பாட்டில் கூறுகின்றார்.
பாட்டும் கருத்தும்
இப்பாட்டு பதினான்கு
அடிகளைக் கொண்டது. இதன் முழுவடிவை இணைய நூலகப் பகுதியில் காணலாம். "ஞாயிற்று
மண்டிலத்தின் இயக்கமும், அஞ்ஞாயிற்றின் ஒளிவீச்சும், அவ்வொளி வீச்சால் ஏற்படும்
வீதியும், ஞாயிற்றின் இயக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்று இயங்கக்
கூடிய திசைகளும், ஓர் ஆதாரமும் இல்லாமல் நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பட்ட
இவற்றை அங்கங்கே சென்று அளந்து அறிந்தவர்களைப் போல, இவை இவை இவ்வளவு அளவின
என்று காணும் கல்வி வல்லார் உலகில் உள்ளனர். அத்தகைய அறிவாலும் அறியமுடியாத
அடக்கத்தைக் கொண்டவன் நீ. யானை தன் கன்னத்துள்ளே அடக்கிய கல்லைப்போல உன்
வலிமை வெளியே தெரியாது மறைந்திருக்கிறது. எனவே புலவர் உன்னுடைய எத்தன்மையைத்
தெளிவாக எடுத்துக் கூறுவர்? கடலில் செல்லும் கலங்கள் கூம்பின் மேலே விரிக்கப்பட்ட
பாயை மாற்றாமலும், அக்கப்பலில் உள்ள சுமையைக் குறைக்காமலும் ஆற்றின் முகத்துவாரத்தில்
புகும்; அப்போது பரதவரும் உப்பு விளைப்போரும் ஆகிய எளிய நிலையினர் அக்கலங்களைத்
தம் இனத்திற்கிடையே உள்ள பெரிய வழியில் கொண்டு செல்லும்போது, அக்கலங்களிலிருந்து
விழுந்து கடலால் கொண்டுவரப்பட்ட பல வளங்களையும் கொண்ட நாட்டையுடையவனே!” என்பது
இப்பாட்டின் கருத்து.
களிறு கவுளடுத்த
எறிகல் என்பது யானை பகைவரைத் தாக்குதற்கு, பிறர் எறிந்த கல்லைத் தன் கன்னத்தில்
மறைத்து வைத்திருக்கும். அதனைப் பார்த்தறிய இயலாது. அதுபோல வேந்தனின் எண்ணங்களையும்
யாரும் அறிய முடியாது என்ற சிறந்த பொருள் தருவது.
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின் திணை பாடாண்;
துறை இயன்மொழி.
நலங்கிள்ளியின் அளவிட
முடியாத ஆற்றலை எடுத்துக்
கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர்
கணிக்க முடியாத அளவு செறிந்த குண இயல்புடையவன்
என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.
|