தன் மதிப்பீடு : விடைகள் - I 1. கிள்ளிவளவன் இறந்த போது நப்பசலையார் அவனுடைய பேராற்றலை எங்ஙனம் புகழ்ந்து பாடினார்? “நெருங்கி வரும் போரில் தன்னை எதிர்த்து நிற்கும் பகைவரை எதிர்நின்று வெல்லுகின்ற படையை உடையவன் கிள்ளிவளவன்; அவ்வரசன் வலிமை மிக்க தேரைக் கொண்டவன்; பொன்னாலாகிய மாலையை அணிந்தவன். இத்தகையவன் உயிரைக் கூற்று (எமன்) எப்படிக் கவர்ந்திருக்க முடியும்? கூற்றுவன் தன் மனத்தே கறுவு கொண்டவனாயினும் வெளிப்படத் தன் கோபத்தை அவ்வேந்தனிடம் காட்டியிருக்க இயலாது; போர் செய்யும் நோக்கோடு நெருங்கி வந்த கையோடு உடம்பைத் தொட்டுச் சோழன் வருந்தச் செய்திருந்தால் அக்கூற்றுவன் பிழைத்திருக்க முடியாது. எனவே கூற்றுவன் பாடுகின்றவர்களைப் போலத் தோன்றி, கையால் தொழுது ‘உயிரைக் கொடுத்துவிடு’ என இரந்து பெற்றிருக்க வேண்டும்". |