4.4 நம்பி நெடுஞ்செழியன் (239ஆம் பாட்டு)

239ஆம் பாட்டு நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியதாகும். இப்பாட்டு தொடியுடைய தோள் மணந்தனன் எனத் தொடங்குவது; இருபத்தோரடிகளை உடையது.

பாட்டின் சூழல்

நம்பி நெடுஞ்செழியன் என்பான் மக்கள் போற்ற வாழ்ந்த அரசன். போர்க்களத்தின் முன்னின்று பகைப் படைகளைப் புறங்கண்டு ஓடச் செய்தவன். இரவலர்கட்குப் பெருங்கொடை நல்கியவன். வாழ்க்கையில் துய்க்கத் தகுவனவற்றைத் துய்த்து அறநெறி பிறழாது வாழ்ந்தவன். புகழ்பெற வாழ்ந்த இப்பெருந்தகை இறந்துபட்ட போது பேரெயின் முறுவலார் அவன் புகழ் போற்றும் வகையில் இப்பாட்டைப் பாடினர்.

4.4.1 பாட்டின் கருத்து

நம்பி நெடுஞ்செழியன் இறந்த பிறகு அப்பெருமகனைப் புதைப்பது தகுமா, எரிப்பது தகுமா என்ற வினா எழுந்தது. அந்நிலையில் பேரெயின் முறுவலார் இவ்வாறு கூறினார்:

“இளம் பெண்களின் வளையணிந்த தோள்களை நம்பி நெடுஞ்செழியன் தழுவினான்; காவல் மிக்க சோலைகளின் பூக்களைச் சூடினான்; குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தைப் பூசினான்; பகைவரை அவர்தம் சுற்றத்தாரோடு அழித்தான். நண்பர்களை மேம்படுத்திக் கூறினான். இவர்கள் வலியவர்கள் எனவே இவரைப் பணிவோம் என்று யார்க்கும் வழிபாடு சொல்லி அறிய மாட்டான்; இவர்கள் நம்மை விட எளியவர்கள் என்று கருதி அவர்களை விடத் தன்னை மேம்படுத்திச் சொல்லி அறிய மாட்டான். பிறரிடம் சென்று பொருள் வேண்டுமென்று இரத்தலை அறிய மாட்டான். ஆனால் தன்னை வந்து சூழ்ந்து நின்று இரந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லுதலை அறிய மாட்டான். அரசர்களின் அவைக் களங்களில் தன் சிறந்த புகழை வெளிப்படுத்தினான். தன் மேல் வரும் படையைத் தன் நாட்டு எல்லையுள் புகாமல் எதிர்நின்று தடுத்தான். புறங்காட்டி ஓடுகின்ற படையை அதன் பின் சென்று தாக்காது நின்றான். வேகமாகச் செல்லும் தன் குதிரையைத் தன் மனத்தைக் காட்டிலும் விரைவாகச் செலுத்தினான். நீண்ட தெருக்களில் தன் தேர் சூழ்ந்து வருமாறு செலுத்தினான். உயர்ந்த யானைகளில் அவன் ஊர்ந்து வந்தனன். இனிமை செறிந்த மதுவின் குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தீர்ந்து போகச் செய்தான். பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைத் துடைத்தான். மயக்கம் தரும் சொற்களை மொழியாது நடுவு நிலை அமைந்த சொற்களை மொழிந்தான். இவ்வாறு அவ்வரசன் செய்யத் தகுவனவெல்லாம் செய்தான். ஆகவே புகழ் விரும்பி வாழ்ந்த அவன் தலையை வாளால் அறுத்துப் புதைத்தாலும் புதைக்க; அவ்வாறு செய்யாது சுட்டாலும் சுடுக. நீங்கள் விரும்பியவாறு செய்க.”

தலையைப் புதைப்பதாலும், சுடுவதாலும் அவனுக்கு ஒன்றும் பெருமையில்லை. அவன் புகழ்பட வாழ்ந்து முடிந்தனன். அவன் புகழ் நிலைபெறும் என்று கூறினார்.

பேரெயின் முறுவலார் பெருமிதம்

நம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று துறைகளிலும் ஒருவன் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து முடித்து விட்டான். எனவே அவன் பெரும் புகழ் பெற்று, அவன் புகழுடம்பு நிலைபெற்று விட்டது. இனி அவனது பருவுடலை எது செய்தால் என்ன என்று கேட்கிறார் புலவர்.

செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ

என்று கூறினார். புதையுங்கள் அல்லது எரியுங்கள் அவன் புகழ் குன்றாது எனப் புலவர் பெருமிதம் தோன்றக் கூறினார். "வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவது இலர்" என்பது நாலடியார்(35) கூறும் செய்தியாகும். உடம்பைச் சரியாகப் பயன்படுத்திப் புகழ்மிக வாழ்ந்தவர்கள் இறப்பு வருவது குறித்து வருந்த மாட்டார்கள் என்பது இதன் கருத்து. இக்கருத்தே இப்புறப்பாட்டாலும் உணர்த்தப்பட்டுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. கிள்ளிவளவன் இறந்த போது நப்பசலையார் அவனுடைய பேராற்றலை எங்ஙனம் புகழ்ந்து பாடினார்?

2. புலவர் ஐயூர் முடவனார் கலம் செய்யும் குயவனை நோக்கிக் கூறியது யாது?

3. மாந்தரஞ்சேரலின் இறப்புக் குறித்துக் கூடலூர் கிழார் கூறுவன யாவை?

4. அதியமான் மார்பில் பாய்ந்த வேல் உண்டாக்கிய விளைவுகள் யாவை?

5. நம்பி நெடுஞ்செழியன் செய்த சிறப்புமிகு செயல்கள் யாவை?