தன் மதிப்பீடு : விடைகள்
- I
3. அருவியாம்பல் பாட்டில் கபிலர் வாழியாதனை வாழ்த்தும் மொழிகளை வரைக. அந்தணரைத் தவிர மற்ற எவர்க்கும் பணிந்து அறியாதவன் நீ. நட்பின் நிலையில் தாழ்வுபடாத உள்ளத்தால் நண்பர்க்குத் தவிர வேறெவர்க்கும் அஞ்சாதவன் நீ. வில் உரசும் உன் மணம் பொருந்திய மார்பினை உனக்கு உரிய மகளிர்க்குத் தவிர வேறு எவருக்கும் விரித்துத் தராதவன் நீ. இந்த நிலமே தன் நிலையிலிருந்து மாறுபட்டாலும் உன் வாயால் சொல்லிய சொல் பொய்ப்பதை அறியாதவன் நீ. சிறிய இலைகளை உடைய உழிஞைப் பூமாலையை அணிந்து பகைப்புலத்தில் கொள்ளத்தக்க பொருள் மிக உண்டாகுமாறு குளிர்ந்த தமிழ்நாட்டை வென்று இணைத்தவன் நீ. மலைகள் நிலை கலங்க இடி ஒலிப்பது போலச் சினந்து சென்று, ஒரு முற்றுகையில் சோழனையும் பாண்டியனையும் வென்று புறங்கண்டவன் நீ. வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும், எப்போரிலும் வெற்றியையும் உடையவனே! உன்னால் வெற்றி கொள்ளப்பட்ட வீரர் பகைவரிடமிருந்து மாறி உன்னிடம் வந்தனர். உன் தாள் நிழல் அடைந்து உன்வழி நிற்போம் எனக் கூறினர். உன் குலத்தவர்க்கு உரிய வீரத்தால் மேலும் பல போர்களில் நீ வென்றாய். அதனால் சேரர் குடித்தோன்றலே! செல்வக் கடுங்கோவே! காற்றால் சுருட்டப்படும் அலைகள் எறிய முழங்கும் கடலை வேலியாகக் கொண்ட இப்பெரிய உலகில் வாழும் நன்மக்கள் செய்த அறம் இருக்கிறது என்றால் நீ நெடுங்காலம் வாழ வேண்டும். இலைகளால் சூழப்படாத ஆம்பல் என்ற பேரெண் பலவும் ஆயிரம் வெள்ளம் எனப்படும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!" இவ்வாறு வாழ்த்துகிறார் கபிலர். |