6.4 ஐந்தாம் பாட்டும் ஆறாம்
பாட்டும்
நாள்
மகிழ் இருக்கை, புதல்சூழ் பறவை ஆகிய இரு பாடல்களும் ஐந்தாம் ஆறாம்
பாடல்களாக இடம் பெற்றுள்ளன.
6.4.1
நாள் மகிழ் இருக்கை (ஐந்தாம்பாட்டு)
இப்பாட்டின் பெயர்
நாள் மகிழ் இருக்கை. பகற்காலத்தே
அரசன் வீற்றிருக்கும் அவை நாள் மகிழ் இருக்கை எனப்பட்டது. இது திருவோலக்கம்,
நாளவை என்றும் கூறப்படும்.
பாட்டின் கருத்து
''விரைந்த ஓட்டத்தையும், பிணங்களை இடறிச்
செல்வதால்
குளம்புகளில் குருதிக் கறையையும் உடைய குதிரைகளின்
தலையில் விரிந்த தலையாட்டம் என்னும்
அணியை அணிவித்து
அவற்றைச் செலுத்திப் பகைவர்க்கு அழிவை ஏற்படுத்திய
சான்றோர் ஆகிய வீரர்களுக்குத்
தலைவனே! வில் வீரர்களுக்கு
உடற்கவசம் போன்றவனே!
தன்னை அடைந்தோர்க்குச்
செல்வமாகப் பயன்படுபவனே!
அணிகலன்களை அணிந்து
அழகு பெற்ற, ஓவியத்தில்
எழுதப்பட்டது போல் தோன்றும் மார்பினையும், அழகு
மிக்க வரிகளை உடைய இடைப்பகுதியையும், அகன்ற
கண்களையும், மூங்கிலைப் போலத் திரண்ட தோள்களையும்,
கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும், தொலைவிலும்
சென்று மணம் கமழும் நெற்றியினையும், செவ்விய
அணிகளையுமுடையவளுக்குக் கணவனே!
பாணர் குடும்பங்களைக் காப்பவனே!
பரிசிலர் செல்வமே!
பூண்களை அணிந்து விளங்கும் புகழ்மிக்க மார்பை
உடையவனே! இனிய இசை தொடுத்தற்குரிய
நரம்பினால்
பாலையாழ் வல்லவன் ஒருவன்
அழுகைச் சுவைக்குரிய
பாலைப்பண் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி இசைத்தாற்போல,
பல வேறு சுவையுடைய
கள்ளை மழையென அளவின்றி
வழங்கும் விழாக் களம்
போன்ற நாள் அவையின்
கண்
வீற்றிருக்கும் உனது
மகிழ்ச்சிக்குரிய தோற்றத்தை நாங்கள்
நன்கு கண்டு இன்புற்றோம்.''
இவ்வாறு, சேரனது அவைக்
களத்தின் மகிழ்ச்சி மிக்க
சூழலை இப்பாடலில் காட்டுகிறார் கபிலர்.
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின்
துறை பரிசில் துறைப் பாடாண் பாட்டு.
ஒருவனின் புகழும், வீரமும், ஈகையும், அருளும் ஆகிய உயர் பண்புகளைப் பாடுவது
பாடாண் திணை என்பதை அறிவீர்கள். பரிசில் துறை என்பது அரசன் முன் சென்று பரிசில்
வேண்டி நிற்பது. வண்ணமும் தூக்கும் முற்பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் நாள்மகிழ்
இருக்கை.
நாள் மகிழ் இருக்கை
- பகலில் அரசன் வீற்றிருக்கும் அவைக்களம் இத்தொடரால் கூறப்படுகிறது. மகிழ்ச்சி
பொருந்திய அரசவை என்று இது பொருள் தருகிறது. எனினும், மகிழ் என்ற சொல்லுக்குக்
‘கள்’ என்னும் பொருளும் உண்டு. இப்பாடலில் அரசவையில் கள் அருந்தி அனைவரும்
மயக்கத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார்
கபிலர். மேலும், அரசனின் நாள் இருக்கை கண்ணாலேயே கள் அருந்தியது போன்ற காட்சி
இன்பம் தருவது என்ற குறிப்புப் பொருளையும் இத்தொடர் தருகிறது. அதனால் நயமான
இத்தொடர் பாட்டின் பெயராக ஆக்கப்பட்டிருக்கலாம்.
6.4.2
புதல்சூழ் பறவை (ஆறாம் பாட்டு)
இப்பாட்டின் பெயர்
புதல்சூழ் பறவை.
புதரில் மொய்க்கும் வண்டினம் என்பது இதன்பொருள். வண்டுகளை அறுகாற் பறவைகள்
எனக் குறித்தல் மரபு.
பாட்டின் கருத்து
''வளைந்த கரிய தண்டினையும்,
இனிய இசைக்குரிய
நரம்புகளையும் கொண்ட, இசையின்பத்திற்கு
இடமான
பேரியாழில் பாலைப் பண்ணை
அமைத்து, இசைத்துக்
கொண்டு சேரனை நினைந்து செல்லும் முதிர்ந்த இசைப்புலமை
மிக்க இரவலனே!
விடியற்காலத்தில் மலையுச்சியில் தங்கும் மேகக் கூட்டம்
போன்ற கேடயங்களையும், ஒளிமிக்க
வேற்படையையும்
கொண்டு தம்மீது வெகுண்டு
மேல் வரும் பகைவரைத்
தடுக்கின்ற படை வகுப்பைக் கொண்டவர்கள்
சேர வீரர்.
இவர்கள் போரில் இறத்தலையே விரும்புவர்.
நோய், முதுமை
இவற்றால் இறத்தலை விரும்ப மாட்டார். இவர்கள்
வெற்றி
கொண்டு, வெற்றி மகளாகிய கொற்றவை விரும்பும் வாகைப்
பூவைப் பனங்குருத்தோடு சேர்த்துத் தொடுத்ததுபோல,
பூத்த
முல்லைக் கொத்துகளின் மீது வண்டுகள் மொய்க்கும். அவை,
தொடுத்தவை போன்று மலரும் பிடவ மரத்தின் பூக்களில்
சென்று தங்கும். உயர்ந்த
பளிங்குடன் விரவிய
சிவந்த
பரல்கற்கள் கிடக்கும் முரம்பு நிலத்தில் அங்கு வாழ்கின்றவர்கள்
ஒளிமிக்க மணிகளைப் பெறுவர். இத்தகைய இயற்கை
வளம்
வாய்ந்த அகன்ற பல ஊர்களைக் கொண்ட நாட்டிற்குத்
தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
இடி முழக்கத்தைப் போல்
ஓசை உண்டாக்கும் முரசை
உடையவன்; தவறாத வஞ்சினம் கூறிப் பகைவருடைய
வேலேந்திய கூட்டத்தைப் போரில்
அழிப்பவன். இவன்
பலரை முதுகு காட்டி ஓடச் செய்த போர்க்களத்தில்,
பிணங்கள் நிறைந்திருக்கும். தோற்ற வேந்தர் திறையாகச்
செலுத்திய யானைகளோடு, நெல்லை
அளக்கும் மரக்கால்
அளந்து அளந்து உறை கழலுமாறு எல்லார்க்கும் நெல்லையும்
அளந்து பரிசிலாகக் கொடுப்பவன் அவ்வாழியாதன் என்று
அறிந்தோர் கூறுவர்.
அவனிடம் சென்று பரிசில் பெற்று
மகிழ்வாயாக''.
இவ்வாறு பாணனைப் பார்த்துப் பாடுகிறார்
கபிலர். இது
பாணாற்றுப்படை என்னும் துறையில்
அமையாது. ஏனெனில்
இங்கு வாழியாதனிடம்
செல்வது என்று பாணன் தானாகவே
முடிவு செய்து வந்துகொண்டிருக்கிறான்.
பாட்டின் துறை முதலியன
பாட்டின் துறை
செந்துறைப் பாடாண் பாட்டு. விளக்கம் இரண்டாம்
பாட்டின் உரையிற் காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின்
பெயர் புதல்சூழ் பறவை.
சேரனின் சின்னமான பனையின்
குருத்தில் வெற்றியின்
சின்னமாகிய வாகைப்பூச் சேர்ந்திருப்பதைப் போல் முல்லைப்
புதரில் மொய்க்கும் வண்டுகள்
இருக்கின்றன என்ற அழகிய
உவமைத் தொடராக அமைந்துள்ளதால் இது
இப்பாடலின்
பெயராக ஆயிற்று.
தன் மதிப்பீடு : வினாக்கள்
- I
|
1.
|
உன்னத்துப்
பகைவன் என்பதை விளக்குக.
|
|
2.
|
வரைபோல்
இஞ்சி கூறும் செல்வக் கடுங்கோவின் சிறப்பை எடுத்துரைக்க.
|
|
3.
|
அருவியாம்பல்
பாட்டில் கபிலர் வாழியாதனை
வாழ்த்தும் மொழிகளை வரைக.
|
|
4.
|
பாட்டு,
உரைசால் வேள்வி எனப்பெயர்
பெறுவதற்குரிய காரணத்தை விளக்குக. |
|
5.
|
நாள்மகிழ்
இருக்கையில் சேரன் தேவி
எவ்வாறு குறிக்கப் பெறுகின்றாள்? |
|
6.
|
‘புதல்
சூழ் பறவை’ எனப் பாடல் பெயர் பெறக் காரணம்
யாது? |
|
|