1.6 போர்க்களத்து ஆடல்கள், கொண்டாடல்கள்

வீரர்கள் வெற்றிக் களிப்பால் ஆடும் பலவித ஆடல் இயல்புகளைப் போர்த்திணைகள் கூறுகின்றன. வெட்சிப் போரில் ஆநிரை கவர்வோரும், கரந்தைப் போரில் ஆநிரை மீட்போரும், உழிஞைப் போரில் மதிலைக் கைப்பற்றுவோரும் வெற்றி மகிழ்ச்சியில் ஆடியது குறித்து அறிந்திருப்பீர்கள். தும்பைப் போரிலும் அதுபோல வெற்றிக் களிப்புகள் கூறப்படுகின்றன.

தும்பைப் போரிலே வென்ற மன்னனது படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றி கொண்டாடப்படுகிறது. இதை முன்தேர்க் குரவை, பின்தேர்க்குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை முதலான துறைகள் சுட்டுகின்றன.

1.6.1 முன்தேர்க் குரவை

தேரின் முன்னே ஆடுதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,

எழுஉறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர்
முழுவலி வயவர் முன்ஆ டின்று            - (கொளு-17)

‘கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல்’ என்பது இதன் பொருள்.

வெண்பா,

ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கு - நோனாக்
கழுமணிப் பைம்பூண் கழல்வேந்தன் ஊரும்
குழுமணித் திண்தேர்க் கொடி.

என்று காட்டுகிறது ‘வீரர்கள் தேரின் முன்னே ஆட, மின்னல் ஆடுவது போன்று தேரின் கொடி ஆடும்’ என்பது இதன் பொருள். இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.

1.6.2 பின்தேர்க் குரவை

பின்தேர்க் குரவை என்பது தேரின் பின் குரவைக் கூத்தாடுதல். கொளு,

கருங்கழல் மறவரொடு வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின்ஆ டின்று.          - (கொளு-18)

என விளக்குகிறது. ‘கழல் அணிந்த வீரரொடு வளையலணிந்த விறலியர் பெருந்தகையான அரசனது தேரின் பின் ஆடியது’ என்பது பொருள்.

வெண்பா, பெரும்படையைக் கொண்ட அரசனின் தேர் யாழ்வல்ல பாணர் கூட்டம் வெற்றி வீரர்களுடன் இசையுடன் ஆடி வரும் என விளக்குகிறது.

1.6.3 பேய்க் குரவை

பேய்கள் குரவை ஆடுதல் என்பது இதன் பொருள். வெண்பா மாலையில் தெய்வம் பற்றியும் பேய் பற்றியும் குறிப்புகள் உள்ளன. கொற்றவை, வள்ளி, திருமால், சிவன், முருகன், நான்முகன் முதலான தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. வெட்சி, வஞ்சி, உழிஞை, பாடாண் ஆகிய திணைகளில் இவை காணப்படுகின்றன. பேய்கள் பற்றிய செய்திகளைப் பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்டகாஞ்சி, பேய்க்குரவை, களவேள்வி, முன்தேர்க்குரவை (வாகை) முதலான துறைகள் கூறுகின்றன. பேய்கள் ஊன் உணவுக்காகக் கூடிச் செயல்படுவதைக் கலிங்கத்துப் பரணியிலும் அறியலாம்.

தும்பைத் திணையில் பேய்க்குரவைத் துறையில் இக்குறிப்பு காணப்படுகிறது. பேய்கள் குரவை ஆடுதலைக் கூறியது பேய்க்குரவை.

மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப்
பின்னும் முன்னும் பேய்ஆ டின்று.           - (கொளு-19)

அரசன் செலுத்தும் ஒலிக்கும் மணியையுடைய தேரின் முன்னும் பின்னும் பேய்கள் ஆடுதல். கடல் போன்ற பெரும்படையைக் கொண்ட அரசனின் பெரிய தேரின் சிறப்பை வாழ்த்திப் பேய்கள் தேரின் முன்னும் பின்னும் நிழல்கள் ஆடுவதுபோல ஆடும் என வெண்பா விளக்குகிறது. பேய்கள் ‘நிழல் போல் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பது அது குறித்த நம்பிக்கையின் தன்மையைக் காட்டுகிறது. வெண்பாமாலை வாகைத் திணையிலும் இதே பெயரில் துறை உண்டு. இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.

1.6.4 களிற்றுடன் நிலை

களிறு இறந்து விழ அதனுடன் வீரனும் இறத்தல் களிற்றுடன் நிலை எனப்படுகிறது.

ஒளிற்றுஎஃகம் படவீழ்ந்த
களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று.            - (கொளு-20)

ஒளிமிக்க வேல் பாய வீழ்ந்த யானையின் கீழ்ப்பட்டு வீரன் இறத்தல். வெண்பா இதனை உவமையாக விளக்குகிறது.

இறுவரை வீழ இயக்கற்று அவிந்த
தறுகண் தகைஅரிமாப் போன்றான் - சிறுகண்
பெருங்கைக் களிறுஎறிந்து பின்அதன்கீழ்ப் பட்ட
கருங்கழல் செவ்வே லவன்.

வீரக்கழலையும் வேலையும் உடைய வீரன், பெருமலை வீழ, வேறு வழியின்றி அதன் கீழ் சிக்கி இறந்த சிங்கம் போன்று சிறிய கண்ணையும் பெரிய துதிக்கையையும் உடைய யானையை வலோல் எறிந்து அது வீழ அதன் கீழ்ப்பட்டு இறந்தான்.

இத்துறை தொல்காப்பியத்தில் களிறெதிர்ந்தோர் பாடு (பெருமை) என உள்ளது. போர் முடிந்த பின்பு நிகழும் மகிழ்ச்சி ஆரவாரங்களுடைய இத்துறை இருப்பது பொருந்துவதா என்பது சிந்தித்தற்குரியது. வீரனின் பெருமையைச் சொல்லிப் பெருமிதப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

1.6.5 ஒள்வாள் அமலை

வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலை எனப்படுகிறது.

வலிகெழுதோள் வாய்வயவர்
ஒலிகழலான் உடன்ஆடின்று            - (கொளு-21)

வீரர்கள் ஆடும் நிலையைக் குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூரிய வாள்களைச் சுழற்றிக்கொண்டு வென்ற மன்னன் வீரர்கள் அவனுடன் கூடி ஆடினர் என்று வெண்பா கூறுகிறது. போர்க்களத்தில் வாள்களை உயர்த்தி ஆட்டும் தோற்றம் ‘வாளை பிறழும் கயங்கடுப்ப’ இருப்பதாக வெண்பா குறிப்பிடுவது நயம். தொல்காப்பியர் இதனை வாளோர் ஆடும் அமலை என்கிறார். களிற்றோடு பட்ட பகை வேந்தனைச் சுற்றி அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை என்பது தொல்காப்பியர் கருத்து.