பின்வருநிலை அணி மூவகையாகப் பாடப்படும். ஒரே சொல் பல இடங்களில்
வெவ்வேறு பொருளில் வருமாறும், வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளில் வருமாறும்,
ஒரே சொல் பல இடங்களிலும் ஒரே பொருளில் வருமாறும் பின்வருநிலை அணி பாடப்படும்.
முன்னவிலக்கு அணி ஒரு கருத்தை அல்லது செயலைக் குறிப்பாக விலக்கும் வகையில்
பாடப்படும் அணி ஆகும். கவிஞர்கள் தாம் கூறும் பொருளை வலியுறுத்திக் காட்ட
அதனினும் வலிமை வாய்ந்த உலகு அறிந்த பொருளைக் கூறுவது வேற்றுப்பொருள்
வைப்பு அணி. ஒப்புடை இரு பொருட்கள் தம்முள் வேற்றுமை தோன்றச் சொல்வது
வேற்றுமை அணி. ஒரு பொருளின் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும்
அறியும் காரணங்களை ஒழித்து, அவ்வினையானது வேறு ஒரு காரணமாகவோ, அல்லது
இயல்பாகவோ நிகழ்ந்ததாகப் பாடுவது விபாவனை அணி. இவையாவும் இப்பாடத்தின்
வாயிலாக அறியப்பட்டன. மேலும் பின்வருநிலை அணி, வேற்றுமை அணி ஆகிய அணிகள்
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகப் பயின்று வருவதை இப்பாடத்தின் வாயிலாக
அறிந்து கொள்ள முடிந்தது.
|