6.7 மதில்களும் திருச் சுற்றுகளும்

    நாடாளும் மன்னர்களின் அரண்மனைக்கும் கோட்டைக்கும் மதில்கள் பாதுகாப்பாக அமைவதைப் போலக் கோயில்களுக்கும் மதில்கள் பாதுகாப்பிற்காகவும் அழகுக்காகவும் தேவைப்பட்டன. அம்மதில்களிலும், ஆலயங்களில் உள்ள திருச்சுற்றுகளிலும் கட்டடக் கலை நுட்பங்களைக் கண்டு மகிழலாம்.

6.7.1 மதில்கள்

    கட்டடக் கலை நோக்கில் சிறு கோயிலாயினும் பெருங்கோயிலாயினும் வலிமையும் உயரமும் வாய்ந்த மதில்கள், அந்தந்தக்     கோயிலின் வசதிக்கேற்பக் கட்டடப்பட்டன. மேலும், ஆலய மதில்கள் என இனங்கண்டு கொள்ளும் வகையில், மதில்மேலமர்ந்த சின்னங்களாக, அமர்ந்த நந்திகள், பூதங்கள், சிங்கங்கள், பெருச்சாளிகள், மயில்கள், புலிகள் முதலியவற்றை அந்தந்தக் கருவறைச் சுவாமிக்கேற்பச் சுதை வடிவில்     வைப்பர்.     வைணவத்     திருக்கோயிலாயின் கருடாழ்வாரும் திருநாமமும் வடிவமைத்து மதில்மேல் வைத்திடுவர்.

    சில     பெருங்கோயில்களில்     திருமதில்களைப் பெயரிட்டழைப்பதும் உண்டு. சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் திருகாலிங்கராயன்     மதில் உண்டு; திருவானைக்காவில் திருநீறிட்டான் மதில் உண்டு.

    திடமும் உயரமும் நல்ல வடிவமும் கொண்ட மதில்கள் பல கோயில்களில் காணப்படினும், திருவரங்கத்திலுள்ள வெளிவீதிச் சுற்றுமதில் போல் காணமுடியாது. அம்மதிலின் நீளம் 3072 அடி, உயரம் 20 அடி 8 அங்கலம், மதிற்சுவரின் பருமன் 6 அடி.

    பெரும்பாலும் ஆலய மதில்கள் செங்கல்லாலும் சுண்ணாம்பாலுமே கட்டப்பட்டுள்ளன ; அண்மைக் காலமாகச் சிமெண்ட் கலவையால் கட்டப் படுகின்றன. மதில்கள் அத்திவாரமும் அடிப்பாகமும் பருத்து, மேலே செல்லச் செல்லக் குவித்துத், தலைக்கட்டினை நன்கு அமைத்துக் கட்டப்படும்.

மன்னார்குடி இராசகோபால் சுவாமிகோயில் மதில் அழகு எனக் கூறுவர் ; திருவிரிஞ்சையும் மதிலழகு கொண்டதே.

    மதிற்சுவர் அமைப்பதிலும் சில வியப்பிற்குரிய உத்திகள் கையாளப்படுகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழைத்திருக்காட்டுப் பள்ளியில் மேற்கே பார்த்த சன்னிதியுடன் ஆரணியேசுவரர் திருக்கோயில் உள்ளது; அந்தச் சிறிய கோயில் தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு     மேற்கில்     கடலொலி போன்ற ஓசை மதிற்சுவரிலிருந்து கேட்கப்படுகின்றது ; அத்தகைய கட்டடக் கலை உத்தி எப்படி சிற்பியர் அமைத்தனர் என்பது புதிராகவே உள்ளது.

    விசயநகர - நாயக்க மன்னர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் கட்டிய மதில்களாகத் தஞ்சாவூர் பெரிய கோயில், மன்னார்குடி இராசகோபால சுவாமி கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், அருளாளப் பெருமாள் கோயில், திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, மதுரை, திருவரங்கம் முதலிய இடங்களில் காணலாம்.

    பெரிய மதில்கள் எடுத்த நிலையில் மூவகைகள் உண்டு.

(1) முழுவதும் கருங்கற்களைக் கொண்டு எடுக்கப்பட்டவை.

(2) செம்புறாம் பாறைக் கற்களைக் கொண்டும் (Laterite), செங்கற்களைக் கொண்டும் எடுக்கப்பட்டவை (தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வெளியேயும் அகழிக்கு உள்ளேயும் காணலாம்.)

(3) செங்கற்களை மட்டுமே கொண்டு எடுக்கப் பெற்றவை.

6.7.2 திருச்சுற்றுகள் (பிராகாரங்கள்)

    ஆகமங்களில்     கட்டடக்     கலை     நோக்கில் திருச்சுற்றாலைகளை ஆவரணங்கள் எனக் குறித்திடுவர். மூலவரின் சிறப்பிற்கேற்பவும் பெருங்கோயிலமைப்பிற்கேற்பவும் பிராகாரங்கள் எண்ணிக்கை அமையும்.

    பிராகாரங்களில் திருச்சுற்று மாளிகை அமைக்குங்கால் வலுவுடைய     நிலையில்     மதிற்சுவர்கள்     அமைய வேண்டுமென்பதற்காக     வச்சிரக்     காரைகளைப் பயன்படுத்தியுள்ளனர்; அன்றியும், மண்ணைப் பனஞ்சாறு கூட்டி அரைத்துக் கட்டினார்கள் என்பதும், கட்டுங்காலத்துக் கேழ்வரகுக் கஞ்சியை (இராகிக் கூழை) இணைப்புகளில் ஊற்றுவதும், ஈயம், செம்பு முதலிய உலோகத் தகடுகளையும் கம்பிகளையும் பொருத்துவதும் அக்காலத்தொழில் நுட்ப உத்திகளாக இருந்து வந்துள்ளமை தெரியவருகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
ஆலயத்தின் ஆதார அங்கங்கள் யாவை?
2.
கோயில் உறுப்புகளின் பஞ்சபூதத்தத்துவத்தை விளக்குக.
3.
கேரளாந்தகன் வாயில் எங்கு உள்ளது? விளக்கியெழுதுக.
4.
‘சீர்காழியில் குரு லிங்க சங்கம அமைப்பில் சிவாலயக் கருவறைகள் உள்ளன’ - விளக்குக.
5.
திருக்கழுக்குன்றத்தில் இடியபிடேகம் நடைபெறும் விதத்தைக் கூறுக.
6.
கார்த்திகை முழுநிலவில் அம்பாள் மீது சந்திர ஒளிக்கற்றை விழுமாறு அமைந்த கோயில் எங்கே உள்ளது?
7.
தாராசுரம் ஐராவதீசவரர் ஆலயத்துப் பலிபீட மண்டபம் பற்றி எழுதுக.