4.3 மாரிமுத்தாபிள்ளை அறிமுகம்

    கருநாடக இசை அரங்கிலும் பரத நாட்டிய அரங்கிலும் மிகப் பிரபலமான ஒரு கீர்த்தனையின் பல்லவியை இப்பொழுது கேட்போம்.

இராகம் : யதுகுலகாம்போதி தாளம் : ஆதி

பல்லவி

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - என்னைக்
கைதூக்கியாள் தெய்வமே

    பக்திச் சுவை நிறைந்த இக்கீர்த்தனையை இயற்றியவர் மாரிமுத்தாபிள்ளை. இவர் தில்லை நடராசர் மீது பல கீர்த்தனைகள் இயற்றினார். தமிழில் கீர்த்தனை பாடிய முதல் மூவரில் மாரிமுத்தாபிள்ளையும் அருணாசலக் கவிராயரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். மாரிமுத்தாபிள்ளையின் கீர்த்தனைகள் பற்றித் தெரிவதற்கு முன்பு அவரது வாழ்க்கைப் பின்னணியைப் பார்க்கலாம்.

4.3.1 வாழ்க்கைப் பின்னணி

    மாரிமுத்தாபிள்ளை கி.பி. 1712 ஆம் ஆண்டு தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தார். சைவ வளோளர் மரபைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் தெய்வப் பெருமாள் பிள்ளை. மாரிமுத்தாபிள்ளை சிறுவயதில் தமிழ்க் கல்வியும் சமயக் கல்வியும் முறையாகப் பெற்றார். சமய தீட்சையும் பெற்று விளங்கினார். இசையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் கொண்டிருந்தார். இப் புலமைகள் அனைத்தும் ஒருங்கே பெற்றிருந்தமையால் இயல்பாகவே இறைவனைப் போற்றிப் பல கீர்த்தனைகள் இயற்றினார்.

    மாரிமுத்தாபிள்ளையின் மூத்த மகன் ஒரு தடவை மதிமயக்கத்தால் தன் நினைவிழந்தான். இதைக் கண்டு மாரிமுத்தாபிள்ளை மனம் பெரிதும் வருந்தினார். "புலியூர் வெண்பா" என்னும் நூலைப் பாடினார்.

அதுமுதல் மாரிமுத்தாபிள்ளை இறைவனைப் போற்றிப் பல நூல்களும் பல கீர்த்தனைகளும் இயற்றினார். தமது 75 வது வயதில் கி.பி.1787ஆம் ஆண்டு காலமானார்.

4.3.2 படைப்புகள்

    இயற்புலமையும் இசை ஞானமும் இறை அன்பும் பெற்றிருந்த மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

4.3.3 கீர்த்தனைகள்

    மாரிமுத்தாபிள்ளை பாடிய பல கீர்த்தனைகளில் இன்று கிடைப்பவை 25 ஆகும். தில்லை நடராசப் பெருமானை முன்னிலைப்படுத்திப்பாடும் இவரது கீர்த்தனைகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. இறைவனை இகழ்வது போல் புகழ்வார், நிந்திப்பது போல் துதிப்பார். ஆதலால் இவரது கீர்த்தனைகள் "நிந்தாதுதி கீர்த்தனைகள்" என்றும் " வஞ்சப் புகழ்ச்சிக் கீர்த்தனைகள்" என்றும் சொல்லப்படும். இன்னும் சொல்வதனால் "ஏசல் கீர்த்தனைகள்" என்றும் கூறப்படும்.

    இதை விளங்கிக் கொள்ள மாரிமுத்தா பிள்ளையின் ஒரு கீர்த்தனையை எடுத்துக் கொள்ளலாம். பாடலைப் பார்ப்பதற்கு முன் அதன் பொருளைத் தெரிந்து கொள்வோம்.

    நடராசப்பெருமான் ஆடுகிறான். ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கி ஆடுகிறான். உண்மையில் இந்த ஆட்டத்தின் தத்துவம் என்ன ? இது அண்ட சராசர இயக்கத்தை உணர்த்தும் தத்துவத் தோற்றம். ஆட்டம் நின்று விட்டால் அண்டமும் பிண்டமும் அகில சராசரமும் இயங்காது நின்று விடும். எனவே எல்லாம் தொடர்ந்து இயங்கக் கருணை கொண்ட இறைவன் எந்நேரமும் காலைத் தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறான். இந்த உயர்ந்த தத்துவத்தை விளக்கும் இறைவன் கருணையை வியந்து வியந்து புகழ விரும்பினார் மாரிமுத்தாபிள்ளை, அதை இகழ்வது போலப் பாடிப் பெருமைப் படுத்தினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பல்லவி

ஏன் எப்பொழுதும் ஒரு காலைத் தூக்கிநொண்டிக் கொண்டிருக்கிறீர்?

அநுபல்லவி

நீர் பொன்னால் வேய்ந்த பொன்னம்பலத்தில் குடியிருக்கிறீர், இருந்தும் ஏன் தூக்கிய காலை ஊன்றாமல் இன்னும் நிற்கிறீர்?

சரணம்

இறைவனின் தூக்கிய காலுக்குக் காரணம் கேட்பது போல், இறைவன் அடியவர்க்கு இரங்கிய கருணைச் செயல்களை ஒவ்வொன்றாகக் கேட்கிறார். உம்முடைய கால் நொண்டிக் கொண்டிருப்பதற்கு காரணம்.

அ. தக்கன் வீட்டிற்கு நடந்ததாலோ? ஆ. எமனை உதைத்துச் சுளுக்கு ஏறியதாலோ? என்றவாறு சிவப்பெருமை கூறும் புராணச் செய்திகளை ஒவ்வொன்றாகக் கூறி இறைவனை நிந்திப்பது போல் புகழ்ந்து பாடுகிறார்.இப்பொழுது இந்தக் கீர்த்தனையைப் பார்ப்போமா?

 

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.
எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

  • புகழ் பெற்றவை

    தில்லை நடராசப் பெருமான் மீது நிந்தாதுதியாகப் பாடிய கீர்த்தனைகள் மாரிமுத்தாபிள்ளையைத் தனித்து அடையாளங்காட்டும். இவரது கீர்த்தனைகள் சில இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் பாடப்பெறுகின்றன. அவற்றின் விவரங்களை இங்கே காணலாம்.

  பாடல் தொடக்கம் இராகம் தாளம்
1. காலைத்தூக்கி நின்று யதுகுலகாம்போதி ஆதி
2. எந்நேரமும் தோடி ஆதி
3. ஒருகால் சிவசிதம்பரம் ஆரபி ஆதி
4. ஏதுக்கு இத்தனை சுருட்டி ஆதி
5. என்ன பிழைப்பு சௌராட்டிரம் ஆதி

1. முத்துத் தாண்டவரின் இளமைக் காலப் பெயர் என்ன ?
2. இவர் பிறந்த ஊரின் பெயரை எழுதுக.
3. முத்துத்தாண்டவர் குலத்தொழிலைக் கூறுக.
4. இளமைக் காலத்தில் முத்துத்தாண்டவர் எதனால் துன்பமுற்றார் ?
5.

முத்துத்தாண்டவர் முதன் முதலாகப் பாடிய கீர்த்தனை எந்த இராகத்திலானது ?

6. முத்துத்தாண்டவர் பாடல்கள் இன்று எத்தனை கிடைக்கின்றன ?
7. தாண்டவக் கீர்த்தனைக்கு மற்றுமொரு பெயர் தருக.
8.

முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள் எந்தத் தெய்வத்தைப்பற்றி அமைந்தவை?

9.

யாருடைய கதையை அருணாசலக் கவிராயர் கீர்த்தனைகளால் இசை நாடகமாக அமைத்தார்?

10. நிந்தாதுதி கீர்த்தனை என்றால் என்ன?