5.3 திருப்புகழ்

    அருணகிரியார் படைத்த திருப்புகழ்ப் பாடல்கள் சந்த இலக்கியமாக உள்ளன. சம்பந்தரின் தேவாரப் பாடல்களே அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்களின் முன்னோடியாக அமைந்துள்ளன. இதனை அருணகிரியார் பல இடங்களில் போற்றுகிறார்.
சந்தமெல்லாம் அரச்சு சாத்தவல்ல மறைஞான
        சம்பந்தன் - கடவூர் திருப்புகழ்

சந்தமிகு ஞானமுணர் பந்தன் -பழுவூர்திருப்புகழ்.

திருப்புகழ்ப் பாடல்கள் 24 வகையான சந்தங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்று திருப்புகழ்ப் பாடல்களில் சந்தக் கூறுகள் என்ற பொருளில் ஆய்வு செய்த முனைவர் இ. அங்கயற்கண்ணி குறிப்பிட்டுள்ளார். ப. 48) இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்.

    1) மூன்று அலகுகள் கொண்டவை (திசுரம்)
    2) நான்கு அலகுகள் கொண்டவை (சதுசுரம்)
    3) ஐந்து அலகுகள் கொண்டவை (கண்டம்)

இந்நிலையில் அமையும் சந்த அமைப்புகளின் அடிப்படையில் அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூல் எழுதிய தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை. தமக்குக் கிடைத்த திருப்புகழ்ப் பாடல்கள் 1307-இல் 1008 சந்தங்கள் உள்ளன என்கிறார். (ப.28)

5.3.1 ஐந்து ஜாதி தாள அடிப்படையில் சந்தங்கள்

    திருப்புகழ்ப் பாடல்கள் தாள இலக்கியமாகத் திகழ்கின்றன. இவற்றில் மும்மை (திசுரம்) நான்மை (சதுஸ்ரம்) ஐந்து (கண்டம்) ஏழு (மிசுரம்) ஒன்பது (சங்கீர்ணம்) என்ற அளவுடைய அலகுகள் பெற்ற ஐந்து
சாதிகளிலும் உள்ள திருப்புகழ்ப் பாடல்களைக் காண்போம்.

  • மும்மை அலகு

    மும்மை அலகுடைய ஒரு பாடலின் சந்த அமைதியைக் காண்போம்.
தனன தனன தனன தனன
தனன தனன தனதானா
தமரு மமரு மனையு மினிய மனமு மரசும் அயலாகத்

    இதில் வரும் தனன தனன என்னும் சந்தம் தகிட, தகிட என்ற மும்மை அளவுடைய சந்தமாகும். தனதானா என்று தொங்கல் முடிந்துள்ளது. (அயலாக) என்பது தொங்கல்

  • நான்கலகு

    நான்கலகு உடையதனை சதுசுரம் என்பர்
தனதன தனதன தனதான
தனதன தனதன தனதான
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே

  • ஐந்து அலகு

    ஐந்தலகுடையதனைக் கண்ட சாதி என்பர்
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதன தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி

இதில் வரும் தனாதன என்பதில் குறில் 3 நெடில் 1 நெடில் மாத்திரை 2 ஆக ஐந்து அலகுகள் கொண்டதாக உள்ளது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
சந்தம் - சொல் விளக்கம் தருக.
2.
தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
3. தமிழ்ச் சந்தங்கள் எழுத்தளவு கொண்டவை என்பதனை விளக்குக.
4. கட்டளை என்பது எதனைக் குறிக்கும்?
5. திருப்புகழ்ப் பாடல்கள் எத்தனை வகையான சந்தங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன?
6.
ஐந்தலகு கொண்ட சந்தத்தை இசை நூலார் எப்பெயரால் அழைப்பர்?
7.
யாழ் முரி - பண்ணா? பதிகமா?